நான் உன் பிள்ளைய ஒன்னும் செய்ய மாட்டேன்.. (கோடாங்கி.. திகில் தொடர் - 8)

Apr 03, 2026,12:50 PM IST

- கவிஞர் க.முருகேஸ்வரி


கள்ளிப்பட்டி கிராமத்திற்கு பேருந்து வசதி இல்லாததால் இரவு நேரத்தில் கடைசி பஸ்ஸில் பக்கத்து டவுனில் இறங்கி 2 கி.மீ.நடந்தே வந்தான்‌ சங்கையா.அடிக்கடி வந்து போன இடம் என்றாலும் இன்று ஏதோ ஒரு பதட்டம்....


அவனுடன்‌ நான்கைந்து பேர் நடந்து வந்து கொண்டிருந்தனர். ஆனாலும் அவனை நிழல் போல் யாரோ தொடர்வது போன்று அவனுக்குத் தோன்றியது... திரும்பி திரும்பி பார்த்து கொண்டே நடந்தான்.


 கள்ளிப்பட்டிக்குள் கால் வைத்த அடுத்த நொடி.......


கல் இடறிக் கீழே விழுந்தான்...


ஒரு நிமிடம் நிலைகுலைந்த சங்கையா...தன் சட்டைப்பையில் இருந்த விபூதிப் பொட்டலம் கீழே விழுந்தைக் கவனித்து விட்டான்...அதை எடுத்துக் கொண்டு ஓட்டமும் நடையுமாய் வள்ளி வீட்டை சென்றடைந்தான்.




 சங்கையாவைப் பார்த்தும் பெரியம்மாவின் நெஞ்சம் பட படத்தது.சாமி‌ வந்துட்டியாப்பா...

உன் தங்கச்சிய நீ தான் காப்பாத்தினியாப்பா...அந்த படுபாவிப் பய நம்ம பிள்ளைய கொல்லக் காத்திருந்துருக்கானே....நெனச்சாலே ஈரக் கொலையெல்லாம் நடுங்குதுயா....

 பெரியம்மா அழுகாத...இங்க வா.... வள்ளி வள்ளி கீழ விழுந்தப்ப நல்லா பயந்திருக்காம்...

நம்ம ராசாத்தி அக்கா ‌மேல சாமி வந்து சொல்லுச்சு பெரியம்மா....

இங்க பாரு விபூதி கொடுத்தனுப்பியிருக்காங்க.....இது ராசாத்தி அக்கா கொடுத்த விபூதி....இது பெரியசாமி கோயில் விபூதி..,..என்று இரண்டு விபூதிப் பொட்டலத்தையும் கொடுத்தான் சங்கையா...


நல்ல வேளையா நீ வந்த சாமி...

வள்ளி பயந்திருக்குனு எனக்கும் தெரிஞ்சிச்சுப்பா

அதனால

முருகேசன விபூதி போட கூப்பிட்டேன் . முருகேசன் விபூதி போட வந்தப்போ வள்ளி நடந்துகிட்டதப் பார்த்தா எனக்கு பயமா இருக்குயா....


பெரியம்மா என்ன ஆச்சு பெரியம்மா ....

வள்ளி எப்படி நடந்துகிச்சு.... ஏதாவது சொல்லுச்சா...


முருகேசன் கிட்ட நான் யாருன்னா கேட்குற... நீ தான் சாமியாடியாச்சே...முடிஞ்சா சொல்லு பார்ப்போம் னு சொன்னாயா.... 


நான் உன் பிள்ளைய ஒன்னும் செய்ய மாட்டேன்.... எனக்கு ஒரு வேலை‌ இருக்கு அத முடிஞ்சதும்‌ நானே கெளம்புறேன்‌ னு சொல்றாயா.... வெலவெலத்துப் போச்சுயா....


முருகேசன் விபூதி எடுத்ததும்....

என்ன ஒன்னும் பண்ணாதீங்க...நான் போயிடறேன்னு சொன்னா....

மொகத்துல தண்ணி அடிச்சு விபூதி போட்டுட்டு 

வள்ளி னு கூப்பிடுறாரு....


என்ன வள்ளி....நான் போகலை....போனது வேற யாரோ னு சொன்னாப்பா...


அது எதுக்கும்‌ அடங்காது ராமாயி...ஒன் குலதெய்வத்த கும்பிடு... உனக்கு வழிகாட்டும்னு சொல்லிட்டு முருகேசன்  போயிருச்சு...


பெரியம்மா இப்ப வள்ளி எங்க? என்றான் சங்கையா...




அசந்து தூங்கிட்டு இருக்காயா வள்ளி....

அய்யனார் கோயிலுக்குப் போயிட்டு வந்துரலாமாயா வள்ளியக் கூப்பிட்டுக் கிட்டு...என்றாள் ராமாயி.

போகலாம் பெரியம்மா என்று சங்கையா சொல்லிக்கொண்டே

வள்ளியை எட்டிப் பார்த்தான் சங்கையா....


சுருண்டு படுத்திருந்த தன் தங்கச்சியைப் பார்த்து நெஞ்சமெல்லாம் பதறியது.எல்லாம் அந்த களவாணிப் பயலால வந்தது....அவனை சும்மா விடக்கூடாது என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு இருக்கும் போதே வள்ளியின் குரல் கேட்டது...சங்கையா அண்ணே....


(பேய் வரும்)


(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா  போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார்).

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்