- கா.காயத்ரிதேவி
அதிகாலை அலாரத்துடன் அவசர அவசரமாய் எழுந்தாள் கயல். கயல் எழுவதற்கு முன்னரே, மாதவன் தான் எழுந்து தன் சுய வேலைகளை முடித்துவிட்டு கயலுக்கு சமையலறையில் உதவிட வந்திடுவான். இருவரும் காலை 7:00 மணிக்குள் சமையல் வேலைகளை முடித்தாக வேண்டிய கட்டாய சூழல்.
இவர்களின் அன்பு மகள் நிவேதிதா, மகன் ராகவ் இருவரும் அருகில் இருக்கும் தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். சரியாக காலை 7:10க்குள் பள்ளி வாகனம் வீட்டிற்கு வந்து விடும் என்பதாலே.
கயல், மாதவன் இருவரும் அரசுப் பள்ளியில் பணிபுரிந்து வருகின்றனர். பரபரப்பான சூழலில் வீட்டு வேலைகளை இருவரும் அவரவருக்கு தகுந்தபடி பிரித்துக் கொள்வர். விடியற்காலையில் இருந்து ஆரம்பமாகும் பணியில் இரவு உறக்கம் மட்டுமே இருவருக்குமான ஓய்வு நேரம்.
கயலின் தனித்துவமான திறன்களில் ஒன்று எழுத்து அதற்காக சில நேரங்களில் தனது ஓய்வு நேரத்தையும் களவாடத் துணிந்திடுவாள். தினசரி அலுவல் பணியில் வார விடுமுறை மட்டுமே வரமாய் அமைந்தது இருவருக்கும்.

சனி, ஞாயிறு களில் வீட்டு வேலை நகர விடாமல் பிடித்து வைத்திருந்தது கயலை. இந்த இயந்திரத்தனமான வாழ்க்கையில் கயலை உயிர்ப்புடன் வைத்திருக்கச் செய்வதென்னவோ நிவேவும், ராகவும் தான்.அவர்களது குறும்புகளில், இருக்கும் வாழ்க்கைக்கு அவ்வப்போது இறைவனுக்கு நன்றி சொல்லிக் கொண்டே இருப்பாள்.
தன் குழந்தைகளுடன் இருக்கும் நேரங்கள் கயலுக்கு அம்மாவின் நினைவுகளை கூட்டாமல் இல்லை. அம்மாவை பார்க்க ஆசையாய் அழைத்தாலும் பெரிதாய் விருப்பம் காட்ட விரும்ப மாட்டான் மாதவன். இருப்பினும் அவள் விருப்பத்திற்கு முட்டுக்கட்டையும் போட மாட்டான். குழந்தைகளின் விடுமுறையில் ஓரிரு நாள் அம்மாவை பார்த்து விட்டு வருவது வழக்கமாக இருந்தது கயலுக்கு .
இந்த முறை காலாண்டுத் தேர்வு முடிந்ததும் கயல், குழந்தைகளுடன் விடுமுறைக்கு அம்மா வீட்டிற்கு செல்ல ஆசையாய் மனக்கோட்டை அழகாய் கட்டியிருந்தாள். தனது பள்ளி இறுதி வேலை நாள் முடிந்து குழந்தைகளின் வருகைக்காக ஆவலோடு காத்திருந்த கயலுக்கோ, பேரிடியாய் வந்திறங்கியது அலைபேசி குறுஞ்செய்தியொன்று.
நிவே மற்றும் ராகவின் பள்ளியிலிருந்து அனுப்பப்பட்ட சுற்றறிக்கையே அது.விடுமுறையானது அடுத்த வாரம் வரும் பூஜை விடுமுறையுடன் சேர்ந்து விடப்படும் என்பதே அந்த குறுஞ்செய்தி.
கயலுக்கும், மாதவனுக்கும் அப்போது பள்ளி வேலை நாள். பிள்ளைகளுக்கு மட்டுமே விடுமுறை. கட்டி வைத்த மனக்கோட்டை சட்டென்று நொறுங்கிவிடும் என அவள் நினைக்கவில்லை. அடுத்த விடுமுறை வரும் வரை கனத்த மனத்துடன் காத்திருக்க வேண்டும் கயல் . விடுமுறை ஏக்கமோ அவள் விழிகளில் ஒரு சில கண்ணீர்த்துளிகளை தந்து விட்டுச் சென்றது.
மீண்டும் அதிகாலை அலாரத்துடன் அவசர அவசரமாய் எழுந்தாள் கயல்!
(கரூர் மாவட்டம், வெள்ளையம்பட்டி கா.காயத்ரி தேவி (காயுகேசவ்), இடைநிலை ஆசிரியர். ஊ.ஒ.தொ.பள்ளி சோழதாசன்பட்டி, அரவக்குறிச்சி ஒன்றியம், கரூர் மாவட்டத்தில் பணியாற்றி வருகிறார். 14 வருடம் ஆசிரியர் பணி அனுபவம். கவிதை, கட்டுரை, சிறுகதை எழுதுவதில் ஆர்வலர். தமிழ்த்தடாகம் இலக்கியக் குழுமம் சார்பில் வெளியிடப்பட்ட கவிதை தொகுப்புப் புத்தகங்களில் கவிதைகளை எழுதியுள்ளார். சிங்கப்பூர் பொழில் பண்பலையில் வானொலிப் புரவலராகவும், கவிதைகளைத் தொடர்ந்து எழுதியும் வருகிறார். தனது பள்ளி பணி அனுபவத்தில் சிறந்த பள்ளிக்கான தமிழக அரசின் விருதினைப் பெற்றுள்ளார்)
தென்தமிழ் தலையங்கம்: காந்தியம் எங்கே?.. அகிம்சை மண்ணில் வளரும் வன்மம்!
சரியான பார்வை.. ஒரு நிமிடக் கதை (25)
Gandhi: 10 ரூபாய் நோட்டைப் பார்த்திருக்கீங்களா.. அதில் இதைக் கவனிச்சிருக்கீங்களா?
நாணயம் மூழ்குமா?
நேயம் நெருக்கடியிலா!
சமூகமும் நானும்!
குச்சு வீடு!
குஜராத்தின் குணமே குணம் நின்ற மனமே!
திமுக்கு தக்கா திமுக்கு தக்கா திமுக்கு தக்காளி.. சிறார் பாடல்!
{{comments.comment}}