உளவியல் நோக்கில் பழமொழி நானூறு

Jul 20, 2026,05:13 PM IST

- முனைவர் வி.புவனேஸ்வரி


உலகில் காணப்படும் பல்வேறு உயிரினங்களில் மனதோடு கட்டமைக்கப்பட்ட ஒரு உயிரினம் தனித்த தன்மையுடைய தாயின் அது மனிதன் என்ற தனி உயிரினம் ஆகும். மனதால் திணிக்கப்பட்ட இனமாகையால் இவனுக்கு மனிதன் என்ற பெயர் உண்டானது. மனம் என்ற சொல் எப்போது மனிதர்களால் அறிந்த ஆராயப்பட்டதோ அன்றிலிருந்து மனிதனுக்கும் மனதிற்குமான சிக்கல்களும் அதற்கான தீர்வுகளும் அதற்கான கோட்பாடுகளும் என மனோ தத்துவம் எனப்படுகிற உளவியலில் ஆதி மூலம் தோற்றம் கொண்டது.


இந்த மனம் தொடர்பான பல்வேறு கோட்பாடுகளை மேற்கத்திய அறிஞர்கள் பினாலில் அறிவியலின் துணை கொண்டும் ஆய்வுகளின் துணைகொண்டும் அறிந்து அளந்து கூறியதாக இந்த உளவியல் உலகம் மேற்கத்திய அறிஞர்களே பெரும்பாலும் உளவியலில் கொண்டாடுவதை நம்மால் காண முடிகிறது. ஆனால்,இந்த உளவியல் குறித்த பார்வைகளையும் ஆய்வுகளையும் மேற்கொண்டு அதனை இலக்கியங்களின் வடித்து வைத்த நமது புலவர்களுக்கு அவர்களின் புலமைக்கு மட்டுமே பாராட்டுகள் கிட்டியது தவிர அவர்களின் உளவியல் அறிவினை ஆராய்ந்து வெளிக்கொணர்ந்தவர் யாரும் இல்லை. 


பின் நாட்களில் உருவான தமிழ் அறிஞர்களும் தமிழ் ஆய்வாளர்களும் மேற்கத்திய உளவியலாளர்களின் கருத்துக்களை தங்கள் உள்ளாக எடுத்துக் கொள்ளும் பொழுது தமிழ் இலக்கியங்கள் இதனிலும் மிஞ்சிய உளவியல் கூறுகளை தனக்குள்ளே வைத்திருப்பதை கண்டறிந்தார்கள்.அதன் படி உளவியல் கூறுகளையும் சங்க இலக்கியம் தொட்டு இன்றைய காலை கால இலக்கியங்களில் இருக்கிற உளவியல் கூறுகள் வரை பல்வேறு அறிஞர்களும் ஆராய்ந்த தனது ஆய்வுகளை வெளியிட்டும் இருக்கிறார்கள். இதில் சங்க இலக்கியம் அதிகம் பேசிய உளவியல் ஆனது காலம் கடந்தும் அடுத்த நிலையில் உள்ள அற இலக்கியங்கள் வரையிலும் தனது தன்மை மாறாமல் கடந்து வந்திருக்கிறது என்பதற்கான தக்க சான்றுகளை தனக்குள்ளே வைத்திருக்கக் கூடிய ஒரு நூல்தான் பழமொழி நானூறு.

உளவியல் சிக்கல்கள்




மனிதன் தன்னுடைய மனத்தால் கட்டுப்பட்டு கிடக்கிற மாத்திரத்தில் என்றைக்கு அவனுடைய மனநிலை தன்னுடைய நிலையிலிருந்து மாற்றம் பெற்று பிறழ்ந்த நிலையில் நிற்கிறதோ அன்றைக்கு இந்த உளவியல் சிக்கல்கள் அவனால் அடையாளப்படுத்தப்படுவதாக மாறிப்போகிறது.அவனுக்கு ஏற்பட்ட உளவியல் சிக்கல்களுக்கு தீர்வுகளும் பின்னாலில் மனதின் மூலமாகவே கிடைக்கிறது.


இந்த நிலையில் ஒரு காலகட்டத்தில் மனிதர்கள் அதிக உடல் உழைப்பும் சிறிதளவிலான மன உளைப்பும் என்ற நிலையிலேயே பொதுவான வாழ்க்கையை பெற்றவர்களாக இருந்தார்கள் அன்றைக்கு இருந்த அமைச்சர்கள் அறிஞர்கள் ஆய்வாளர்கள் புலவர்கள் என இவர்கள் மட்டுமே அறிவு சார்ந்த சிந்தனைகளும் சாதாரண மக்கள் வெகுவாக  உடல் உழைப்பிலேயே தங்கள் வாழ்வாதாரத்தை கட்டமைத்து வைத்திருந்தனர். அதனால், அன்றைக்கு பொதுவாக மனம் சார்ந்த சிக்கல்கள் குறிப்பிட்ட சாராருக்கு மட்டுமே இருந்த ஒரு நிகழ்வாக காண முடிந்தது. ஆனால் இன்றைக்கு உளவியல் சிக்கல்கள் என்பது ஒரு பொதுப்படையான ஒன்றாக மாறியிருக்கிறது. 


இதற்குக் காரணமாக கூறப்படுவது இன்றைக்கு பெருவாரியான மக்கள் சமுதாயம் உடல் உழைப்பிலிருந்து விலகி மனம் மனம் சார்ந்த கட்டமைப்பு தொழில்கள் மனம் சார்ந்த அழுத்தங்களை உடைய வேலைகள் என மனதை மையமாகக் கொண்ட வேலைகளையே அதிகம் செய்வதனால் பொதுமையில் மன அழுத்தம், மன இறுக்கம் போன்ற சொற்கள் இன்றைக்கு ஏகமும் பரவிய ஒரு சராசரியான சொற்களாக மாறி இருக்கிறது தான் இன்றைய சமூகத்தின் அவல நிலையாகவும் அமைந்திருக்கிறது.


உளவியல் சிக்கல்கள் பல்வேறு உளவியல் நோய்களுக்கு காரணமாகும். அடிப்படை உளவியல் சிக்கல்களையும் அதற்கான சில உதாரணங்களையும் விளக்க நமக்கு இந்த உளவியல் சிக்கல்கள் குறித்து ஒரு தெளிவு உண்டாகும்.


ஆனால், உளவியல் சிக்கல்கள் உருவாவதற்கான அடிப்படை காரணங்கள் இன்னதாக இருக்கலாம் என்பதனை ஆபிரகாம் மாஸ்லோவின் படிநிலைகளின் மூலமாக நம்மால் தெரிந்து கொள்ள முடிகிறது.


ஒரு மனிதனின் அடிப்படை உளவியல் தேவைகளை பல்வேறு படிநிலைகளாக கட்டமைத்திருக்கும் ஆபிரகாம் மாஸ்லோ அந்த படிநிலையின் தேவைகள் பூர்த்தி செய்யப்படாத போது அங்கு உளவியல் சிக்கலாக மாறுகிறது என்பதனை விளக்குகிறார்.


