டில்லி : பிரதமர் நரேந்திர மோடி கடந்த வெள்ளிக்கிழமை ஜம்மு-காஷ்மீரில் உலகின் மிக உயரமான ரயில் வளைவுப் பாலமான செனாப் பாலத்தை திறந்து வைத்தார். இந்தச் சாதனையை நாடு கொண்டாடிய நிலையில், இத்திட்டத்தில் நீண்டகாலம் செயல்பட்ட பேராசிரியை ஜி. மாதவி லதா தற்போது லைம்லைட்டுக்கு வந்துள்ளார்.
அவரைப் புகழாதவர்களே கிடையாது. அதிக அளவில் அவரைப் பற்றிய பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இது அவருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. பல்லாயிரக்கணக்கான "பெயர் தெரியாத ஹீரோக்கள்" இந்தத் திட்டத்தில் பங்காற்றியுள்ளனர். அவர்களை விட்டு விட்டு தன்னை "தேவையற்ற முறையில் பிரபலப்படுத்த வேண்டாம்" என்று கேட்டுக்கொண்டுள்ளார் மாதவி லதா.
17 ஆண்டுகளாக செனாப் பாலத்துடன் இணைந்து பணியாற்றியவர் டாக்டர் லதா.
பாலத்தைக் கட்டிய இன்ஜினியரிங் நிறுவனமான ஆஃப்கான்ஸ் (Afcons) நிறுவனத்திற்கு புவி தொழில்நுட்ப ஆலோசகராகப் பணியாற்றிய டாக்டர் லதா இதுகுறித்துக் கூறுகையில், "லட்சக்கணக்கான பெயர் தெரியாத ஹீரோக்களுக்கு நான் சல்யூட் செய்கிறேன். சரிவு நிலைப்படுத்தல் திட்டங்களை உருவாக்குவதற்கும், சரிவுகளில் அடித்தளங்களை வடிவமைப்பதற்கும் உதவுவதே எனது பங்கு.

பாலத்தைக் கட்ட அற்புதங்களை நிகழ்த்தியவர் என்றெல்லாம் புகழ்கிறார்கள். அது உண்மையில் அடிப்படையற்றது. தயவுசெய்து என்னை தேவையற்ற முறையில் பிரபலப்படுத்த வேண்டாம். செனாப் பாலத்திற்காகப் பாராட்டப்பட வேண்டிய ஆயிரக்கணக்கானோரில் நானும் ஒருத்தி, அவ்வளவுதான் என்றார் அவர்.
பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தில் (IISc), பணியாற்றி வருகிறார் பேராசிரியை மாதவி லதா. செனாப் திட்டத்தைத் தொடர்ந்து தனக்கு நிறைய வாழ்த்துக் கடிதங்கள் வருவதாகவும் பெருமிதம் வெளியிட்டுள்ளார் மாதவி லதா. இதுகுறித்துக் கூறும்போது, தங்கள் மகள்கள் என்னைப் போல் ஆக வேண்டும் என்று பல தந்தையர்கள் எனக்கு எழுதியுள்ளனர். சிவில் இன்ஜினியரிங்கை தங்கள் வாழ்க்கைத் தேர்வாக இப்போது தேர்வு செய்ய விரும்புவதாக பல இளம் குழந்தைகள் எனக்கு எழுதியுள்ளனர்.
அனைத்து புகழும் இந்திய ரயில்வேக்கே சொந்தம் பலரால் முடியாத காரியம் என்று அழைக்கப்பட்டதை வெற்றிகரமாக நிறைவேற்றியதற்காக இந்திய ரயில்வே மற்றும் ஆஃப்கான்ஸ் நிறுவனத்தைப் பாராட்டுகிறேன் என்று கூறியுள்ளார்.
உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில்வே இணைப்பு (USBRL) திட்டத்தின் ஒரு பகுதியான செனாப் பாலத்தின் கட்டுமானமானது, கடினமான நிலப்பரப்பு, நிலநடுக்க அபாயங்கள் மற்றும் கணிக்க முடியாத புவியியல் காரணமாக குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்கொண்டது. டாக்டர் லதாவும் அவரது குழுவும் இந்த சிக்கல்களை சமாளிக்க திட்டத்திற்கு உதவினார்கள்.
அதாவது, உடைந்த பாறைகள் மற்றும் மறைக்கப்பட்ட குழிகள் போன்ற நிகழ்நேர கண்டுபிடிப்புகளுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்டது. இந்த அம்சங்கள் முந்தைய ஆய்வுகளில் கண்டறியப்படவில்லை. இந்த அளவிலான கட்டமைப்பிற்கு முக்கியமான பாறை நங்கூரம் வடிவமைப்பு மற்றும் சாய்வு ஸ்திரத்தன்மை குறித்து டாக்டர் லதா வழிகாட்டுதல் வழங்கினார்.
அவர் தனது தொழில்நுட்பப் பயணத்தை 'Design as You Go: The Case Study of Chenab Railway Bridge' என்ற தலைப்பில், இந்திய புவி தொழில்நுட்ப இதழின் பெண்கள் சிறப்பு இதழில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில் விரிவாக எழுதியுள்ளார்.
செனாப் பாலத்தின் சிறப்பு அம்சங்கள்
செனாப் நதிக்கு மேலே 359 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த பாலம், ஈபிள் கோபுரத்தை விட 35 மீட்டர் உயரம் கொண்டது. இந்திய ரயில்வே இதை 1,486 கோடி ரூபாய் செலவில் கட்டியுள்ளது, இது உலகின் மிக உயரமான ரயில் வளைவு பாலமாக திகழ்கிறது. இந்திய ரயில்வே இதுவரை சந்தித்த மிகப்பெரிய சிவில் இன்ஜினியரிங் சவால் இது என்று அரசு கூறுகிறது.
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}