சென்னை: இன்று ஒரு படம் வெற்றியடைய வேண்டும் என்றால் இரண்டு விஷயங்கள் தேவை. ஒன்று படத்தில் புகைப்பிடிக்கும் காட்சி இருக்க வேண்டும். இன்னொன்று கெட்ட வார்த்தைகள் பேச வேண்டும் என்று நடிகர் இமான் அண்ணாச்சி கூறியுள்ளார்.
இமான் அண்ணாச்சி சொல்வதும் ஓரளவு சரிதான்.. இப்படிப்பட்ட காட்சிகள் அதிகம் நிறைந்த படங்கள்தான் அரங்கு நிறைந்த காட்சிகளுடன் ஓடி வெல்கிறது. சரி.. இந்த மேட்டரை எங்கு பேசினார் இமான் அண்ணாச்சி.

சமூக விரோதி.. இந்தப் படத்தின் டிரைலர் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழாவின்போதுதான் இப்படிக் கூறி கலகலப்பை ஏற்படுத்தினார் இமான் அண்ணாச்சி.
பிரஜின் நடிக்கும் சமூக விரோதி படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் ட்ரெய்லர் சென்னை பிரசாந்த் திரையரங்கில் வெளியிடப்பட்டது. இவ்விழாவில் பல்வேறு அரசியல் இயக்க தலைவர்கள் கலந்து கொண்டனர். சீயோன் ராஜா எழுதி, இயக்கிய படம் சமூக விரோதி. இப்படத்தின் நாயகனாக நடிகர் பிரஜின் நடித்துள்ளார். கே. ராஜன், கஞ்சா கருப்பு ,வனிதா விஜயகுமார் ,நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தை ஜியோனா ஃபிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் நிறைவடைந்த நிலையில் தற்போது படத்தின் டிரைலர் மற்றும் பஸ்ட் லுக் வெளியிடப்பட்டது.
இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், திராவிட இயக்க அரசியல் பேச்சாளர் நாஞ்சில் சம்பத், ஆம் ஆத்மி கட்சியின் தமிழ்நாட்டுத் தலைவர் வசீகரன், தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர் சங்கத் தலைவர் கே. ராஜன் ,இமான் அண்ணாச்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சியை சேர்ந்த குணாஜி, மே 17 இயக்கத் தலைவர் திருமுருகன் காந்தி ஆகியோர் சமூக விரோதி பட ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசினார்கள்.
நாஞ்சில் சம்பத் பேசும்போது கூறியதாவது: நான் குமரி மண்ணில் இருந்து சென்னைக்கு இந்தப் படத்தை வாழ்த்துவதற்காக வந்தேன். இயக்குநர் சியோன் ராஜா நிறைய வாசிக்கிறவன், அது மட்டும் அல்ல நிறைய யோசிக்கிறவன். இன்று சாதாரண உப்புக்கல்லாகத் தெரிகிற சியோன் ராஜா இந்தப் படத்திற்குப் பின் வைரமாக மாறுவான்.
இங்கே ஒருவர் அறச்சீற்றத்தை வெளிப்படுத்திப் பேசினார். பொதுவெளியில் பேசும்போது யார் மனமும் புண்படாத வகையில் பேசுவது நாகரிகம் ஆகும். சமூக விரோதி எங்கிருக்கிறான்? நம்மிடையே தான் இருக்கிறான். இங்கே தீவிரவாதிகள் சமூக விரோதிகள் என்பதற்கு வேறு வேறு அர்த்தங்கள் கற்பிக்கப்படுகின்ற. மாவோ என்றாலே இங்கே அஞ்சுகிறார்கள். அவன் யார் என்பதைப் பற்றி யாருக்கும் அரசியல் அறிவு கிடையாது. வரலாற்றினைப் படித்தது கிடையாது. அவன் மக்களுக்காக 6000 மைல் பயணம் சென்றவன். லட்சக்கணக்கான மக்களைத் திரட்டி கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராகப் படை திரட்டியவன் மாவோ.