ஆபிரகாம் மாஸ்லோவின் படிநிலைத் தேவைகள் கோட்பாடு

(Abraham Maslow's Theory of Hirarchial Needs)


மாஸ்லோவின் ஊக்குவித்தல் கோட்பாட்டில் அடிப்படையான தேவைகளும், இடைநிலைத் தேவைகளும், உயர்நிலைத் தேவைகளும் உள்ளன. அடித்தளத்தில் காணப்படும் தேவைகள் பூர்த்தியான பிறகே உயர்நிலைத் தேவைகள் எழத் தொடங்குகின்றன. அவை.


1. உயிர் வாழ்வதற்கான அடிப்படைத் தேவைகள் / உடலியல் தேவைகள்


2. பாதுகாப்பு சார்ந்த தேவைகள்


3. அன்பு- உரிமைத் தேவைகள்


4. தன்மதிப்புத் தேவைகள்


5. அடைவூக்கத் தேவைகள்


8. அறிதல்-புரிந்து கொள்ளுதல் சார்ந்த தேவைகள்


7. அழகியல் சார்ந்த தேவைகள்


அடிப்படைத் தேவைகள் (Basic Needs)


உடலியல் தேவைகள்/உயிர் வாழ்வதற்கான அடிப்படைத் தேவைகள்




உலகில் தோன்றிய உயிரினங்கள் யாவும் உயிர் வாழ்வதற்கான சில அடிப்படைத் தேவைகளைக் கொண்டுள்ளன.உயிர்வளி,நீர்,உணவு,இருப்பிடம் போன்றவை மனிதன் உயிர் வாழ்வதற்கான அடிப்படைத் தேவைகள். மேலும் உறக்கம்,புலன் நுகர்வு நிறைவு,பாலுணர்ச்சி போன்றவை உடலியல் தேவைகள். இவை அனைத்தும் உயிர் வாழ்வதற்கு இன்றியமையாதவை. இவ்வகைத் தேவைகள் ஓரளவேனும் நிறைவு பெற்றால் தான் அடுத்த உயர்நிலை ஊக்கிகள் செயற்படுத்தல் சாத்தியமாகும். சங்க காலத்தைப் பொறுத்தவரையில் மக்கள் இயற்கையோடு இயைந்த வாழ்வினை மேற்கொண்டனராதலின் உயிர் வாழ்வதற்கான அடிப்படைத் தேவைகளில் நிறைவு பெற்றிருந்தமையை இலக்கியச் சான்றுகள் வழி அறிய முடிகின்றது. அரசுரிமை காலகட்டத்தில் வறுமை குறித்து மிகச் சில பாடல்களே எடுத்துரைப்பினும் அடிப்படைத் தேவைகள் ஓரளவேனும் நிறைவு பெற்றுள்ள நிலையில் வாழ்ந்தமையை உற்று நோக்கி உணரமுடிகின்றது.


“திங்க ளன்ன வெண்குடை

ஓண் ஞாயி றன்னோன் புகழ்மா யலவே” (புறம் 231;5-6)


என்று அதியனின் திறம் பாடுகிறாள் ஔவை. சங்க காலத்தில் தமிழகத்தின் பொருளாதார நிலைமை  மிகவும் மோசமாக இருந்திருக்க முடியாது.ஏனெனில், முடிவேந்தர்களும் குறுநில மன்னர்களும் பொதுப்பணிகளைப் பற்றி பெரும்பாலும் நேரிய கருத்துக்களைக் கொண்டு அவற்றிற்கேற்பச் செயல்பட்டனர் "(1) என்பது டாக்டர். ந. சுப்பிரமண்யன் கருத்து. "தமிழகத்தின் முக்கியமான ஆறுகளான பாலாறு,தென்பெண்ணை, காவிரி, வைகை, தாமிரபரணி என்பவை நிலத்தின் வண்மையைக் காத்தன. 


ஆறு கடலொடு கலக்கும் பிரதேசங்களின் செல்வம், காட்டு வளம், முல்லை நிலவளம். குறிஞ்சி, நெய்தல் நில வளங்கள் ஆகியவற்றால் பெருகிற்று. ஆயினும் நிலச் சாகுபடி என்னும் அடிப்படையிலேயே பொருளாதாரம் வளர்ந்தது. நிலம் வளப்பம் மிகுந்திருந்ததோடு உழவனும் மெய்வருத்தம் பாராத தொழிலாளியாயினன். ஆதலால் உணவுத் துறையில் தன்னிறைவு இருந்திருக்க வேண்டும்"(2)  என்றும் குறிப்பிடுகின்றார்.


பலவகையான உணவுகளை உண்டபின்னர், மலையுச்சியில் இருந்து கீழே பாய்ந்து வரும் குளிர்ச்சியான அருவிநீரை குறிஞ்சி நில மக்கள் அருந்தினர்.


”அமிழ்தின் மிசைந்து காய்பசி நீங்கி நன்மர னளிய நறுந்தண் சாரற் கன்மிசை யருவி தண்ணெனப் பருகி” (புறம் 150 14-16)


உணவு தேவை என்ற இந்த அடிப்படை நிலை நிறைவேறாத சூழலில் அது மன சிக்கலை ஏற்படுத்தலாம் என்று உணர்ந்த பழமொழி நானூறு இலக்கியம் இந்த உணவு சார்ந்த சிக்கலை அறம் சார்ந்த பாதையில் நோக்குகிறது என்பதை பின்வரும் பாடலின் வாயிலாக நாம் அறிந்து கொள்ள முடிகிறது. ஒருவன் இன்னொருவனுக்கு உணவு அளிப்பதன் சிறப்பையும் உணவு அளிப்பதன் முக்கியத்துவத்தையும் கூறும் பழமொழி நானூறு உணவு அளிப்பவனின் மனநிறைவை பேசுவதோடு உணவு பெறுபவனின் உணர்ச்சிகளின் தீர்வு குறித்தும் மறைமுகமாக நமக்கு வெளிப்படுத்துகிறது என்பது இப்பாடலின் வாயிலாக நாம் அறியும் கருத்து.


முழவொலி முந்நீர் முழுதுடன் ஆண்டார்

விழவூரில் கூத்தேபோல் வீழ்ந்தவிதல் கண்டும்,

இழவென் றொருபொருள் ஈயாதான் செல்வம்,

அழகொடு கண்ணின் இழவு.

