- வ. சரசுவதி
மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள ஒரு அமைதியான மலைக்கோவில் இது.நான்கு புறமும் மலைகளால் சதுரவடிவில் சூழப்பட்டுள்ளதால் இப்பெயர் பெற்றது. இங்கு ஏராளமான மருத்துவ மூலிகைகள் உள்ளன.மருத்துவ மூலிகைகள் இருப்பதை உணர்ந்த சித்தர்கள் இங்கு தங்கி சித்தமருத்துவம் செய்ததாக கூறப்படுகிறது. இப்பொழுதும் கூட சித்தர்கள் சிவபெருமானை வணங்கி தியானம் செய்து வருவதாக உணர்ந்த சில பக்தர்கள் கூறுகின்றனர்.
இங்குள்ள சிவபெருமான் தலையில் அடிபட்டு சற்று சாய்ந்த நிலையில் இருப்பது சிறப்பாக கருதப்படுகிறது.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகில் தாணிப்பாறையில் நுழைவுவாயில் அமைந்துள்ளது.தற்பொழுது தினசரி அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இங்கு நுழைவதற்கு வனப்பாதுகாப்புத்துறையின் அனுமதி அவசியம். காலை 6.00 மணி முதல் 11.00 மணி வரை மட்டுமே அனுமதி உண்டு.ஐந்து ரூபாய் நுழைவுச்சீட்டு வாங்கி செல்லவேண்டும்.மலையின் மேல் தங்க அனுமதி இல்லை.
நுழைவுவாயில்

உள்ளே நுழைந்து சற்று தூரம் சென்றபின் ஆசீர்வாத விநாயகர் நம்மை மலையேற்றத்திற்கு ஆசீர்வாதம் செய்து வழி அனுப்புவார்.அவரின் அருகிலேயே தங்ககாளியம்மன் கோவில் அதன் முன்புறம் ஒரு சிறிய பைரவர் சிலை இவர்கள் அனைவரையும் தரிசித்து விட்டு சிறு பாறைகளில் ஏறினால் சிலு சிலு காற்றுடன் ஓடைகளில் சல சல என சத்தத்துடன் தண்ணீர் செல்வதை ரம்மியமாக ரசித்துக்கொண்டே சென்றால் பேச்சியம்மனையும் ,கருப்பசாமியையும் தரிசித்து விட்டு மன தைரியத்துடன் மலை ஏற ஆரம்பிக்கலாம்.
மலையில் ஏற ஏற சற்று மூச்சு முட்டும்.ஓய்வெடுக்க நினைத்தால் அத்தி மரங்கள் சூழ்ந்த மாங்கனி ஓடையில் அமர்ந்து தண்ணீர் அருந்தி சில்லென காற்றுடன் மலையேற்றம் தொடங்கலாம். பின்னால் வருபவர்கள் "ஏய் பாத்து பாறையை பிடிச்சி ஏறு அங்கே வழுக்கிரும்" என குரல் கொடுப்பர். திரும்பி பார்க்க பயம் வரும். ஏன்னா கீழே பாதாளத்தில் பள்ளம், பள்ளத்தில் உள்ள தண்ணீரில் சிறிதும் பயமில்லாமல் ஆனந்தமாக குளித்துக் கொண்டிருப்பர். சற்று தவறினாலும் சிரமம் தான், ஆம் அதனால் தான் அதற்கு வழுக்குப்பாறை.

இங்கிருந்து சற்று தூரம் கடந்தால் யார் காலிலும் மிதிபடாமல் ஓடையில் வரும் தண்ணீரை தாகத்திற்கு அருந்தி செல்லலாம். அங்குள்ள பாறைகளில் அமர்ந்து நம் கையில் வைத்துள்ள சாப்பாடு மற்றும் திண்பண்டங்களை சற்று நிம்மதியுடன் சாப்பிட்டு விட்டு செல்லலாம். மேலே செல்ல செல்ல ஆஞ்சநேயரின் தொல்லைகள் அதிகரிக்க தொடங்கிவிடும். அப்பாடா என்ற மனநிம்மதியுடன் மலையேற தொடங்கினால் சங்கிலியுடன் ஒரு பாறை. ஆத்தாடி இது என்ன இம்புட்டு ஒசரமா இருக்கு இதுல எப்பிடி ஏறுறதாம் என குரல்கள் ஒலிக்கும்.

