சென்னை: 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரனை ஒரு வார காலமாகியும் கைது செய்யாத திமுக அரசின் அலட்சியப்போக்குதான் மிகப்பெரிய வன்கொடுமை என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகேயுள்ள ஆரம்பாக்கத்தில், பள்ளி முடிந்து அருகிலுள்ள பாட்டி வீட்டிற்குத் தனியாக நடந்து சென்ற 10 வயது சிறுமியை, மனச்சான்றற்ற கொடூரன் தூக்கி சென்று வன்கொடுமை செய்த கொடுமை நிகழ்ந்து, ஒரு வாரகாலமாகியும் இதுவரை அக்குற்றவாளியை காவல்துறை கைது செய்யாதது கடும் கண்டனத்துக்குரியது; அரசும், ஒட்டுமொத்த சமூகமும் வெட்கித்தலைகுனிய வேண்டிய மிகப்பெரிய மனிதப்பேரவலமாகும்.
பெற்ற குழந்தைக்கு நேர்ந்த பெருங்கொடுமையைச் சொல்லி அழும் தாயின் கதறல் ஒலி நெஞ்சை பிளக்கிறது; எந்த குழந்தைக்கும் இனி நேரக்கூடாது என்ற அத்தாயின் தவிப்புக் கண்களில் இரத்தக்கண்ணீரைப் பெருக்குகிறது. அக்கொடூரன் அலைபேசியில் இந்தி மொழியில் பேசிக்கொண்டிருந்தபோது உடல் முழுவதும் ரத்தக்காயங்களுடன் தப்பி வந்த சிறுமி, வரும் வழியில், அவ்வழி செல்ல முயன்ற மற்றொரு சிறுமியை ‘அந்தப்பக்கம் போகாதே!’ என தடுத்துக் காப்பாற்றியச்செயல் இதயத்தை நெகிழச்செய்கிறது. பெற்றெடுத்து பேணி வளர்த்த குழந்தைக்கு நேர்ந்த கொடுமையை எண்ணி நெஞ்சம் குமுறும் பெற்றோர்க்கு என்ன ஆறுதல் கூறி தேற்ற முடியும்?
அப்பிஞ்சு நெஞ்சின் உள்ளத்தில் உண்டான கொடுங்காயம் வாழ்நாள் முழுவதும் வடுவாக நின்று வாட்டுமே? யார் அதற்கு மருந்திடுவது? வருங்காலத் தலைமுறைகளின் நெஞ்சத்தில் எதை விதைக்கின்றோம்? எவற்றை நாம் கற்பிக்கின்றோம்? யார் இப்பேரவலத்திற்குப் பொறுப்பேற்பது? திமுக அரசு பொறுப்பேற்குமா? திராவிட மாடல் ஆட்சியாளர்கள் பொறுப்பேற்பார்களா? புத்தகப் பையுடன் தனியாக நடந்து செல்லும் குழந்தையைக் கொடூரன் தூக்கிச்செல்லும் கண்காணிப்புக் கருவி காட்சிகளைக் காணும்போது ஏற்படும் பதைபதைப்பும், ஆற்றாமையும், அடக்கவியலா பெருங்கோபமும் வார்த்தைகளில் சொல்லக்கூடியதல்ல. கண்காணிப்புக் கருவி காட்சி இருந்தும், அக்கொடூரன் இந்தியில் பேசியதை சிறுமி தெரிவித்த பிறகும் குற்றவாளியை இதுவரை பிடிக்க முடியாமல் திமுக அரசு திணறுவதுதான் நிகழ்ந்த வன்கொடுமையை விடவும் மிகப்பெரிய வன்கொடுமை!
அப்பாவி அஜித்குமாரை சந்தேகத்தின் பேரில் விசாரணை என்ற பெயரில் அடித்தேக்கொன்ற திமுக அரசின் காவல்துறைக்கு உண்மையான குற்றவாளியைக் கண்டுபிடிக்க ஏன் இத்தனை காலதாமதம்? படுகொலைகளும், பாலியல் வன்கொடுமைகளும், விசாரணை மரணங்களும் எல்லா ஆட்சியிலும் நடைபெறும் வழக்கம்தான் என்று திருவாய் மலர்ந்த திராவிடத்திருவாளர்கள், திமுக ஆட்சியில் குற்றவாளிகளைத் தப்பவிடுவதும், கைது செய்யாமல் அலட்சியப்படுத்துவதும் வழக்கமாகிவிட்டதற்கு என்ன பதில் கூறப்போகிறார்கள்?