(பழ.நா : 20)


முழவுகளின் ஒலிபோல அலைகள் முழங்கும், கடல் சூழ்ந்த உலகம் முழுவதையுமே ஒன்றாக ஒரு குடைக்கீழ் ஆண்டவர் பெருமன்னர்கள்; அவர்களுங்கூடத் திருவிழா நடந்த ஊரிலே நிகழ்ந்த கூத்தைப்போல மறுநாள் வீழ்ச்சியுற்று அழிதலைப் பார்த்திருக்கிறோம். 'இருப்பது பிறருக்கு உதவியாகப் போகட் டும் என்று ஒரு பொருளையேனும் மனதாரக் கொடுத்து மகிழா, தவனுடைய செல்வமானது, அழகும் வடிவும் உடையவளான ஒரு பெண் கண்ணிழந்த குருடியாக விளங்குவதைப் போன்றதாகும். அவள் அழகும் வடிவும், அவள் கண்ணிழந்த ஒரு காரணத் தால் தம் பெருமையற்றுப் போவதுபோல, அவன் செல்வமும் அவனது ஈயாத் தன்மையால் பயனற்ற செல்வமாகும் என்பது கருத்து,'அழகொடு கண்ணின் இழவு' என்பது பழமொழி.


பாதுகாப்புத் தேவைகள் (Safety and Security Needs)


ஒழுங்கு முறைமை, காப்புணர்ச்சி பெறுதல் ஆகியன பாதுகாப்புத் தேவைகளுள் அடங்கும். "மனிதன் உளவியல் - உயிரியல் அமைப்பாகவும் வாழ்வதற்கான உயிரியல்  வசதியைக் காணப்படுகின்றான். நீண்டகுழந்தைப் பருவ காலத்தில்  அவன் பாதுகாக்கப்படவில்லையெனில் அவன் வாழ்வது உறுதி கூற  முடியாத ஒன்றாகும். " மனித இனத்தில் இருப்பதைப் போன்று வேறு எந்த ஓர் உயிரினத்திலும் உயிரியல் சாராத வேறுபாடுகள் மலிந்து கிடக்கவில்லை.


ஆரம்ப காலகட்டத்தில் காடுகளில் வாழ்ந்த மனிதன் தன்னுடைய நாகரிக வளர்ச்சியினை அடைந்த இந்த காலகட்டத்திலும் பாதுகாப்பு உணர்வை ஏதோ ஒரு வகையில் தேடிக் கொண்டுதான் இருக்கிறான். அன்றைய காலகட்டத்தில் மிருகத்தின் குட்டியாக பிறந்த மனிதனுக்கு தன்னுடைய பெற்றோர் அல்லது தான் சார்ந்த குழுவினரால் பாதுகாப்பு என்ற ஒன்று அடிப்படையாக இருந்தது. அதே நிலை இன்றைக்கு மனிதனிலிருந்து குழந்தையாக உருவெடுக்கிற போதிலும் தன்னுடைய குழந்தை பருவம் முழுவதிலும் தான் வந்த மரபைச் சார்ந்தோ அல்லது சாராதோ பல்வேறு காரணங்களினால் இந்த மனிதக் குழந்தைக்கு பாதுகாப்பு உணர்வு என்ற ஒன்று அடிப்படையான உளவியல் கூறாக மாறி போகிறது.


இந்தப் பாதுகாப்பு கட்டமைப்பானது சமூக கட்டமைப்பில் அமைந்திருக்கக் கூடிய எல்லா உயிரினங்களுக்கும் அடிப்படையாக அமைவதையும் நம்மால் பல்வேறு இடங்களிலும் காண முடிகிறது. இந்த பாதுகாப்பு உணர்வின்மையின் காரணமாகவே இன்றைய காலகட்டத்தில் மாணவர்களிடம் அதிகம் புழக்கத்தில் உள்ள inferiority complex அதாவது தாழ்வு மனப்பான்மை மற்றும் தன் பெற்றோரை விட்டு ஏதோ ஒரு சில நாட்கள் பிரிந்து இருக்கின்ற சூழல் ஏற்படும் பொழுதும் home sick போன்ற உளவியல் சிக்கல்களை இன்றைய கால தலைமுறை அதிகம் அனுபவித்து வருகின்றனர்.


இந்த பாதுகாப்பு கட்டமைப்பு திட்டமிட்டோ அல்லது இயற்கையாகவோ மனிதனைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ளது இந்த கட்டமைப்பு ஏதேனும் ஒரு காரணத்தால் விலகல் அடையுமேயானால், அந்த சூழலில் மனிதனுக்கு பல்வேறுபட்ட உளவியல் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்பதை நாம் உணர்ந்து கொள்ள முடிகிறது.


இதனடிப்படையில் சங்க இலக்கியங்களை நாம் ஆராய்வோமானால் இந்த பாதுகாப்பு உணர்வை பெண்களுக்கு தரக்கூடிய நிலையில் பெரும்பாலும் தலைவன் என்ற கதாபாத்திரமே பெரும் பங்கை வகித்திருக்கிறது. இந்த தலைவனின் மையத்திலேயே தலைவியின் பாதுகாப்பு உணர்வு கட்டமைக்கப்பட்டு இருந்தது, அவன் தன்னை விரைந்து மணமுடித்துக் கொள்வானா?, அல்லது மடலேறி தனது மனக்கருத்தை வெளிப்படுத்தி விடுவானா?, ஏவல், தூது, கல்வி, போர் மற்றும் பொருள் வயிற் காரணத்தால் நம்மைப் பிரிந்து துயரில் ஆட்படுத்துவானா ? போன்ற பல்வேறு கேள்விகளுக்கும் ஒற்றை பதிலாய் தலைவன் என்ற ஒரு பங்கு மட்டுமே இங்கு நிலைத்திருந்தது. படையில் தலைமையின் மொத்த பாதுகாப்பு உணர்வும் தலைவனின் பிற்பட்டதாகவே இருந்ததை நம் இலக்கியங்கள் பல்வேறு இடங்களிலும் சுட்டிக் காட்டுகின்றன.


"நின்ற சொல்லர் நீடுதோன் றினியர்

என்றும் என்றோள் பிரிபறி யலரே

தாமரைத் தண்டா தூதி மீமிசைச்

சாந்தின் தொடுத்த தீந்தேன் போலப்

புரைய மன்ற புரையோர் கேண்மை

நீரின் றமையா வுலகம் போலத்

தம்மின் றமையா நந்நயந் தருளி

நறுநுதல் பசத்த லஞ்சிச்

சிறுமை உறுபவோ செய்பறி யலரே

(கபிலர்.நற்.1)


தலைவி மீது மிக்க காதல் கொண்ட தலைவன், பொருள் செய்யும் முகத்தான் நான் பிரிய போகும் செய்தியை தலைவரிடம் உணர்த்த தலைவி தன் பிரிவாற்றாமை நிலை குறித்து அவனிடம் புலம்பலை எண்ணுகையில் அவளது பாதுகாப்பு உணர்வானது தலைவனிடத்தில் எந்த அளவில் கட்டுண்டு உள்ளது என்பதை குறுந்தொகையின் பாடல் வாயிலாக நாம் அறிந்து கொள்ள முடிகிறது.


இஞ்சி அடைத்துவைத் தோமாந் திருப்பினும்

அஞ்சி அகப்படுவார் ஆற்றாதார்–

அஞ்சி இருள்புக் கிருப்பினும் வெய்யே வெரூஉம்புள்

இருளின் இருந்தும் வெளி.