இங்கு இருக்கும் ஓடைகளில் தண்ணீர் நிறைய செல்லும். காட்டாற்று வெள்ளம் வந்தால் ஆபத்து அதிகம் உண்டு.மணி கணக்கில் பாறையின் மேல் குரங்குகளின் உதவியுடன் அமர வேண்டியதுதான்.இந்த அனுபவத்தை நான் அடைந்திருக்கிறேன். மழை நின்றும் கூட பல மணிநேரம் தண்ணீர் வரும்.ஆபத்து என்றாலும் கூட சதுரகிரி ஆண்டவன் அருளால் நமக்கு ஒன்றும் நேராது என்ற இறை நம்பிக்கை. இங்கு செல்லும் தண்ணீரில் நம் கால்களை வைத்து ஓசியில் மீன்களை கடிக்கச்செய்யலாம்.நன்கு அனுபவித்து செல்லலாம். இந்த சங்கிலிப்பாறையில்....
சற்று மூச்சிறைக்க ஏறினால் கோணத்தலைவாசல். இந்த பாதையின் அமைப்பு Z வடிவில் இருக்கும். அடுத்து வருவது காராம்பசுத்தடம். இதற்கு ஒரு கதையும் உண்டு.தினமும் பசு வந்து சிவபெருமானுக்கு தன் பாலை அபிஷேகம் செய்ய சென்ற தடம் என கூறுவர். இங்கு கடந்து செல்ல,கோரக்கர் குகை இங்கு சற்று அமர்ந்து தியானம் செய்து செல்லலாம். சோடா லெமன் சோடா, சுக்காப்பி சுக்காப்பி என சத்தம் கேட்கும். சற்று இளைப்பாறி சூடான கேப்பை ரொட்டியையும் சேகர் அண்ணணின் கடையில் சுவைத்துச் செல்லலாம்.
ஈசனை தரிசித்து விட்டு வரும் பக்தர்களிடம் கோவில் பக்கத்துல வந்துருச்சா என கேட்டால் இந்தா இருக்கு என கூறிச்செல்வர். ஆனால் அங்கு இரண்டு லிங்கம் இருக்கும். இதுதான் கோவிலா என கேட்டால் இது இரட்டைலிங்கம் கோவில் என்பர். சதுரகிரியான் எங்கே இருக்கார் என கேட்டால் ஒரு சிலர் மட்டும் உண்மையை கூறிச்செல்வர். நீங்க பாதி தூரம் வந்துட்டீங்க சிவா இனி சீக்கிரம் போயிரலாம் என கூறிச்செல்வர். மூச்சிறைக்க ஏற்றிச்சென்றால் அங்கு சிறு கடையில் நமக்குத் தேவையானதை வாங்கி சாப்பிட்டு விட்டு சற்று இளைப்பாறி செல்லலாம். இந்த இடத்திற்கு பெயர் தான் சின்ன பசுக்கிடை.

