- முனைவர் என். பத்ரி
வந்தனாவுக்கு நாளை முதல் இந்த பேருந்தில் பயணிக்க வேண்டியத் தேவை இல்லை. அதற்கு முன்னால் நடத்துனரிடம் இன்று அவள் மனதில் இருந்த புதிருக்கான விடையை கண்டுபிடிக்க வேண்டும் என்பதில் முனைப்பு காட்டினாள். இருந்தாலும் நடத்துனர் கூட்ட நெரிசலில் சிக்கிக் கொண்டு இவள் பேசுவதற்கு வாய்ப்பினையே அளிக்கவில்லை.
நாளை அவளைப் பெண் பார்க்க வருகிறார்கள். அனேகமாக கல்யாண நிச்சயம் செய்து விடுவார்கள். அதற்குப் பிறகு வேலையை விட்டு பெற்றோர்கள் நிறுத்தி விடுவார்கள். கடைசி நாள் பயணம். சற்றுக் கண் அயர்ந்தாள். அன்றாட நினைவுகளை அசைப் போட்டாள்.
அன்றும் பேருந்து நிறுத்தத்தில் வந்து நின்றது அந்த நகரப் பேருந்து. கிராமத்துப் பெண் வந்தனா ஏறிக் கொண்டாள். வழக்கம்போல் டிக்கெட் வாங்க பைசாவை கண்டக்டரிடம் கொடுத்தாள்.அவரும் வழக்கம் போல் பின்னால் நீல நிற சட்டை போட்டவர் உங்களுக்காக வாங்கிவிட்டார் என்று சொல்லி முடித்தார். ‘யார்?’ என்று கேட்பதற்குள் கூட்டத்தில் முந்திக் கொண்டு ஓட்டுனர் பக்கத்தில் இருந்தக் கூட்டத்தில் மறைந்து மாயமானார்.
இந்தக் கதை கடந்த ஒரு மாதமாக நடைபெறுகிறது. இவளுடன் அந்த கிராம பேருந்தில் வரும் யாரும் இவளுக்காக டிக்கெட் வாங்குவது இல்லை. இதை அவள் உறுதிப்படுத்திக் கொண்டாள்.

அவள் வசிக்கும் கிராமத்திலிருந்து நகரத்திற்கு செல்லும் ஒரே தனியார்பேருந்து அதுதான். காலை நகரத்துக்குப் போகும் அந்தப் பேருந்து மாலைதான் திரும்பும். அந்தக் கிராமத்திலிருந்து நகருக்கு வேலைக்கு செல்வோருக்கு கைக் கொடுக்கும் பேருந்து.இந்த பேருந்து பழுதாகி விட்டால் மாற்றுப் பேருந்து தயாராக உதவிக்கு வந்து விடும்.
தினமும் நல்ல கலெக்ஷன்தான். அந்த பேருந்தின் கண்டக்டர் ஓர் இளைஞன்.அவனுக்கு ஒர் 25 வயது இருக்கும். வயதுக்கும்,பாலினத்தும் ஏற்ப முறையில் உறவு கொண்டாடி பயணிகளை அலுப்புத் தெரியாமல் பயணிக்க வைப்பவன். நேரத்துக்கு ஏற்ப திரைப்படப் பாடல்களோ,பக்திப் பாடல்களோ பேருந்தில் இசைத்துக் கொண்டே இருக்கும். இதில் மயங்கி தூங்கி விடும் பயணிகள்கூட அதிகம்தான். அவர்களை சரியான நிறுத்தத்தில் இறக்கிவிட்டுச் செல்வான்.மொத்ததில் எல்லா பயணிகளின் உள்ளம் கவர்ந்த கள்வன் அவன்.
வந்தனா அந்தப் பேருத்தில்தான் தினமும் பயணிக்கிறாள் .வேறு வழி.ஆனால்,விடை தெரியாத கேள்வி இதுதான்.எப்பொழுது கேட்டாலும், ’பின்னால் இருப்பவர் வாங்கிவிட்டார்,முன்னால் ஒரு பயணி வாங்கி விட்டார்’ என்று சொல்லியே டிக்கெட் வாங்கியவரை அடையாளம் காட்டாமல் புதிர் போட்டுக் கொண்டே வருகிறார் அந்த கண்டக்டர்.
வந்தனாவுக்கு,’ தனக்கு தினமும் யார் டிக்கெட் வாங்குகிறார்?’ என்று தெரிந்து கொள்ள ஆவல். இருந்தாலும் பேருந்தில் இருக்கும் கூட்ட நெரிசலால் இவளால் கண்டக்டரை நெருங்கிக் கேட்கவும் முடியவில்லை. அவன் இதுவரை பதில் சொல்லவும் இல்லை. ஆனால் அவள் காசு மிச்சம் என்று இருக்கலாம். ஆனால்,அவளுடைய மனசாட்சி அவளை பாடாய் படுத்திக் கொண்டு வந்தது.
இது புரியாத புதிராக தொடர்ந்து இருந்து வந்தது.தினமும் வேலைக்குச் செல்வதும் களைப்பாக திரும்புவதுமாக இருந்த இவளுக்கு பரவாயில்லை. ’யாரோ ஒருவர் வாங்கிவிட்டு போகட்டும்’ என்று ஒரு நிலையில் விட்டு விட்டாள்.