(பழ.நா : 48)


உள்ளத்திலே, அச்சம் உடையவர்கள் வீரராவது இல்லை; அவருக்குப் பாதுகாப்பு அளிப்பதும் எளிதன்று. 'இருளின் இருந்தும் வெளி' என்பது பழமொழி. இருளில் மறைந்து இருந்தாலும், பகை தன்னைக் கண்டு அழித்து விடுமோ என அஞ்சும் என்பதாம்.


அன்பு-உரிமை தேவைகள்




அன்பு உரிமை தேவைகள் என்பதில் பிறர் அது பிரிவுக்கு ஏங்குவதும் பிறரால் தான் அவர்களுள் ஒருவனாக ஏற்றுக் கொள்ளப்படுவதும் அடங்கும். மனிதன் ஒரு சமூகமாக கட்டமைக்கப்பட்ட ஒரு சமூக உயிரினம். இந்த சமூக உயிரினத்திற்கு என்றைக்கும் தன் சார்ந்து உள்ள சமூகத்தின் கூறுகளிடமிருந்து தன்னை நோக்கிய அன்பும் அரவணைப்பும் தேவை என்பதை எதிர்பார்த்துக் கொண்டே இருக்கும். அதன் அடிப்படையில் உருவாவது தான் அன்பு- உரிமை தேவைகள்.


உளவியல் நோக்கில் பார்க்கும் பொழுது மனிதர்கள் அன்பு செலுத்துதல் என்பது தான் பிறருக்கு அன்பினை கொடுக்கும் பொழுது அவனுக்கு பிறரிடம் இருந்து அன்பு அழிக்கப்படுகிறது என்ற ஒரு சுயநல தேவையின் அடிப்படையிலேயே அமைகிறது என்பதையும் நம்மால் காண முடிகிறது. இந்த அடிப்படையிலேயே தான் சார்ந்துள்ள சமுதாயம் அல்லது குடும்பம் அல்லது உறவு ஆகிய எந்த கூறாகினும் மனிதன் அன்பினை அந்தக் கூரின் மீது செலுத்தும் பொழுது அந்தக் கூறில் சார்ந்துள்ள நபர்கள் மனிதனின் மீது மீண்டும் அன்பைச் செலுத்துகிறார்கள் என்ற முக்காரணத்தினாலேயே மனிதன் அன்பு மற்றும் உரிமை கொண்டாடுவதில் மிக அதிக கவனம் செலுத்துபவனாக மாறிப் போகிறான்.


தமிழர்களின் சமுதாய கட்டமைப்பில் பெண்களின் வாழ்வியல் ஆனது பொதுவாக ஆண்களை மையப்படுத்தியதாகவே அமைந்திருக்கிறது என்பதை நாம் பல்வேறு இடங்களில் காண முடிகிறது. இந்தச் சூழலில் பெண்மையின் தனிப்பட்ட சமுதாய வாழ்வினை ஆராயும் பொழுது சங்க இலக்கியங்கள் பல்வேறு இடங்களில் பெண்கள் கொண்டாடப்பட்டு இருப்பதை குறிப்புகளாக விட்டுச் செல்கின்றன. 


குறிப்பாக பெண் களவு வாழ்க்கையில் உடன்போக்கிற்கு முன்பாக தன்னுடைய இல்லத்தில் இருந்த காலகட்டங்களில் அவள் எவ்வாறெல்லாம் கொண்டாடப்பட்டால் எவ்வாறெல்லாம் பாதுகாக்கப்பட்டால் என்ற கருத்துக்களை நாம் உணரும் பொழுது தலைவி என்ற ஒரு பெண்ணின் முக்கியத்துவம் ஒரு குடும்பத்தில் எவ்வளவு பெரியதாக இருந்திருக்கிறது என்பதை நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது. ஒரு பெண்ணின் மீது அந்தக் குடும்பத்திற்கு இருந்த அன்பு மற்றும் அவளிடம் எதிர்பார்த்த உரிமைகள் அவளுக்காக இவர்கள் செய்த கடைமைகள் போன்றனவற்றை எண்ணிப் பார்க்கையில் பெண்களுக்கு அன்றைக்கு தாழ்வு மனப்பான்மை என்ற நிலை சிறிதும் இல்லாது ஒரு உயர்நிலை மனப்பான்மையுடனேயே (superiority complex) இருந்திருக்கிறார்கள் என்பதை நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது.


கூழுடைத் தந்தை இடனுடை வரைப்பின்

ஊழடி ஒதுங்கினும் உயங்கும் ஐம்பால்"

(அகம் : 145)


என்று மகட்போக்கிய செவிலித்தாய் தலைவியின் தந்தை குடி பெற்றுள்ள வளத்தையும்,அச்செல்வச் செழிப்பில் தலைவி இட்டால் அடி நோகும் எனுமளவிற்கு உயர்நிலையில் வளர்க்கப்பட்டமையையும் எடுத்துரைக்கின்றாள்.


தமர் அல்லவரைத் தலையளித்தக் கண்ணும்

அமராக் குறிப்பவர்க்கு ஆகாதே தோன்றும்

சுவர்நிலம் செய்தமையக் கூட்டிய கண்ணும்

உவர்நிலம் உட்கொதிக்கு மாறு.

(பழ.நா : 85)


ஒரு நிலத்தைச் சுற்றிலும் நீண்ட நெடிய மதில் எழுப்பி, அந்த நிலம் முழுவதும் தன்மை பொருந்திய நீரை நிரப்பி வெப்பத்தை தணிக்க முயற்சி செய்தாலும், அந்த நிலம் உவர்நிலமாக இருக்குமேயானால் அதன் உள்ளே அந்த வெப்பம் மாறாமல் அப்படியே உள்ளிருக்கும். இதைப் போல நம்முடைய சுற்றம் அல்லாத பகைவர்களிடம் அன்பை காட்டி அவர்களை தலைமேல் வைத்து போற்றினாலும் அவர்களுக்கு உங்கள் அன்பு புரியாது.அது மட்டுமல்லாது மேலும் உங்கள் மீது சந்தேக உணர்வு ஏற்பட்டு பகைமை எண்ணமே மீதூரும்.


இதனைக் கொண்டு நோக்கும் பொழுது தனக்கு தேவையான அன்பு அல்லது உரிமை கிடைக்காத பொழுதும் அது உளவியல் சிக்கல்களை ஏற்படுத்துகிறது, தனக்குத் தேவையில்லாத அன்பு கொடுக்கப்படுகிறது என்றால் அந்த சூழலிலும் உளவியல் சார்ந்த சிக்கல் உருவாகிறது சந்தேகம் போன்ற உளவியல் நோய்கள் பின்னிப் பிணைத்து வளர்பவையாக மாறுகிறது என்பதை பழமொழி நானூறு வாயிலாக நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது.


