டெல்லி: ஒரு வருடத்திற்கு முன்பு என்னையும், என் தாயாரையும் புகழ்ந்தவர்கள் இன்று வாய்க்கு வந்தபடி இகழ்வது பெரும் வேதனையாக இருக்கிறது. நேரத்துக்கு ஏற்றார் போல தங்களை மாற்றிக் கொள்வோர் குறித்து அதிர்ச்சி அடைந்துள்ளேன் என்று கூறியுள்ளார் ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவரான நீரஜ் சோப்ரா.
2020 ஜப்பான் ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தவர் நீரஜ் சோப்ரா. அவர் கலந்து கொண்ட முதல் ஒலிம்பிக் போட்டியிலேயே தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றவர். அடுத்து பாரீஸில் 2024ல் நடந்த ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார். தங்கப் பதக்கத்தை பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் வென்றார்.
இரு வீரர்களும் அந்த நிகழ்வில் காட்டிய சகோதரத்துவம் அனைவரின் பாராட்டையும் பெற்றது. அதை விட மேலாக, நதீமும் எனது மகன்தான் என்று நீரஜ் சோப்ராவின் தாயார் கூறியது அனைவரையும் அசரடித்தது. அவரைப் பாராட்டாதவர்களே கிடையாது பாகிஸ்தானில் மட்டுமல்லாமல், இந்தியாவிலும் கூட பலரது பாராட்டுக்களைப் பெற்றார் நீரஜின் தாயார்.
இந்த நிலையில் எந்த வாயெல்லாம் நீரஜ் சோப்ராவைப் பாராட்டி மகிழ்ந்ததோ அவர்கள் அப்படியே தலைகீழாக மாறி நீரஜ் சோப்ராவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்குக் காரணம் காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்தான்.
பெங்களூரில் நீரஜ் சோப்ரா கிளாசிக் என்ற பெயரில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் அர்ஷத் நதீம் உள்ளிட்ட பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்தான் பஹல்காமில் தீவிரவாதிகள் வெறித்தனமான தாக்குதலை நடத்தி 26 பேரை சுட்டுக் கொன்ற சம்பவம் நிகழ்ந்து விட்டது.
இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பலரும் கொந்தளித்துக் கருத்துக்களைப் பரிமாறி வருகின்றனர். அதில் ஒரு பகுதியினர் அப்படியே நீரஜ் சோப்ரா பக்கம் கோபமாக திரும்பி அவரை விமர்சிக்க ஆரம்பிக்கவே அது காட்டுத் தீ போல பரவி பலரும் நீரஜ் சோப்ராவை கடுமையாக விமர்சித்து வருகின்றனற்.
இது நீரஜ் சோப்ராவை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதுதொடர்பாக அவர் கூறுகையில், பஹல்காம் சம்பவத்திற்கு முன்பே அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டு விட்டன. இந்த நிலையில் என் குடும்பத்துக்கும் எனக்கும் எதிராக வரும் வெறுப்பையும் மோசமான வார்த்தைகளையும் நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
நான் பொதுவாகக் குறைவான வார்த்தைகளையே பேசுவேன். ஆனால், நான் தவறு என்று நினைக்கும் விஷயத்துக்கு எதிராகப் பேச மாட்டேன் என்று அர்த்தமில்லை. முக்கியமாக என் நாட்டின் மீதான என் அன்பு, என் குடும்பத்தின் மரியாதை பற்றி கேள்வி வரும்போது நான் சும்மா இருக்க முடியாது.
நீரஜ் சோப்ரா கிளாசிக் போட்டியில் அர்ஷத் நதீமை நான் அழைத்தது பற்றி நிறைய பேச்சுக்கள் இருக்கின்றன. அதில் நிறைய வெறுப்பும் மோசமான வார்த்தைகளும்தான். அவர்கள் என் குடும்பத்தைக்கூட விட்டுவைக்கவில்லை. நான் அர்ஷத்துக்குக் கொடுத்த அழைப்பு ஒரு விளையாட்டு வீரரிடமிருந்து இன்னொரு விளையாட்டு வீரருக்கு மட்டுமே - அவ்வளவுதான். என்சி கிளாசிக் போட்டியின் நோக்கம் சிறந்த விளையாட்டு வீரர்களை இந்தியாவுக்குக் கொண்டுவருவதுதான். மேலும், நம்ம நாடு உலகத்தரம் வாய்ந்த விளையாட்டுப் போட்டிகள் நடக்கும் இடமாக இருக்க வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். அழைப்பிதழ்கள் திங்களன்று எல்லா விளையாட்டு வீரர்களுக்கும் அனுப்பப்பட்டன. பஹல்கம் தீவிரவாத தாக்குதல்களுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே அனுப்பப்பட்டு விட்டன.
கடந்த 48 மணி நேரத்தில் நடந்த எல்லா விஷயங்களையும் பார்த்தால், என்சி கிளாசிக் போட்டியில் அர்ஷத் வருவது சுத்தமாகச் சாத்தியமில்லை. என் நாடும் அதன் நலன்களுமே எனக்கு எப்பவும் முக்கியம். தங்கள் சொந்த மக்களை இழந்தவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். ஒட்டுமொத்த தேசத்தோடும் சேர்ந்து, நடந்த விஷயத்தால் நானும் வருத்தமாகவும் கோபமாகவும் இருக்கிறேன்.
நடந்த சம்பவத்திற்கு நமது நாடு அளிக்கும் பதில், ஒரு வலிமையான தேசமாக நம்மைக் காட்டும். நீதி கிடைக்கும் என்றும் நான் நம்புகிறேன். நான் பல வருடங்களாக என் நாட்டைப் பெருமையுடன் சுமந்து வந்திருக்கிறேன். அதனால் என் நேர்மையைக் கேள்வி கேட்பது எனக்கு வேதனையளிக்கிறது. எந்த காரணமும் இல்லாமல் என்னையும் என் குடும்பத்தையும் குறிவைத்து பேசுபவர்களுக்கு நான் என்னை விளக்க வேண்டியிருப்பது எனக்கு கஷ்டமாக இருக்கிறது. நாங்கள் சாதாரணமான மக்கள், தயவுசெய்து எங்களை வேறு மாதிரி காட்டாதீர்கள்.
சில ஊடகங்கள் என்னைப் பற்றி நிறைய பொய்யான செய்திகளைப் பரப்பி இருக்கிறார்கள். ஆனால் நான் பேசவில்லை என்பதற்காக அது உண்மை என்று ஆகிவிடாது. மக்கள் எப்படித் தங்கள் கருத்துக்களை மாற்றுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதும் எனக்குக் கஷ்டமாக இருக்கிறது. ஒரு வருஷத்துக்கு முன்னாடி என் அம்மா - தன்னுடைய எளிய மனநிலையில் - ஒரு நல்ல விஷயத்தைச் சொன்னபோது, அவங்க கருத்துக்கு நிறைய பாராட்டுக்கள் வந்தன. இன்று, அதே விஷயத்துக்காக அதே நபர்கள் அவரைத் தாக்குவதை ஏற்க முடியவில்லை என்று கூறியுள்ளார் நீரஜ் சோப்ரா.
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
{{comments.comment}}