- வி.எமல்டா குயின் மேரி
இனம் புரியாத அந்தத் தவிப்பு. வகுப்பறையின் ஜன்னல் ஓரம் அமர்ந்திருக்கும் அவளைப் பார்க்கும்போது எனக்கு எப்போதும் ஒரு பிம்பம் தோன்றும். ஒரு அழகான ஓவியம், அதன் வண்ணங்கள் இன்னும் உலராமல் அப்படியே இருக்கின்றன. அழகிய முகம், அழகான கண்கள், சிரிக்கலாமா வேண்டாமா என யோசிக்கும் உதடுகள்... எதைப் பார்த்தாலும் ஏதோ ஒன்றை இழந்ததைப் போலவே யோசித்துக் கொண்டிருக்கும் அந்தப் பார்வை என்னை என்னவோ செய்யும்.
ஆறாம் வகுப்பில் இடையத்தான்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு அவள் முதன்முதலில் வந்தபோது, அவளிடம் இருந்தது வெறும் உடல் ஊனம் மட்டுமல்ல; "நண்பர்கள் நம்மை ஒதுக்கி விடுவார்களோ, ஆசிரியர்கள் நம்மை எதுவும் கூறி விடுவார்களோ" என்கிற பெரும் பதற்றம். அந்தச் சிறுமி பிரவீணாவின் பிஞ்சுக்கரங்களை மேரி டீச்சராகிய நான் பற்றிக்கொண்ட அன்று, என் இதயம் அவளுக்கு ஒரு வாக்குறுதி அளித்தது: "இனி நீ தனி ஆள் அல்ல."உனக்காக நான் இருக்கிறேன்.
அன்பே மொழியானது

"சைகை மொழியில் அவளிடம் பேசக்கூடாது" என்பது அவள் பெற்றோர்கள் இட்ட கட்டளை. அது ஒரு சுவர்போல எங்களுக்குள் நின்றாலும், நான் அன்பை ஏணியாக்கினேன். அவளிடம் அன்பு மட்டுமே சாத்தியமானது. அவளின் திறன்களை சிறிது சிறிதாக வெளிக்கொணர சிறு சிறு இலக்குகளை அவளுக்கு கொடுத்தேன். முயன்று கற்று, தோற்று, மீண்டும் வெற்றி பெற்றாள்.
இப்படிச் சென்று கொண்டிருந்த எங்களது பயணத்தில், அவளது பயமும் அச்சமும் அவளை விட்டுப் போய் பல நாட்கள் ஆகிவிட்டன.
தடகளப் போட்டியில் மாற்றுத்திறனாளிப் பிரிவில் அவள் மாவட்டத்தில் முதலிடம் பிடித்தபோது, அவள் ஓடியது மைதானத்தில் மட்டுமல்ல, என் கனவுகளிலும் தான். அவளின் ஆன்மாவில் ஊடுருவி இருப்பேனோ என்னவோ நான் என்ன சொன்னாலும் அவள் செய்வாள். அதன் பிறகு அவளே என்னிடம் வந்து தனது ஆசையைத் தெரிவித்தாள், "டீச்சர், இலக்கிய மன்றப் போட்டியில் நான் கலந்து கொள்ள வேண்டும்" என்று.