அடைவூக்கத் தேவைகள்


அடை ஊக்கம் என்பது ஒரு மனிதன் தன்னுடைய அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்த கொண்ட பின்பு அவனுக்கு தோன்றும் ஒரு உயர்நிலை அல்லது மேம்பட்ட தேவை என்று உளவியலாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.


எந்த ஒரு மனிதனுக்கும் தன்னுடைய செயல்களில் தொடர்ந்து ஒரு ஈடுபாடு இருக்கும் பொழுது ஒரு அடைவினை அடைந்து தனக்கான தேவை நிறைவேறிவிட்டது என்ற எண்ணம் உருவாவதற்கு முன்பாக தேவைக்கான அடிப்படை என்னும் உருவாகிறது நம்மால் பல்வேறு நிகழ்வுகளில் உணர்ந்து கொள்ள முடிகிறது. ஒரு மனிதன் தன்னுடைய தேவையை நிறைவு செய்து கொண்ட அந்த நிலையில் அடுத்து அவனுடைய தேவை தனது முந்தைய தேவைகளை விட சற்று உயர்ந்த மனநிலையிலும் மேம்பட்ட எதிர்பார்ப்புகளுடனும் அமைந்து விடுகிறது அதனை அடை தூக்க தேவைகள் என்று உளவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.


மனிதன் அவனது செயல்களில் உயர்நிலை சாதனையை அடைய வேண்டும் என்பது இந்த தேவையில் இலக்கு, ஒருவரின் அடைவு என்பது அவனது திறமையையும் அவன் வாழும் சூழலையும் பொறுத்து ஒன்று அடையப்படும் பொழுது ஒரு மனநிலையில் ஏற்பட்டு அதுவே அடுத்த தேவையை அடைய மூக்கியாக செயல்படுகிறது.18

இந்த முதல் அடிப்படை தேவைகள் அனைத்தும் போட்டிகளாக உருவாக்கம் அடைந்து அடுத்த தேவையின் அடிப்படை காரணிகளாக மாறும்பொழுது இந்த அடிப்படை தேவைகளில் ஒட்டுமொத்த உருவமாக அலை போக்க தேவைகள் மார்க்கமடைந்து நிற்கின்றன.


இதனை எளிமைப்படுத்தி சொல்லப்போனால் ஒரு சாதாரண மனிதனுக்கு நீ என்ன ஆக வேண்டும் என்ற கேள்வியை எதிர்கொள்ளும் பொழுது தான் ஒரு உயர்ந்த நிலையை அடைப்பவனாக அது தொழிலிலோ அல்லது கல்வி சார்ந்தோ அல்லது வாழ்க்கையில் கூறுகளைச் சார்ந்தோ இருக்கலாம் ஆனால் தான் இந்த சமூகத்தால் மதிக்கப்படுகிற அல்லது போச்சப்படுகிற நிலையை அடைய வேண்டும் என்பதே ஒருவகையில் பதிலாக இருக்கும். இந்த பதில் தான் அடை ஊற்ற தேவைகளில் அடைவுகளாக நம்மால் காண முடிகிறது. இன்றைய காலகட்டத்தில் பொதுவாகவே நாம் இந்த சமூகத்தில் யாரேனும் வளர்ச்சி அடைந்த அல்லது மேம்பட்ட சமூக கோட்பாடுகளுக்கு ஆட்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்,ஆனால் அவரோடு தொடர்பு கொள்வது அல்லது அவரோடு நட்பு பாராட்டுவது என்பதை நமக்கான சமூக அங்கீகாரமாக பார்க்கக்கூடிய பார்வை இன்றைக்கும் இந்த சமுதாயத்தில் இருக்கத்தான் செய்கிறது தன்னுடைய அடைவு என்பதையும் மீறி தான் யாருடன் சார்ந்து இருக்கிறோம் என்பதும் அடைவில் தேவைகளாக மாறி இருக்கிறது என்பதை நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது.


குறிஞ்சி கலியில், ஒரு தலைவன் மிகச்சிறந்த பண்புகளோடும் போற்றப்படும் நிலையிலும் இருந்த போதிலும் தலைவி அந்த தலைவனை ஏற்க அச்சம் கொண்டு, தயக்கத்தாலும்,நாணத்தாலும் தடுமாறுகிற சூழலில் இருக்கிறாள். இந்த சூழலில் இருக்கக்கூடிய தலைப்பிற்கு அந்தத் தலைவனின் முக்கியத்துவத்தையும் சமுதாயத்தில் அவன் இருக்கிற நிலையையும் விலக்கி தலைவிக்கு இருக்கிற தயக்கத்தையும் ஞானத்தையும் போக்கி தலைவன் மீது காதலை ஏற்படுத்த முயல்கிறாள் தோழி என்று ஒரு குறிப்பு கிடைக்கிறது பின்வரும் பாடல்,


"ஒன்று இரப்பான்போல் எளிவந்துஞ் சொல்லும் உலகம்

புரப்பான் போல்வதோர் மதுகையு முடையன்

வல்லாரை வழிபட் டொன்றறிந் தான்போல்

நல்லார்கட் டோன்றும் அடக்கமு முடையன் (கபிலர்.கலி.47)


என்னிடம் வந்து நீ அவனுக்குத் தேவை என்பதை எளிமையாக நின்று என்னிடம் பேசுகிறானே உன்னுடைய தலைவன் அவன் உண்மையில் ஊரில் உள்ள அனைவருக்கும் அவ்வளவு எளியவன் அல்ல, அவன் மக்களை காப்பாற்றி அரசாட்சி செய்து நாட்டை பாதுகாக்க வல்ல வலிமை உடையவன், நல்ல ஞான நூல்கள் பல கற்று தெளிவு உடைய குருவை தனது குருவாக கருதி வழிபட்டு அவர்களின் வழி நின்று அந்த நூல் குறித்த தகவல்களை தானும் அறிந்து சான்றோனாக நூல்வள கற்று வாழ்பவர்களை கண்டால் அடங்கி நடந்து சிறப்பான பண்புகளையும் உடையவனாக இருப்பவன், வறியவர் என்ற வார்த்தையை தன் வாழ்வில் ஒருத்தர் கொண்டு இருப்பாரே ஆனால் அவரிடம் வழிந்து சென்று வறுமை நீக்கும் வள்ளல் தன்மை உடைய நபராகவும் வாழ்பவன் அவன், எத்தகைய தன்மையுடைய ஒரு நபர் தன்னுடைய ஆளுமைச் சிறப்புகளை எல்லாம் மதிக்காது தன் மனதில் கருதாது இத்தனை ஆற்றல்களையும் தன்னுள் வைத்திருந்த போதிலும் அவையற்றையெல்லாம் விட்டுவிட்டு பணிவாக பல சொற்கள் சொல்லி என்னிடம் வந்து இறைந்து நிற்கிறான். 


