இறைவனின் நிறம் ஐந்து!

Oct 01, 2026,03:50 PM IST

- சிவ.ப.மாலதி ராஜாராம்


விநாயகர் துதி


என்னை நினைந்து, அடிமை கொண்டு, என் இடர் கெடுத்துத், தன்னை நினைய தருகின்றான், புன்னை விரசு மகிழ், சோலை வியன் நாரையூர் முக்கண் அரசு மகிழ், அத்தி முகத்தான். 


சிவபுராணம் தொடர்ச்சி...


திருச்சிற்றம்பலம்


{பாடல் வரிகள்}


46. கறந்த பால், கன்னலொடு, நெய் கலந்தால் போலச்

47. சிறந்து, அடியார் சிந்தனையுள் தேன் ஊறி நின்று,,

48. பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்!


(பொருள்)




பசுவின் பாலுடன் சர்க்கரையும் நெய்யும், கலந்தால் தரும் இனிய சுவையைப் போல சிறந்த அடியாரது சிந்தனையுள் தேன் போன்று இன்பசுவை என்னும் பேரருள் ஊற்றுப் பெருக்கெடுத்து, நிலைபெற்று நின்று எடுத்து   பிறந்த இப்பிறவிதனை ஒழிக்கின்ற எம். இறைவனே!  


(பாடல் வரி)


49. நிறங்கள் ஓர் ஐந்துடையாய்! விண்ணோர்கள் ஏத்த!


(பொருள்)


ஐந்து பூதங்களைத் (நிலம், நீர், காற்று, ஆகாயம்,நெருப்பு)


திருமேனியாக கொண்ட நீ அவற்றிற்கு உரிய ஐந்து நிறங்களை (பொன்னிறம், வெண்மை, செம்மை,கருமை (அ) நீலநிறம், சாம்பல் (அ) படிக நிறம்) உடையவனே, செருக்கு உடைய மேல் உலக தேவர்கள் போற்றி துதித்தாலும், 


(பாடல் வரி)


50. மறைந்திருந்தாய் எம்பெருமான்! வல்வினையேன் தன்னை 

51. மறைந்திட மூடிய மாய இருளை 


(பொருள்)


விண்ணவர்கள் போற்றி துதித்தாலும் அவர்களுக்கு தோன்றாது ஒளிந்து இருந்தாய் எம்பெருமானே, வலிய வினையையுடைய அடியேனை மறைத்திடுமாறு மூடியுள்ள அறியாமை ஆகிய இருளான ஆணவம் அழியும் பொருட்டு, 


(பாடல் வரி)


52. அறம், பாவம், என்னும்,அரும் கயிற்றால் கட்டி 


{பொருள்}


 "அறம்" (புண்ணியம் _நல்வினை), "பாவம்" (தீ வினை) ஆகிய இரண்டு வினைகளையும் வலிமை உள்ள திரிக்கப்பட்ட ஒரு கயிற்றினால் நம் ஆன்மாவானது இந்த பூமியில் பிணைக்கப்பட்டுள்ளது.. அதாவது நன்மை செய்தாலும் அதை அனுபவிக்க மறுபிறவி உண்டு. தீமை செய்தாலும் அதை அனுபவிக்க மறுபிறவி உண்டு, என்பதை (இரு வினை தத்துவம்) மூலம் குறிப்பிடுகிறார்.


(பாடல் வரி)


53. புறந்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி


(பொருள்)


இரு வினை ஒப்பு மூலம் பிணைக்கப்பட்ட இந்த ஆன்மாவை சுற்றி, வெளியே அழகான தோல், போர்த்தப்பட்டு,, உள்ளே புழுக்களும், அழுக்குகளும், நிறைந்த இந்த உடலானது மூடி இருக்கிறது.


(பாடல் வரி)


54. மலஞ் சோரும் ஒன்பது வாயில் குடிலை,


(பொருள்)


கழிவுகளும் அசுத்தங்களும் வெளியேறும் நமது உடம்பின் ஒன்பது துவாரங்கள் (கண்கள் _2,காதுகள்_2, மூக்குதுளைகள்_2, வாய், எருவாய்,கருவாய் சிறுநீர் வெளியேற்றும் பாதை) உடைய  இந்த உடலை,,


(பாடல் வரி)


55.மலங்க, புலன் ஐந்தும் வஞ்சனை செய்ய __


(பொருள்)


இவ்வாறு அழுக்கை நிறைந்த உடலை தந்து என்னை தடுமாறி போகும் அளவிற்கு ஐம்பொறிகளும் (மெய், வாய், கண், காது) தந்திரமாக அவற்றின் சார்பாக நின்று உன்னை அணுக முடியாத படி தடை செய்கின்றது (இதை மனத்தின் இடர்பாடு என்று கூறுவோம்)


தொடரும்.....


(குறிப்பு)


இறைவனின் நிறம் ஐந்து என்பதற்கு எடுத்துக்காட்டாக இன்றும் தஞ்சை மாவட்டம் திருநல்லூர் பெருமான் ஒவ்வொரு நாளும் ஐந்து நிறங்கள் மாறும் குணமுடையவர் இவரது பெயரே பஞ்சவர்ணேஸ்வரர் மாறும் நிறங்கள், செப்பு நிறம், இளஞ்சிவப்பு நிறம், பொன்னிறம், உருகிய பொன்னிறம் மற்றும் நவரத்தின பச்சை இவ்வாறாக 5 வண்ணங்களில் இறைவன் காட்சியளிக்கிறார்.


(மாலதி ராஜாராம், உழவாரப்பணி மற்றும் தேவாரம் திருவாசகம் முற்றோதுதல் செய்தல் தையல் மற்றும் கைவினைப் பொருட்கள் செய்தல் பொழுதுபோக்கு ஆகும். இல்லத்தரசி)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்