திருத்தங்கலில் மதுபோதையில் மாணவர்கள் ஆசிரியரைத் தாக்கும் அவலம் அரங்கேறுகிறது; திருப்பூரில் கஞ்சா அருந்திய சமூக விரோதிகள் அரிவாளோடு பள்ளி மாணவர்களைத் துரத்தும் கொடுமை நடக்கிறது. அறந்தாங்கியில் ஆடு மேய்க்கச்சென்ற தங்கை பர்வீன்பானு வன்கொடுமை செய்யப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். நாமக்கலில் வறுமையைப் பயன்படுத்தி உடல் உறுப்புகள் கொள்ளை நடக்கிறது. இணையவழி சூதாட்டத்தால் இறந்தவர் எண்ணிக்கை 91ஐ கடந்துவிட்டது.
80 வயது மூதாட்டி முதல் பச்சிளம் குழந்தைகள் வரை பாலியல் வன்கொடுமை செய்யப்படும் கொடூரங்கள் நாளும் நிகழ்ந்தேறுகிறது; மயிலாடுதுறையில் மக்களைக் காக்க வேண்டிய காவல் அதிகாரி சாலையில் நடந்து போகிறார். இத்தனை சமூகப்பேரவலங்களும் சர்வ சாதாரணமாக நடைபெறும் ஆட்சியை, நல்லாட்சி, பொற்கால ஆட்சி, சாதனை ஆட்சி, யாராலும் குறை சொல்ல முடியாத ஆட்சி என்பதெல்லாம் வெட்கக்கேடானது.
போதைப்பொருள் விற்பனையைக் கட்டுப்படுத்தாது, மலிவு விலையில் மது விற்கும் திமுக அரசின் நிர்வாகச் சீர்கேடுதான், நாட்டில் நடைபெறும் அனைத்து சமூகக்குற்றங்களுக்கும் அடிப்படை காரணமாகும். வடவர்களின் வருகையை முறையாகப் பதிவு செய்யாத திமுக அரசின் அலட்சியம் அக்கொடுங்குற்றங்களை மேலும் பன்மடங்காக அதிகரிக்கச் செய்துள்ளது.
ஆகவே, திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கத்தில், பள்ளிச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரனை இதற்கு மேலும் தாமதிக்காமல் விரைந்து கைது செய்து, மிகக்கடுமையான தண்டனை தரவேண்டுமெனவும், இனியாவது இதுபோன்ற கொடுமைகள் நிகழ்ந்தேறாமல் தடுக்க மது விற்பனையை முற்றாக நிறுத்திடவும், வடவர்களின் வருகையை முறையாகப் பதிவு செய்திடவும் வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.
வன்கொடுமைக்கு உள்ளாகியுள்ள சிறுமிக்கு உரிய மருத்துவச் சிகிச்சை அளிப்பதுடன் உளவியல் ரீதியாக நம்பிக்கையுடன் மீண்டுவர தேற்றுவதும் அரசின் தலையாயக் கடமையாகும்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அன்புமகள் விரைந்து நலம்பெற விழைகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
மகா மோசமாக இருக்கும் மதுரை.. மறு சீரமைப்பு நடவடிக்கை தேவை.. முதல்வருக்கு சு. வெங்கடேசன் கோரிக்கை
ஆபரேஷன் சிந்தூரின்போது.. 5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.. டொனால்ட் டிரம்ப் புதுத் தகவல்
42 நாடுகளுக்குப் போன பிரதமர் மோடி.. மணிப்பூருக்கு மட்டும் செல்லாதது ஏன்.. கார்கே கேள்வி
10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை... கொடூரனை கைது செய்யாதது தான் அரசின் மிகப்பெரிய வன்கொடுமை: சீமான்!
பொய்யான வாக்குறுதிகள் கூறி ஆட்சிக்கு வந்த திமுக அரசு: அண்ணாமலை குற்றச்சாட்டு !
கிங் படப்பிடிப்பில் ஷாருக் கானுக்கு காயம்.. ஒரு மாதம் ஓய்வெடுக்க டாக்டர்கள் அறிவுரை
சென்னை உட்பட 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!
அதிமுக-பாஜக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை: அண்ணாமலை!
கலையாலும் பாடல்களாலும் மக்கள் மனதில் என்றும் வாழ்வார் ஆருயிர் அண்ணன்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
{{comments.comment}}