இவ்வளவு சிறப்புகளைக் கொண்ட ஒருவன் இவ்வாறு வந்து நிற்கிறான் என்று கூறினால் யாராலும் நம்பக் கூட முடியாது. இவைகள் மட்டுமல்ல ஒரு நாள் அவன் என்னிடம் சந்தித்து உன் மீது அவனுக்குள்ள விருப்பத்தை வெளிப்படுத்திய பொழுது நீ இல்லாமல் போனால் அவன் இறந்து விடுவான் என்று கூறினான்.இவ்வாறாக தோழியின் கூற்று தலைவி இடம் அமைந்திருப்பதை நம்மால் காண முடிகிறது. மேலும் பெண்களைப் பொதுவாக பேதையர் என்று கூறுகிற தன்மை இந்த சமூகத்தில் உண்டு, ஆனால் நீ அப்படிப்பட்ட பேதை கிடையாது நீ அறிவுடைய நற்குணத்தாள், அதனால் இது குறித்து நீ சரியான முடிவினை நீயே எடுப்பாயாக என்று தலைவியிடம் இறுதியாக அந்த முடிவினை விட்டு விடுகிறாள் தலைவி.


இந்த இடத்தில் தோழியின் எண்ணம் எத்தகைய குணநலன்களையும் பண்புகளையும் பெற்ற தலைவனை தன்னுடைய தோழியான தலைவி மறுப்பதும் வெறுப்பதும் சரியான செயல் இல்லை என்பதை உணர்ந்து, தலைவனின் குண நலன்களையும் பண்பையும் திறத்தையும் தலைவியிடம் விளக்குவதன் மூலம் தலைவனின் அடைவு ஊக்கத்தினை தலைவி இடம் தோழி விளக்கிக் கொண்டிருக்கிறாள் என்பது தகவல். அதே சூழலில் இங்கு தலைவிக்கு அவளது அடை ஊக்கத்தை அடைய தலைவனது அடை ஊக்கங்கள் அடை ஊக்கியாக மாறிக் கொண்டிருக்கிறது என்பது நாம் புரிதலில் கொள்ள வேண்டிய ஒன்று.


ஆக தலைவனுக்கு பல்வேறு அடைவு ஊக்கங்கள் உண்டு அது அவனுடைய அடிப்படை தேவைகள் பூர்த்தியானதுனால் அவனுக்கு கிடைத்த அடை ஊக்கத்தின் அடைவு. இங்கு தலைவிக்கு தலைவனை அடைவது தான் அடை ஊக்கம் எனும் பொழுது தலைவனின் அடைவுகள் இங்கு தலைவிக்கு அடைவு ஊக்கிகளாக மாறி இருப்பதையும் நம்மால் காண முடிகிறது.


வைத்ததனை வைப்பென்று உணரற்க தாமதனைத்

துய்த்து வழங்கி இருபாலும்--அத்தகத்

தக்குழி நோக்கி அறஞ்செய்யின் அஃதன்றோ

எய்ப்பினில் வைப்பென் பது.

(பழ.நா : 95)


ஒருவனுக்கு தனது அடிப்படைத் தேவைகளை எல்லாம் நிறைவு பெற்ற நிலையில் செல்வந்தனாக மாறிய பின்பு அவனுக்கு ஒரு எண்ணம் தோன்றும், தான் தேடி வைத்த செல்வத்தை தம்முடைய ஆபத்து காலத்தில் பயன்படும் வகையில் பாதுகாத்து பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டேனேயானால், அது தன்னுடைய கடைசி காலத்தில் தனக்கு பாதுகாப்பாக இருக்கும் என்ற எண்ணம். ஆனால் பழமொழி நானூறு இதனை மறுத்து ஒரு புதிய அடைவு ஊக்கத்தை ஏற்படுத்துகிறது, அதாவது தங்கள் பாதுகாத்த செல்வம் உங்களுக்கு பயன்படுமா என்றால் அது பயன்படாது, அதே செல்வத்தை தாமும் அனுபவித்து பிறருக்கும் கொடுத்து இம்மைக்கும் மறுமைக்குமான வாழ்வை அறத்தோடு வாழ்ந்து இருந்தானேயானால், அவனுடைய தளர்ந்த காலத்தில் அந்த அறமே பெரும் நிதியாக அவனுக்கு நிற்கும் என்கிறது பழமொழி நானூறு. இங்கு அடிப்படை தேவைகள் நிறைவேறிய ஒருவனுக்கு தன்னுடைய கடைசி காலத்தில் தனக்கு இருக்கக்கூடிய சிக்கலை அடைவு ஊக்கியாக எடுத்துக்காட்டி தானம் செய்து வாழ வேண்டும் என்ற அடைப்பு ஊக்கத்தை நோக்கி நகர்கிறது பழமொழி நானூறு.


மற்றும் ஒரு இடத்தில் இதே போன்ற தானம் குறித்த கருத்தை கூறும் பழமொழி நானூறு, செல்வம் கொடுக்க கொடுக்கவே பெருகும் என்ற எண்ணத்தை வெளிப்படுத்தும் இடத்தில், ஒரு கிணற்றை உவமையாக கூறுகிறது கிணறு எப்படி நீரினை இறக்க இரைக்க மீண்டும் மீண்டும் ஊறிக் கொண்டே இருக்கிறதோ அதுபோல செல்வம் கொடுக்க கொடுக்க வளர்ந்து கொண்டே இருக்கும் என்கிறது. இங்கு கிணற்றில் ஏற்கனவே இருக்க கூடிய நீர் என்பது அடிப்படை தேவைகள் பூர்த்தி பெற்ற நிலை என்று வைத்துக் கொள்வோம், இந்த நிலையில் புதிய ஊக்கிகள் ஊற்று கண்களாக அமைய, அதன் மூலம் அடுத்த அடைவு தேவைகள் பெருகிக்கொண்டே இருக்கிறது என்பதை நாம் எடுத்துக்காட்டின் வழி உணரலாம்.


இரப்பவர்க்கு ஈயக்குறைபடும்என் றெண்ணிக்

கரைப்பவர் கண்டறியார் கொல்லோ--பரப்பில்

துறைத்தோணி நின்றுலாம் தூங்குநீர்ச் சேர்ப்ப!

இறைத்தொறும் ஊறும் கிணறு.

(பழ.நா : 95)


முன்பு குறிப்பிட்டுள்ளதைப் போல செல்வம் நிறைந்த நிலை என்பது அடிப்படைத் தேவைகள் பூர்த்தியான நிலை, தானம் கொடுக்க வேண்டும் என்பது அடுத்த அடைவாக இருக்க வேண்டும் என்பதை மீண்டும் மீண்டும் அழுத்தி கூறுகிறது பழமொழி நானூறு. இந்த அடைவு தேவைகள் ஒரு மனிதனுக்கு பூர்த்தி அடையவில்லை என்றால், அந்த தேவையின் மீது இருந்த ஆர்வமும் அதன் மீது அவனுக்கு இருந்த பற்றுகளும் மனதளவில் மிகப்பெரிய சிக்கலையும் மனவியல் நோய்களையும் ஏற்படுத்தி விடுகிறது என்பதை உளவியல் உலகம் பல்வேறு இடங்களில் குறிப்பிட்டுக் கொண்டே இருக்கிறது.