அன்று ஞாயிற்றுக்கிழமை. காலை மணி பத்து இருக்கும். ஒரு காரில் வந்தனாவைப் பெண் பார்க்க ஒரு வரன் வந்து இறங்கினான். அது வேறு யாருமில்லை அந்த கண்டக்டர்தான். இவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. சம்பிரதாயமாக நடக்க வேண்டிய விஷயங்கள் எல்லாம் நடந்தன.
வழக்கம் போல் பையனும் பெண்ணும் தனியாக பேசினார்கள். ஒரு மணிபர்சில் அவளுக்காக இதுவரை வாங்கிய டிக்கெட்டை எல்லாம் அவளிடம் கொடுத்தான். நான் என் மனைவிக்கு நான் கொடுக்கும்,’ காதல் ரோஜா’ இதுதான் என்றான். வந்தனாவின் கண்கள் விரிந்தன.அவனை ஆச்சரியத்தில் பார்த்தன. புதிர் அவிழ்ந்து விடை கிடைத்தது.
’சரி, சரி’ நாளையிலிருந்து நீ வேலையை விட்டு நின்று விடாதே. திருமணம் ஆகும் வரையாவது வேலைக்குப் போக பேருந்தில் வா. அதற்கு முன்னால் என்னை திருமணம் செய்து கொள்ள உனக்கு விருப்பமா? என்று மட்டும் சொல்லிவிடு’ என்றான்.
அதற்கு வந்தனா,’ச்சீ…, போங்க. நான் என் வேலையை விடமாட்டேன். நீங்க மட்டும் வேற ரூட்ல போயிடாதீங்க’ என்றாள். சிரித்துக் கொண்டே வெளியே வந்த அவர்களைப் பார்த்த அவர்களின் பெற்றோர்களின் முகத்திலும் மகிழ்ச்சி பரவியது.
மறுநாள் காலை வழக்கம் போல் பேருந்து பேருந்தில் பயணித்த வந்தனாவிடம், ’டிக்கெட், டிக்கெட்’ என்று கலாய்த்து கொண்டே வந்தான் கண்டக்டர் கண்ணன். வந்தனா சிரித்துக் கொண்டே அவளுக்கு விருப்பமான திரைப்படப் பாட்டை ஆனந்தமாக இரசித்துக் கொண்டே வெளியே பார்த்துக் கொண்டிருந்தாள்.
(டாக்டர். என். பத்ரி சுமார் 50 ஆண்டுகள் கல்வித்துறையில் இடைநிலை ஆசிரியராகத் தொடங்கி, பள்ளித் தலைமை ஆசிரியர், கல்வியியல் கல்லூரி முதல்வர் மற்றும் ஆராய்ச்சி இயக்குனர் எனப் பல தளங்களில் பணியாற்றி, தற்போது பொறியியல் கல்லூரியின் கௌரவ ஆங்கிலப் பேராசிரியராக விளங்குபவர். கல்வியியல் மற்றும் ஆங்கிலத்தில் முனைவர் பட்டம், 4 முதுகலை பட்டங்கள் பெற்ற இவர், 1997-98-இல் தேசிய NCERT விருதைப் பெற்றவர். அகில இந்திய வானொலிக் கல்வி ஆலோசனைக் குழு உறுப்பினராகப் பணியாற்றி, கிராமப்புற மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு வானொலி மற்றும் தொலைக்காட்சிகள் வழியாக வழிகாட்டியுள்ளார். 'மை இங்கிலீஷ் கற்றல் அகாடமி' (MELA) நிறுவனச் செயலாளரான இவர், அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்க உறுப்பினராகவும், புதுவை அரசின் சிறந்த கவிஞர் விருதைப் பெற்றவராகவும் திகழ்கிறார். 800-க்கும் மேற்பட்ட கட்டுரைகள், 100 சிறுகதைகள் எழுதியுள்ளார். முதியோர் மற்றும் இளைஞர் நலனை மையமாகக் கொண்டு 'முதுமை ஒரு வரம்', 'வாய்ப்புகள் வெற்றிகள் ஆகட்டும்' உட்பட பல நூல்களைப் படைத்துள்ளார்)
ஜெம் கிரானைட்ஸ் வீரமணி வழக்கில் லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் யார்? விசாரிக்க சிறப்பு குழு அமைப்பு!
"நிர்வாக அறிவு இருக்கிறதா?" – தவெக அரசை கடுமையாக விமர்சித்து மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
குற்றவாளிகள் ஒருவரையும் விடக்கூடாது: ஜெம் கிரானைட்ஸ் வீரமணி விவகாரத்தில் முதல்வர் அதிரடி உத்தரவு
ஜெம் கிரானைட் வீரமணி விவகாரம்: தவெக-திமுக இடையே முற்றும் மோதல்
ஆளுக்கு 8 ஓட்டு.. 9 மாத மழலை எடுத்துக் கொடுத்த சீட்டு.. கலகலப்பாக முடிந்த பள்ளித் தலைவர் தேர்தல்!
நடிகை அம்பிகா மீது சகோதரி ராதா பரபரப்பு புகார்: ரூ.46 கோடி மோசடி செய்ததாக போலீசில் புகார்
வங்கக்கடலில் தீவிரமடையும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை!
ஏகாந்தம்.. அழகிய முழு நிலவொளியில் ஆனந்த ராகம் பாடி!
Short Story: காணாமல் போன கண்ணன்
{{comments.comment}}