மாவோ யுத்தம் செய்தது சர்வாதிகார சாம்ராஜ்யத்திற்கு எதிராக மட்டுமல்ல போதை கலாச்சாரத்துக்கு எதிராகவும்தான். அபின் நிறைந்த கப்பலைக் கொளுத்தி அழித்து மக்களைத் தீய பழக்கத்திலிருந்து காத்தவன்.. அதனால்தான் வரலாற்றில் அது அபினியுத்தம் எனப்படுகிறது. மாவோ பெயர் என்றாலே தீவிரவாதியாகப் பார்க்கிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் தான் அவர்களின் புரிதல் இருக்கிறது.
இந்தப் படத்திற்காக இயக்குநர் சீயோன் ராஜாவும் கதாநாயகன் பிரஜினும் பட்ட பாடுகளை நான் அறிவேன். அவர்களின் தொடர் ஓட்டத்தை நான் கவனித்து இருக்கிறேன். அது ஒரு சிலுவைப்பாடு என்றுதான் சொல்ல வேண்டும்.
எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் டிஜிபி மோகன்தாஸ் காவல்துறைக்கு சங்கம் வைக்க வேண்டும் என்று கூறினார். அதற்காகக் காவல்துறையினர் போராடினார்கள் அவர்களை ஒடுக்குவதற்கு எம்.ஜி.ஆர் ராணுவத்தை வரவழைத்துப் பயன்படுத்தினார். போராடியவர்கள் ஒரு மாதம் சிறையில் அடைக்கப்பட்டார்கள். குற்றம் சம்பந்தமான புலனாய்வு அறிக்கையில் மற்ற மாதங்களை விட காவல்துறையினர் சிறையில் இருந்த அந்த ஒரு மாதம் தான் கொலை , கொள்ளை குற்றங்கள் நடக்காமல் குறைவாக இருந்தது.
இதிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறதா யார் சமூக விரோதிகள் என்று. இந்த சமூக விரோதி படம் மூலம் புரட்சியை ஏற்படுத்துகிறாரோ இல்லையோ இயக்குநர் சீயோன் ராஜா ஓர் அதிர்வை ஏற்படுத்துவார் என்று கூறி படக்குழுவினரை வாழ்த்துகிறேன் என்றார்.
இமான் அண்ணாச்சி பேசும்போது, இன்று ஒரு படம் வெற்றியடைய வேண்டும் என்றால் இரண்டு விஷயங்கள் தேவை. ஒன்று படத்தில் புகைப்பிடிக்கும் காட்சி இருக்க வேண்டும்,இன்னொன்று கெட்ட வார்த்தைகள் பேச வேண்டும். அது இரண்டுமே இதில் உள்ளது. எனவே இந்தப் படம் நிச்சயமாக வெற்றி பெறும் என்றார்.
மே 17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி பேசும் போது, திரைப்படத் துறையும் அரசியலும் சம்பந்தமில்லாதது போலும் ஒன்றை ஒன்று தொடர்பு படுத்த வேண்டாம் என்றும் இங்கே சர்ச்சை முன்வைக்கப்பட்டது. திரைத்துறைக்கும் அரசியல் துறைக்கும் சம்பந்தம் உள்ளது. சினிமா ஒரு புகழ்பெற்ற ஊடகமாக வளர்ந்துள்ளது . 1973 -ல் காட் பாதர் படத்தில் நடித்ததற்கு நடிகர் மார்லன் பிராண்டோ ஆஸ்கார் விருதுக்குத் தேர்வானார். அந்த விருது விழாவில் அவர் அந்த விருதை ஏற்காமல் ஒரு செவ்விந்திய பெண்ணை வைத்து தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளைப் பேச வைத்தார். அந்தப் பூர்வீக குடிகளின் ஒடுக்குமுறை பற்றிக் கவலைப்பட்டு அந்த விருதை மறுப்பதாகத் தெரிவித்தார்.