அறிதல், புரிந்து கொள்ளுதல் சார்ந்த தேவைகள்


இந்த அறிதல் புரிந்து கொள்ளுதல் சார்ந்த தேவைகள் என்பது ஒரு மனிதனின் ஆளுமை திறத்தோடு தொடர்புடையவை ஆக அமைகிறது.  ஒரு மனிதன் தன்னை சூழ்ந்துள்ள சமுதாயம் அல்லது சூழலில் கூறுகளில் உள்ளன வற்றை தன்னுடைய புலன்களின் மூலமாக அறிய தொடங்குகிறான். கண்களின் மூலமாக காட்சிகளையும், செவியின் மூலமாக ஒலிகளையும், நாசியின் மூலமாக மணங்களையும், வாயின் மூலமாக சுவைகளையும், தோலின் மூலமாக தொடுதலையும் என தன்னுடைய புலன் உணர்வுகளின் மூலமாக தன்னைச் சுற்றியுள்ள தரவுகளை மனித மனம் அல்லது மனித ஆற்றல் அறிந்து கொள்கிறது இது ஒரு படிநிலை, இதனைத் தொடர்ந்து இதனின் முழுமை அடைந்த அல்லது உயர்வடைந்த நிலையாக முதல் எனும் தன்மை அமைகிறது. அதாவது மனிதன் தன்னுடைய புலன்களின் மூலமாக அறிந்த தரவுகளை தன்னுடைய மூளை அல்லது மனதோடு தொடர்பு படுத்தி அந்த தரவுகள் கொடுக்கும் தகவல்களின் தன்மையை தெரிந்து கொள்வதையே புரிந்து கொள்ளுதல் என்று உளவியல் விளக்குகிறது.


ஒருவருடைய ஆளுமையில் அறிதல், புரிதல் ஆகிய இந்த கூறுகள் மேம்பட்டதாக அமைந்து விடுமேயானால், அவனைச் சார்ந்து உள்ள சமூகத்தின் நலமும் மேம்பாட்டு நிலையை எய்துவிடும். ஒரு மனிதனுக்கு இந்த அறிதல் அல்லது புரிதலில் ஏற்படக்கூடிய சிக்கல்கள் அவனுடைய உளவியலில் மட்டுமல்லாது அவனைச் சார்ந்தவருடைய உளவியலிலும் சிக்கல்களை ஏற்படுத்த வல்லன என்பதை நாம் உணர்தல் வேண்டும். 


எடுத்துக்காட்டாக சொல்ல போனால் வீட்டில் நடைபெறும் ஏதேனும் ஒரு நிகழ்வில் ஒரு மனிதனுக்கு ஏற்படும் தவறான புரித லில் ஆதித்திருந்து உள்ள அர்த்தத்திற்கும் இறுக்கத்திற்கும் ஆட்படுத்தப்பட்டு மனம் முறிவு வரை இந்த நிலை நகசி கொண்டு போய் சேர்க்கிறது. அதனால் ஒரு மனிதனாகப்பட்டவன் இந்த அறிதலில் ஆக்கம் பெற்று, புரிதலோடு இந்த சமூகத்தை அணுகுவானேயேனால் அவன் மிகச்சிறந்த சமூகத்தில் பங்காக மாறிப் போகிறான்.

ஒரு தனி மனிதனுக்கு சமூக பங்கு என்பது அவனுடைய அறிதல் மற்றும் புரிந்து கொள்ளுதல் வாயிலாகவே விளக்குகிறது பின்வரும் சங்க வரிகள்,


"நெற்பல பொலிக பொன்பெரிது சிறக்க"(ஓரம்போகியார்.ஐங்.01)


"விளைக வயலே வருக விரவலர்"(ஓரம்போகியார்.ஐங்.02)


"பசியில் லாகுக பிணிசே ணீங்குக"(ஓரம்போகியார்.ஐங்.05)



"வேந்துபகை தணிக யாண்டுபல நந்துக"(ஓரம்போகியார்.ஐங்.06)


"அறம்நனி சிறக்க வல்லது கெடுக"(ஓரம்போகியார்.ஐங்.07)


"நன்றுபெரிது சிறக்க தீதுதில் லாகுக"(ஓரம்போகியார்.ஐங்.09)


"மாரி வாய்க்க வளநனி சிறக்க"(ஓரம்போகியார்.ஐங்.10)


"அரசுமுறை செய்க களவில் லாகுக"(ஓரம்போகியார்.ஐங்.08)


இக்கருத்தை பழமொழி நானூறு பின்வருமாறு விளக்கி காட்டுகிறது. நம்மோடு விரிந்து பழகியவர்கள் நல்ல தன்மை உடையவர்கள் இல்லாமல் போனாலும் அதனை அறிந்து கொண்டு, தனது சான்றான்மையால் புரிதலை ஏற்படுத்திக் கொண்டு, தன்னோடு ஊரறிய பழகியவன் நலம் வாழ அவனுக்கு உதவிகளை செய்து உணவளித்து பேண வேண்டியது நம்முடைய கடமை என்று பழமொழி நானூறு குறிப்பிடுகிறது.


பரியப் படுபவர் பண்பிலார் எனும்

திரியப் பெறுபவோ சான்றோர்--விரிதிரைப்

பாரெறியும் முந்நீர்த் துறைவ!

கடனன்றோ ஊரறிய நட்டார்க்கு உணா.

(பழ.நா : 125)



அழகியல் சார்ந்த தேவைகள்




தமிழர்களின் வாழ்வியல் சங்க காலம் தொட்டில் அழகியல் சார்ந்த அமைந்திருப்பதை நம்மால் காண முடிகிறது. நம்முடைய இலக்கியங்களிலும் அவையே வெளிப்படுகின்றன. பண்டைய தமிழர்கள் இலக்கியத்தில் மட்டுமல்லாது அவர்களின் வாழ்வியலிலும் அழகியல் உணர்வு மிக்கவர்களாகவே வாழ்ந்து இருக்கிறார்கள் என்பதை பண்டைய கால புதைபொருள் ஆய்வு முதல் இலக்கிய ஆதாரங்கள் வரை பல்வேறு தரவுகளின் மூலமாக நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது.


சங்க இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டுள்ள உவமைகள் உள்ளுறை இறைச்சி வருணனைகள் கற்பனைகள் போன்ற அனைத்திலும் இயற்கை மற்றும் எழில் மிக்க இருப்பதை நம்மால் பல்வேறு உதாரணங்களின் மூலமாக விளக்க முடியும். அப்படியான அழகிகள் உணர்வு மிக்கவர்களாகவே தமிழ் சமுதாயம் வாழ்ந்திருக்கிறது.