உடனே நான் அவளுக்கான பயிற்சியை கொடுக்க ஆரம்பித்து விட்டேன். பள்ளி அளவில், வட்டார அளவில், மாவட்ட அளவில் ஆங்கிலக் கட்டுரை எழுதும் போட்டியில் முதலிடம் பெற்றாள். நேற்று மாநில அளவில் நடைபெற்ற போட்டி... ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு நடுவே, சற்றும் சளைக்காமல் அவள் மிகச் சிறப்பாகத் தனது பங்களிப்பைச் செய்தபோது, அவள் ஒரு மாற்றுத்திறனாளி என்பதை அந்த உலகம் மறந்து போனது.
ஆனால், போட்டி முடிந்து திரும்பும்போது என் மனதிற்குள் ஒரு கேள்வி முள்ளாய் குத்தியது. "இலக்கிய மன்ற போட்டிகளில் ஏன் இத்தகையான மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு என்று போட்டிகள் இல்லை?" தடகளப் போட்டிகளில் இவர்களுக்கு என்று தனிப்பிரிவு இருக்கும்போது, இலக்கியப் போட்டிகளில் மட்டும் ஏன் இந்த இடைவெளி? இது இவர்களின் தன்னம்பிக்கையைச் சோதிப்பது போலல்லவா இருக்கிறது?
நாங்கள் இருவரும் ஊர் திரும்பும் பேருந்தில் அமர்ந்திருந்தோம். பிரவீணா ஜன்னல் வழியே வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.பிறகு என் தோள் மீது சாய்ந்து அவள் உறங்கிப்போனாள்...மேரி டீச்சராகிய என் மனதில் வருங்கால மாற்றங்கள் விரிந்தன. நான் அந்த அதிகாரிகளிடமும் சமூகத்திடமும் கேட்க நினைக்கும் வழிமுறைகள் இவைதான்:
* விளையாட்டுத் துறையைப் போலவே, கலை மற்றும் இலக்கியப் போட்டிகளிலும் 'மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்புப் பிரிவு' கட்டாயமாக்கப்பட வேண்டும்.
* இவர்களது எழுத்துத் திறனை வெறும் வேகத்தைக் கொண்டு அளவிடாமல், கருத்தின் ஆழம் மற்றும் அவர்களின் சவால்களைத் தாண்டி அவர்கள் வெளிப்படுத்தும் கற்பனைத் திறனுக்குக் கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
* கட்டுரை எழுதும் போட்டிகளில் இவர்களுக்கான பிரத்யேக வசதிகளையும், கூடுதல் நேரத்தையும் பயன்படுத்த முழு அனுமதி வழங்கப்பட வேண்டும்.
* மாநில அளவில் சாதனை படைக்கும் பிரவீணா போன்ற குழந்தைகளுக்கு, முறையான அங்கீகாரமும் ஊக்கத்தொகையும் வழங்கி அவர்களைச் சமூகத்தின் 'சிறப்புத் தூதர்களாக' அறிவிக்க வேண்டும்.

பிரவீணா மெல்ல என் தோளில் சாய்ந்து கொண்டே மெதுவாக கண் விழித்தாள். அவள் ஒரு மாற்றுத்திறனாளி அல்ல, அவள் ஒரு மாற்றத்தின் தொடக்கம். இலக்கிய மன்றப் போட்டிகளில் இன்று இருக்கும் இந்த இடைவெளி நாளை நிச்சயமாக ஒரு பாலமாக மாறும். அந்தப் பாலத்தில் பிரவீணா போன்ற ஆயிரக்கணக்கான குழந்தைகள் தங்கள் லட்சியச் சிறகுகளை விரிப்பார்கள்.
ஏனெனில், "முயன்றால் முடியாதது எதுவும் இல்லை" என்பது வெறும் வாசகம் அல்ல; பிரவீணா எனக்குக் கற்றுக்கொடுத்த வாழ்க்கை பாடம்....!
(வி.எமல்டா குயின் மேரி, ஆங்கில பட்டதாரி ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, இடையத்தான்குடி, அரியலூர்)
துலாபாரம்.. ஒரு நிமிடக் கதை (15)
Chettinadu Recipies: வாசக் கருவேப்பிலையே.. மணமணக்கும் கருவேப்பிலை குழம்பு!
போராளிகளின் வரலாற்றை சற்றுப் படியுங்கள் தம்பி.. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
அத்தனை நீளமாகப் பேசியும் detention copy பற்றி மூச்சுவிடவில்லையே.. ஸ்டாலினுக்கு தவெக கேள்வி
தாராபுரம்: அமராவதி ஆற்றின் கரையில்… மாறிக்கொண்டே இருக்கும் அரசியல் களம்!
மதுராந்தகம்.. ஏரிகாத்த ராமர் முதல் தேர்தல் களம் வரை… தனித்துவம் கொண்ட தொகுதி!
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
இளையராஜாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் பின்னணி!
தாய்மாமன் தங்க மோதிர திட்ட டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி
{{comments.comment}}