கலைஞர்கள் சமூகத்தின் மனசாட்சியாக இயங்க வேண்டும். சார்லி சாப்ளின் உலக சர்வாதிகாரி ஹிட்லரை பார்த்து உலகமே பயந்து கொண்டிருந்தபோது டிக்டேட்டர் படத்தில் அவரை நகைச்சுவைக்குரிய கேலிக்குரியவராகக் காட்டி அவர் பிம்பத்தை உடைத்தார். இப்படிக் கலைஞர்கள் சமூக மனசாட்சியாக இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இங்கே ரஜினி மக்கள் பிரச்சினைக்குக் குரல் கொடுக்கவில்லை என்று கேட்கும் போது அவர் பதில் தரலாம், மறுக்கலாம். அது அவர் மனசாட்சிக்கு உட்பட்டது. ஆனால் சம்பந்தமில்லாத பிரச்சினைகளில் அவர் குரல் கொடுத்து அதைத் திசை திருப்பி தன்னுடைய ரசிகர்களைத் தவறான பாதையில் செல்ல வழி வகுக்கக் கூடாது. ஸ்டெர்லைட் பிரச்சினையில் ரஜினி அப்படிச் செய்திருக்கக் கூடாது. அவர் ஒரு பெரிய கதாநாயகனாக இருக்கிறார். படங்களில் அவர் உடுத்துகிற உடைகளை ரசிகர்கள் உடுத்துகிறார்கள். அவர் பயன்படுத்தும் சோப்பை பயன்படுத்துகிறார்கள்.
அப்படிப் பின்பற்றுபவர்கள் இருக்கும்போது ஸ்டெர்லைட் விவகாரத்தில் தீவிரவாதிகள் புகுந்து விட்டார்கள் என்று கூறியது எவ்வளவு தவறானது .எதற்கும் குரல் கொடுக்காதவர் அப்படிப் பேசும்போது கோபம் வரத்தான் செய்யும். அரசியலற்று இருங்கள் அமைதியாக இருங்கள். அதைப் பற்றி எங்களுக்குக் கவலை இல்லை. ஆனால் உத்தரப் பிரதேசத்தில் 15 ஆயிரம் பேரை என்கவுண்டர் மூலம் கொலை செய்த யோகி ஆதித்யநாத் பற்றி எதுவுமே தெரியாமல் அவர் காலில் விழும்போது, நாங்கள் கேள்வி கேட்கத்தான் செய்வோம்.
சமூகப் பிரச்சினைகளை பேசினாலே சமூக விரோதிகள் என்கிறார்கள். தேசத்தின் பிரச்சினை பேசினால் தேச விரோதி என்கிறார்கள். இங்கே எதிர் முகாம் பிரம்மாண்டமாகப் பெரும் பலத்தோடு நிற்கிறது. அப்படிப்பட்டவர்களை இது மாதிரி படங்கள் மூலம் தான் எதிர்க்க வேண்டும்.
அவர்கள் பலம் பொருந்தியவர்களாக இருக்கிறார்கள். அப்போது டேவிட் கோலியாத் சண்டை போல் நாம் போட வேண்டும். அதனால் தான் இந்த பட முயற்சியை ஆதரிக்கிறோம் என்று வாழ்த்தினார்.
Aliya Riaz: யார் இந்த அலியா ரியாஸ்.. ஏன் இப்படி திடீரென வைரலாகியுள்ளார்?
Singapen Helpline Number: பெண்களே.. 1091 என்ற எண்ணை அழைத்தால்.. சிங்கப்பெண் படை விரைந்து வரும்!
FIFA WorldCup 2026: உலகக் கோப்பை கால்பந்து.. அமெரிக்காவில் அசத்தும் ஈரான்.. டிரம்பை கலாய்த்து மீம்ஸ்
பிரிட்டன் அரசியல்: 10 டவுனிங் ஸ்ட்ரீட்டின் சுழலும் கதவு.. கீர் ஸ்டார்மரும் பதவி விலகல்!
கையடக்கத்தில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்.. அசத்தலாக சாதிக்கும் நெல்லை ஆசிரியர் பொன் ரேகா!
Chettinadu Recipes: செட்டிநாடு அடுப்படியில் அதிரடி ஸ்வீட்.. மணக்க மணக்க கோதுமை அல்வா!
Monday Motivation: வாழ்வித்த வாழ்த்துகள் (சிறுகதை)
Tamil Short Story: நிறைவேறாத கல்லூரிக்கனவு!
தில்லைக்கூத்தன் கோயில்.. சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோவில் சிறப்புகள்!
{{comments.comment}}