திருமலை குமாரசுவாமி திருக்கோவில்.. குன்றின் மீதமர்ந்து.. அருள் பாலிக்கும் முருகப் பெருமான்!

Sep 25, 2026,10:47 AM IST

- ராதா ஜானகிராம்


எனது தென்காசி மாவட்டத்தில் மிகவும் புகழ் பெற்ற  குன்றின் மேல் அமர்ந்து அருள் புரியும்  திருமலை குமாரசுவாமி  கோவில் வரலாறு பற்றி எனக்கு தெரிந்ததை கூறுகிறேன்.


பைம்பொழில் திருமலைக்குமாரசாமி கோயில் வரலாறு


தென்காசி மாவட்டம் செங்கோட்டைக்கு அருகில் அமைந்துள்ள பைம்பொழில் திருமலைக்குமாரசாமி கோயில், திருமலை முத்துக்குமாரசுவாமி திருக்கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. மேற்கு தொடர்ச்சி மலையின் அழகிய சூழலில், திருமலைக் குன்றின் மீது முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார்.


பழங்காலத்தில் இப்பகுதி பசுமையான சோலைகளால் நிறைந்திருந்ததால் “பைம்பொழில்” என்று அழைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் அது “பண்பொழி” என வழங்கப்பட்டது. இந்த மலையில் முதலில் திருமலைக்காளி அம்மன் சன்னதியும், புளியமரத்தின் அடியில் ஒரு வேலும் மட்டுமே இருந்ததாக தலவரலாறு கூறுகிறது. பூவன்பட்டர் என்ற அர்ச்சகர் அந்த வேலுக்கு தினமும் பூஜை செய்து வந்தார்.


ஒருநாள் பூஜை முடித்துவிட்டு புளியமரத்தடியில் பூவன்பட்டர் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது, முருகப்பெருமான் அவரது கனவில் தோன்றி, அருகிலுள்ள கோட்டைத்திரடு என்ற இடத்தில் தமது திருமேனி இருப்பதாகவும், அதனை எடுத்துவந்து திருமலைக் குன்றில் பிரதிஷ்டை செய்யுமாறும் அருளியதாக ஐதீகம் கூறுகிறது.


அதன்படி கோட்டைத்திரடு பகுதியில் முருகப்பெருமானின் சிலை கண்டெடுக்கப்பட்டுதிருமலைக் குன்றின் மீது பிரதிஷ்டை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.




அதன் பின்னர் இத்தலம் திருமலைக்குமாரசாமி திருக்கோயிலாக சிறப்புப் பெற்றது. மலைக்கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் படிகள் வழியாக ஏறிச் சென்று திருமலைக்குமாரசாமியை தரிசிக்கின்றனர்.


இத்தலத்தில் திருமலைக்காளி அம்மன், உச்சிப்பிள்ளையார், பைரவர் உள்ளிட்ட சன்னதிகளும் உள்ளன. பூஞ்சுனை தீர்த்தம் இத்தலத்தின் சிறப்புமிக்க தீர்த்தமாகக் கருதப்படுகிறது. தலவிருட்சமாக புளியமரம் விளங்குகிறது.


இயற்கை அழகு, மலைச்சூழல், பழமையான வழிபாட்டு மரபு மற்றும் முருகப்பெருமானின் அருள் ஆகியவற்றால் பைம்பொழில் திருமலைக்குமாரசாமி திருக்கோயில் புகழ்பெற்ற முருகத் திருத்தலமாக விளங்குகிறது.


மக்கள் கிரிவலம்  வர  வசதியாக சாலை அமைக்கும் பணி நடந்து  கொண்டிருக்கிறது. கோவில் வாசல் வரை செல்ல பேருந்து வசதி உள்ளது. படிக்கட்டு வழியாகவும் படியேறி  முருகனை தரிசிக்கலாம். தைப்பூசம் , கந்த சஷ்டி என வருடத்திற்கு 2 முறை தேரோட்டம் நடைபெறும். பக்தர்கள் கட்டணம் கட்டி தங்கத்தேர் இழுக்கும் வசதியும் உள்ளது. 


அண்டை மாநிலமான கேரள பக்தர்கள் அதிகளவில் வந்து முருகனை தரிசித்து செல்கின்றனர். திருமலைக்குமாரசாமி திருவருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்!


(கட்டுரையாளர் ராதா ஜானகிராம், B.A. தீவிர சிவபக்தை. திருமுறைகள் மற்றும் திருவாசகத்தின் மீது தனிப்பட்ட ஆர்வம் உண்டு. திருவாசகம் முற்றோதல் நிகழ்வுகளில் தொடர்ந்து கலந்து கொண்டு வருகிறார். கையிலை அறக்கட்டளை நடத்தும் “சைவ சித்தாந்தச் சுடர்” வகுப்பில் கலந்து கொண்டு பட்டம் பெற்றுள்ளார். சைவ சமயம் மற்றும் ஆன்மிகம் சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு வருகிறேன். ஜெயசுகந்தி அவர்கள் நடத்தும் "அருள் சக்தி ஆலயம்" குழுவில் பயணிக்கிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஏகாதசி விரதத்தின் மகிமை அல்லது அம்பரீஷ மஹாராஜாவின் பக்தி!

news

ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: விசாரணைக்காக சிறப்பு புலனாய்வு குழு (SIT) அமைப்பு

news

தலையங்கம்: சிறுமிகளுக்கு எதிரான கொடூரம்.. அயோக்கியர்களின் கொட்டத்தை அடக்க வேண்டும்!

news

Nellai Special: வாழை இலை விருந்தும்.. நாவில் கரையும் திருநெல்வேலி சொதிக்குழம்பும்!

news

கீழ்வானம் செந்நிற ஆடை அணிய.... மலர்கள் சோம்பல்முறிக்க...!

news

திருமலை குமாரசுவாமி திருக்கோவில்.. குன்றின் மீதமர்ந்து.. அருள் பாலிக்கும் முருகப் பெருமான்!

news

"நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்".. கதை அல்ல நிஜம் (2வது பகுதி)

news

Puzzle: அந்தாதி வினா விடை.. வர்றீங்களா விளையாடலாம்?

news

Story by Pooranavalli Sekar: பொறுமை.. ஒரு நிமிடக் கதை (20)

அதிகம் பார்க்கும் செய்திகள்