ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி... உறங்கி கோட்டை விட்ட தமிழக அரசு: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

Jun 10, 2025,04:01 PM IST

சென்னை: ஒருங்கிணைந்த கல்வித்திட்ட நிதியை  பெறுவதில்  ஏற்பட்டுள்ள  பின்னடைவுக்கு  தமிழக அரசு தான் காரணமாகும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்படி தமிழக அரசுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.2151.59 கோடியை மத்திய அரசு வழங்க மறுப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசின் சார்பில்  விடுக்கப்பட்ட கோரிக்கையை  உச்சநீதிமன்றம் நிராகரித்து விட்டது.  ஜூலை 13-ஆம் தேதி வரை உச்சநீதிமன்றத்திற்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில்,  அதற்கு முன்பாக இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கு வாய்ப்பில்லை. இது தமிழ்நாட்டுக்கு  பெரும் பின்னடைவு ஆகும்.


ஒருங்கிணைந்த கல்வித்திட்ட நிதியை  பெறுவதில்  ஏற்பட்டுள்ள  பின்னடைவுக்கு  தமிழக அரசு தான் காரணமாகும்.  இந்த சிக்கலில் தமிழ்நாட்டிற்கு எப்போதோ கிடைத்திருக்க வேண்டிய நீதி இப்போது வரை தள்ளிக் கொண்டே  போவதற்கு  காரணம், தமிழக அரசின் சார்பில் காட்டப்பட்ட அலட்சியமும், அடுக்கடுக்காக இழைக்கப்பட்ட  தவறுகளும் தான் .




ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் 2024-25ஆம் கல்வியாண்டுக்கான  முதல் காலாண்டில்,  அதாவது கடந்த ஆண்டு  ஏப்ரல் மாதம் முதல்  ஜூன் மாதம் வரையிலான  3 மாதங்களில்  தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய ரூ.573 கோடியை  கடந்த ஆண்டு ஆகஸ்ட்  மாதத்தின் முதல் பாதி வரை வழங்காத நிலையில், அதைக் கண்டித்து  கடந்த ஆண்டு ஆகஸ்ட் 27-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில், மத்திய அரசிடமிருந்து நிதியைப் பெறுவதற்கு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடருவது உள்ளிட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன். அதன்பின் தொடர்ந்து வெளியிட்ட அனைத்து அறிக்கைகளிலும் இதையே  வலியுறுத்தியிருந்தேன். கடந்த மே 22-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் மீண்டும் ஒருமுறை  இந்த யோசனையை வலியுறுத்தியிருந்தேன்.


ஆனால், தமிழக அரசோ, அதை மதித்து நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக வீண் அரசியலைச் செய்து காலத்தைக் கடத்தியது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்ததற்கும் இது தான் காரணம் ஆகும். நேற்றைய வழக்கு விசாரணையின் போது, எவ்வளவு காலமாக  மத்திய அரசின் நிதி வரவில்லை என்றும், எப்போது வழக்கு தொடர்ந்தீர்கள் என்றும்  உச்சநீதிமன்றத்தின் கோடை விடுமுறைக் கால நீதிபதி வினா எழுப்பினார். அதற்கு பதிலளித்த தமிழக அரசின் வழக்கறிஞர், கடந்த ஆண்டு முதலே  நிதி வரவில்லை என்றும், கடந்த  மே மாதம் 20-ஆம் தேதி தான் வழக்குத் தொடர்ந்ததாகவும் பதிலளித்தார்.  அதனடிப்படையில் தான் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க  உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.


பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியவாறு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலேயே தமிழக அரசின் சார்பில் வழக்குத் தொடரப்பட்டிருந்தால் அடுத்த சில மாதங்களில் இந்த வழக்கில் தீர்ப்பு வந்திருக்கும்;  தமிழகத்திற்கான நிதியும் கிடைத்திருக்கும். ஆனால், மக்கள் நலனை விட, அரசியல் லாபம்  தேடுவதில் தான் திமுக அரசு தீவிரம் காட்டியது. அதனால் தான் 43 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, இந்த நிதிப்பற்றாக்குறையைக் காரணம் காட்டி கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி, ஒரு லட்சம் குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளில் இலவசக் கல்வி வழங்குவதையும் தமிழக அரசு தடுத்து விட்டது. இப்படியாக தமிழக அரசின் செயல்களால் பாதிப்புகள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.


மாநிலங்களின் உரிமைகளை மீட்பது தான்  தங்களின் லட்சியம் என்று கூறித் தான் திமுக ஆட்சிக்கு வந்தது. ஆனால்,  மாநில உரிமைகளைக் காப்பதற்காக எந்த நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுக்கவில்லை. சுமார் ஓராண்டு காலம் உறங்கிக் கொண்டிருந்து, மிகவும் தாமதமாக உச்சநீதிமன்றத்தை அணுகியதன் மூலம் நிதியைப் பெறுவதில் தோல்வியடைந்து விட்டது.


தமிழக அரசு உடனடியாக மீண்டும் உச்சநீதிமன்றத்தை அணுகி, வழக்கை விரைவாக விசாரித்து  தமிழகத்திற்கு நிதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி, கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி  தனியார் பள்ளிகளில்  25% இடங்களில்  ஏழைக் குழந்தைகளைச் சேர்க்கவும், அவர்களுக்கு கல்வி வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Weather Update: தமிழகத்தில் வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும்: வானிலை மையம் தகவல்!

news

இஸ்ரேலுக்கு கருணை காட்ட மாட்டோம்.. போர் தொடங்கி விட்டது.. ஈரான் மதத் தலைவர் கமேனி ஆவேசம்!

news

கீழடி அகழாய்வை நிராகரித்தால் .... முதல் குரலாக அதிமுகவின் குரல் ஒலிக்கும்: ஆர்.பி.உதயகுமார்

news

வாசக் கருவேப்பிலையே.. எடுத்து எரியாதீங்க.. அப்படியே சாப்பிடுங்க.. ரொம்ப நல்லது!

news

தொழில்துறை வளரவில்லை.. அமைச்சர் பிடிஆர் பேச்சுக்கு முதல்வரின் பதில் என்ன.. அன்புமணி கேள்வி!

news

SMART WATER ATM: சென்னையில் கட்டணமில்லா குடிநீர் சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

news

3ம் நாட்டின் மத்தியஸ்தத்தை எப்போதும் இந்தியா ஏற்காது.. டிரம்ப்பிடம் கூறிய பிரதமர் மோடி

news

ரயில்வேயில் 6180 டெக்னீஷியன் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு

news

காலையிலேயே வருமான வரித்துறை அதிரடி.. சீஷெல் ஹோட்டல்களில் ரெய்டு.. சிக்கியது என்ன?

அதிகம் பார்க்கும் செய்திகள்