இந்த அழகியல் சார்ந்த தேவைகள் ரசனையின் அடிப்படையில் அமைகிறது. அழகு என்பது பார்ப்பவரின் ரசனையை பொறுத்து பல்வேறு தகைமை உடையதாக பரிணாமத்து கொண்டே இருக்கும் இந்த ரசனை முறை திறனாய்வு தான் அழகியல் சார்ந்த திறனாய்வுகளின் அடிப்படை கூறு என்பதை உணர்ந்த நிலையில் உளவியலில் இது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்த வல்லது என்பதையும் நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது.


அழகியல் சார்ந்த தேவையில் முறைமை, தூய்மை, அழகை ரசித்தல், உணர்தல், இயற்கையை ரசித்தல், இலக்கியச் சுவையை உணர்தல், போன்றவை அடங்கும் (பியூலா ரெய்னீஸ்.,உளவியல் கற்றலும் மனித மேம்பாடும்,இயல் - 7:ப.11)


சங்க கால மகளிர் கலை உணர்வு அவர்களின் ஆடை பாடல் போன்றவற்றில் பங்கு பெற்றதன் அடிப்படையில் ஒப்பனை சான்றுகளின் மூலமாகவும் நாம் அறிந்து கொள்ள முடிகிறது. சங்க கால மகளிரின் ஒப்பனை முறைகள் பல்வேறு படிநிலைகளில் அமைந்திருப்பதை நாம் காண முடிகிறது 


தன் மதிப்பு தேவைகள்


ஒவ்வொரு மனிதனின் உயர்நிலைத் தேவை என்பது தன்மதிப்பு தேவை என விளக்கப்படுகிறது. முழு மனவளர்ச்சி பெற்ற ஒவ்வொரு மனிதனுக்கும் தன்மதிப்பு குறித்த அக்கறையும் கவனமும் மிக அதிகமாகவே காணப்படுகிறது. பல்வேறு மனிதர்கள் கூடி வாழக்கூடிய இந்த சமுதாயத்தில் ஒவ்வொரு மனிதனும் தனக்கான தன் மதிப்பை உயர்த்தி காட்டவே முயல்கிறான், காடுகளில் எங்கெங்கோ அலைந்து திரிந்த மனிதன் நாடு அறிந்து ஊராகி ஓரிடத்தில் சேர்ந்து வாழ தொடங்கிய அன்றிலிருந்து ஒவ்வொருவனுக்குமான தன் மதிப்பு என்பது தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கிறது என்பதை நம்மால் காண முடிகிறது.


இந்த தன்மதிப்பு குறித்து பல்வேறு இலக்கியங்களும் பல்வேறு தகவல்களை பகிர்ந்து இருக்கின்ற போதிலும் பழமொழி நானூறு இந்த தன்மதிப்பு குறித்த பல்வேறு சிறப்பித்த கருத்துக்களை பதிவு செய்திருக்கிறது அவற்றை பின்வரும் பாடல்களின் வாயிலாக நம்மால் அறிய முடியும்


நீறூர்ந்தும் ஒட்டா நிகரில் மணியேபோல்

வேறாகத் தோன்றும் விளக்கம் உடைத்தாகிப்

தாறாப் படினும் தலைமகன் தன்னொளி

நூறா யிரவர்க்கு நேர்.

(பழ.நா : 226)


ஓடுகிற நீரின் நடுவே ஒரு மாணிக்கக் கல் இருந்தாலும் அது தன் ஒளியை மறைத்து கொள்வது இல்லை, அதுபோல சிறியவர்களிடம் கூடி இருந்தாலும் மிக்க பண்புடையவன் தன் பண்பில் இருந்து சிறிதளவு குறையாமல் உயர் பண்புமிக்கவனாகவே திகழ்கிறார் என்றும். எவன் ஒருவன் அப்படி பண்பு மாறாமல் இருக்கிறானோ அவனே சான்றோன் என்றும் இந்நூல் விளக்குகிறது.


உயர்ந்தவர் தன்னுடைய வாழ்க்கைத் தன்மையை விளக்கும் இந்நூலின் பாடல் கடும் பசியின் போதும் புலி புல்லை தின்பதில்லை அதுபோல உயர்ந்தார் தங்களுடைய குணத்திலிருந்து என்றைக்கும் மாற்றமடைந்து வாழ மாட்டார் என்பதை விளக்குகிறது.


ஒற்கத்தாம் உற்ற விடத்தும் உயர்ந்தவர்

நிற்வே நின்ற நிலையின்மேல்--வற்பத்தால்

தன்மேல் நலியும் பசிபெரி தாயினும்

புல்மேயா தாகும் புலி.

(பழ.நா : 226)


இவ்வாறு உளவியல் சார்ந்த பல்வேறு சிக்கல்களை ஆராய்ந்த நம் இலக்கியவியலாளர்கள் அந்த சிக்கல்களுக்கான தீர்ப்புகளையும் அதற்கான காரணங்களையும் கண்டறிந்து அவற்றை இலக்கியத்தின் வாயிலாகவே மக்களிடம் கொண்டு சேர்த்து மக்கள் உளவியல் சிக்கல்களில் இருந்து வெளியேறி உளவியல் ஆரோக்கியம் பெற்று வளமான வாழ்வினை வாழ வழி அமைத்து தந்துள்ளனர்.


(கட்டுரையாளர்: முனைவர் வி.புவனேஸ்வரி, உதவிப் பேராசிரியர், தமிழ்த் துறை, ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரி, ஈரோடு மாவட்டம்.)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

எலும்பை உடைப்பதாக பேச்சு: திமுக எம்எல்ஏ., மார்க்கண்டேயன் கைது - 3 பிரிவுகளில் வழக்கு

news

"சட்டத்தின் ஆட்சியா, சாத்தானின் ஆட்சியா?" – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

news

டெல்லி ஜந்தர் மந்தரில் தீவிரமடைந்த போராட்டம்: நாடாளுமன்ற கதவுகள் மூடல்

news

Monday Motivation: வாழ்த்த வயதில்லை என்போரே.. வசைமாரிப் பொழிய வயது தடையில்லையோ!

news

சிந்தனைச் சிதறல்.. தொடங்குவதற்கு முன்பு பலமுறை யோசியுங்கள்!

news

அஸ்தினாபுரம் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள்.. மாணவர்களுக்கு பரிசு

news

தமிழ்நாட்டில் மீண்டும் ஃபோர்டு கார் உற்பத்தி? முதலமைச்சர் விஜயுடன் முக்கிய ஆலோசனை!

news

மாங்கனி நகராம் சேலத்தில் களை கட்டும்.. கோட்டை மாரியம்மன் ஆடி திருவிழா 2026

news

கல்விச் செம்மல்.. தாயுள்ளம் கொண்ட சேவைத் தாய்.. வாழ்த்துகள் மதனகுமாரி அம்மா!

அதிகம் பார்க்கும் செய்திகள்