- சகோ. வினோத்குமார்
1948 டிசம்பர் 10 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் அறிக்கையை ஏற்றுக் கொண்டது. இதனை நினைவு கூறும் விதமாக 1950 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10 ஆம் தேதி மனித உரிமைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
சைரஸ் சிலிண்டர் என்ற கல்வெட்டு மனித உரிமைகள் பற்றி முதலில் கண்டுபிடிக்கப்பட்ட ஆவணமாக கருதப்படுகிறது. கிமு 539 இல் பெர்சிய மன்னன் சைரஸ் பாபிலோனை கைப்பற்றினார். அவர் கைது செய்த போர்க் கைதிகளை அடிமையாக்காமல் விடுதலை செய்தார். அவர்கள் உரிமைகளுக்கு மதிப்பளித்து எந்த மதத்தையும் பின்பற்றும் உரிமையையும், அவர்கள் இனத்திற்குள் சமத்துவத்தை ஏற்படுத்துதல் போன்ற புரட்சிகர நடவடிக்கைகளை மேற்கொண்டார். சைரஸ் சிலிண்டர் கல்வெட்டில் இதற்கான ஆதாரங்கள் உள்ளது.
1215 ஆம் ஆண்டு இங்கிலாந்து மன்னர் ஜான் அவர்களால் மாக்னா கார்ட்டா என்ற அரசியல் சாசனம் இயற்றப்பட்டது. இது நிலப்பிரப்புக்களின் கிளர்ச்சியை அடக்கும் விதமாக கொண்டுவரப்பட்ட ஒரு சாசனமாகும். இந்த சாசனத்தில் இடம் பெற்றுள்ள சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்ற வாசகம் மனிதகுல வரலாற்றில் ஜனநாயகம் உருவாக உதவியான ஒன்றாக கருதப்படுகிறது. இந்தியாவின் அரசியலமைப்பில் பகுதி III இல் 12 முதல் 35 வரை உள்ள சரத்துக்கள் மாக்னா கார்ட்டாவை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டவை.

1628 ஆம் ஆண்டு ஆங்கிலேய மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்திய உரிமை மனு, 1787 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அமெரிக்க அரசியலமைப்பு, 1789 ஆம் ஆண்டு உருவான பிரஞ்சு பிரகடனம், 1791 இல் இயற்றப்பட்ட அமெரிக்க உரிமைகள் மசோதா இது போன்ற சட்ட முன்னவடிவுகள் தற்போதைய மனித உரிமைகள் உருவாக முன்னோடியாக இருந்தது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையம் 2006 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஜூர்க் லாபர் தற்போதைய தலைவராக உள்ளார். இந்த ஆணையம் உலகம் முழுவதும் உள்ள மக்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரத்தை பாதுகாக்க செயல்படும் அமைப்பாக உள்ளது. இந்திய மனித உரிமைகள் ஆணையம் 1993 ஆம் ஆண்டு அக்டோபர் 12ஆம் தேதி உருவாக்கப்பட்டது. இது தன்னாட்சி பெற்ற சுதந்திரமான அமைப்பாக செயல்பட்டு வருகிறது. இதன் தற்போதைய தலைவராக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் உள்ளார். தமிழ்நாட்டின் மனித உரிமைகள் ஆணையம் 1997 ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி உருவாக்கப்பட்டது. ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.மணிக்குமார் இதன் தலைவராக செயல்பட்டு வருகிறார்.
இந்தியா ஒரு ஜனநாயக நாடு. மனித உரிமைகள் ஆணையம் உருவாக்கப்பட்டதன் முக்கிய காரணம் ஜனநாயகம் காக்கப்பட வேண்டும். ஒவ்வொரு தனி மனிதனின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை இந்த ஆணையம் உறுதி செய்கிறது. சட்டத்திற்கு அப்பாற்பட்டு ஒரு மனிதனின் உரிமைகள் பறிக்கப்படும் போது மனித உரிமை ஆணையத்தை நாடலாம். இந்த ஆணையம் தன்னாட்சி பெற்ற அமைப்பாக இருப்பதால் அரசியலுக்கு அப்பாற்பட்டு செயல்பட்டு நீதியை பெற்றுத்தரும்.
தனி மனித உரிமை மீறல் மட்டுமல்லாமல் சமூகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் நிகழ்வுகளுக்கும் உரிய தீர்வை வழங்குகிறது. உதாரணமாக அரசு, அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறை தன் அதிகாரத்திற்கு அப்பாற்பட்டு செயல்படும் போது யாரும் புகார் அளிக்காவிட்டாலும் அந்த நிகழ்வு அசாதாரண நிகழ்வாக இருக்கும் போது தாமாக முன்வந்து விசாரித்து அதற்கு தக்க தீர்வு பரிந்துரைக்கும் சுதந்திர அமைப்பாக உள்ளது.
மனித உரிமைகள் என்பதை அரசு தான் பாதுகாக்க வேண்டும் என்பது இல்லை. அனைத்து குடிமக்களுக்கும் இதில் பங்கு உண்டு. ஒவ்வொரு தனிமனிதனும் சேர்ந்ததுதான் சமுதாயம். நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களின் உணர்வுகளை மதித்து ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்வதே ஒரு வகையில் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு சமம். மனித உரிமைகள் என்பதற்கு வயது வித்தியாசம் கிடையாது. குழந்தைகள் மற்றும் மாணவர்களுக்கும் கூட அவர்களின் தனிப்பட்ட உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். இது அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும் ஒரு யுக்தியாகவும் இருக்கும்.
மனித உரிமைகள் குறித்து இவ்வளவு சட்டங்கள் ஆணையங்கள் இருப்பினும் அது குறித்த விழிப்புணர்வு இல்லை என்பது கவலைக்குரியதாக உள்ளது. இது சார்ந்து தகவல்களை நம்மைச் சுற்றி உள்ள நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் பகிர்ந்து கொள்வது கூட ஒரு வகை கடமையாகும். இதன்மூலம் மனிதர்களின் உரிமைகள் காக்கப்படுவது மட்டுமல்லாமல் சமுதாயத்தின் அமைதி நிலைநாட்டப்படும்.
(சகோ. வினோத்குமார், தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}