பசு மேய்ப்பவர்கள் ஓய்வெடுக்கும் இடம் என்பதால் இப்பெயர் வந்தது என்பர். இங்கிருந்து சற்று சமவெளிப்பகுதியில் நடந்து செல்லலாம்.அடுத்து வருவது காற்றுதூக்கிபாறை. இங்கு படுத்தும் கூட ஓய்வெடுத்து செல்லலாம்.ஓய்வடுத்துவிட்டு நடந்தால் நாவலூற்று. இங்கு இருக்கும் தண்ணீரை அருந்தி சென்றால் சர்க்கரை நோய் வராது என்று கூறுவர்.அதனால் இந்த நீரை வீட்டிற்கும் எடுத்து வருவதுண்டு சிலர்.
அடுத்து நடக்க நடக்க வெள்ளை வெள்ளேறென ஒரு பாறை. அதனால் தானோ என்னவோ அப்பாறைக்கு பச்சரிசி பாறை என்ற பெயருடன் அழைக்கப்படுகிறது. அப்பாடி முக்கால்வாசி தூரம் வந்தாச்சி என சில குரல்கள் கேட்கும். இந்த பாறையின் அருகில் சிலர் மணல் அள்ளிச்செல்வர். எதற்கு என கேட்கும் போது விதைக்கும் போது கலந்து விதைத்தால் நல்ல மகசூல் கிடைக்கும் என்பர். சிலர் அடுக்கடுக்காக கற்களை அடுக்கிச்செல்வர்.அவர்களிடம் கேட்டால் வீடு கட்டுவதற்கு வேண்டுதல் என்பர்.
அழகான இடங்களை மலைகளுக்கிடையில் ரசித்து செல்ல வனதுர்கையை வணங்கி செல்லலாம்.இங்கு வணங்கி சென்ற கொஞ்ச தூரத்தில் அய்யனை தரிசித்து விடலாம் என்று சென்றால் இது தான் பெரிய பசுக்கிடை என்பர்.இந்த இடத்திலிருந்து சற்று சமவெளிப்பகுதியில் செல்லலாம். ஓடையில் வரும் தண்ணீரில் பக்தர்கள் குளித்து செல்வர். கடந்து சென்றால் சிறு அருவி போல் தண்ணீர் விழும்.இங்கு ஆண்கள் மட்டும் நீராடுவார்கள். நீராடிவிட்டு பலாமரத்துக்கு அடியில் தினம்தோறும் பலா காய்களுடன் இருக்கும் பிலாவடிகருப்பனையும்,விநாயகரையும் தரிசித்து செல்லலாம்.
சற்று தூரம் சென்று சிறு சிறு ஓடைகளை கடந்தால் அருள்மிகு சுந்தர மகாலிங்கம் ஆலயம் என்ற பெயருடன் கூடிய தோரணவாயில் தெரியும். தோரணவாயிலில் நுழைந்தவுடன் வலது பக்கத்தில் சுந்தரமூர்த்தியை தரிசித்து செல்லலாம். படிகளில் செல்ல செல்ல இரு பக்கமும் மரங்களுடன் கூடிய நடைபாதையில் சென்று வலப்புறம் திரும்பிப்பார்த்தால் சாய்ந்த நிலையில் வந்துட்டியா என்னை பார்க்க என்று கேட்பது போல் இருக்கும்.அமைதியான சூழலில் ஈசனின் அருகில் அமர்ந்து தரிசித்துவிட்டு தியானம் செய்து விட்டு அப்பாடி இனிமே வரமாட்டேன் பா என்று வாய் தான் கூறுமே தவிர,வீட்டிற்கு வந்த பின் அடுத்து எப்போ போகலாம் என தோன்றிக்கொண்டே இருக்கும்.
இங்கு செல்ல மூன்று வழிகள் உண்டு.

1. தாணிப்பாறை வழி.
2. சாப்டூர் சென்று வாழைத் தோப்பு வழி.
3. தேனி வருசநாட்டு வழி.
தாணிப்பாறை வழி மலையின் அடிவாரம் விருதுநகர் மாவட்டம். சதுரகிரி மலை உள்ளது மதுரை மாவட்டம்.
தினம்தோறும் காலை 6.00 மணிபூஜை ,அமாவாசை,பௌர்ணமி பூஜைகள் நடைபெறும். ஆடி அமாவாசை பூஜை மிகவும் சிறப்பு வாய்ந்தது. தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையால் தினசரி அன்னதானமும் நடைபெறுகிறது.
(சரசுவதி சிவக்குமார், திருமங்கலம், மதுரை)
வாயில் வடை சுடும் அரசு இது அல்ல... சாதனை திட்டங்களை செயல்படுத்தி வரும் அரசு: முதல்வர் முக ஸ்டாலின்!
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு தமிழக அரசின் 8 திட்டங்கள் குறித்து அறிவிப்பு: முதல்வர் முக ஸ்டாலின்
பாமக.,வில் இருந்து ஜி.கே.மணி நீக்கம்...அன்புமணி அறிவிப்பு...என்ன செய்ய போகிறார் ராமதாஸ்?
ராஜ்ய சபா சீட் கொடுத்தால் மட்டுமே பேச்சுவார்த்தை: பிரேமலதா விஜயகாந்த் அதிரடி!
சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' பட கதை திருட்டு புகாரில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சம வேலைக்கு சம ஊதியம்: போராடிய ஆசிரியர்கள் மீது அடக்குமுறை: அண்ணாமலை கண்டனம்!
ஜனநாயகன் இசை வெளியீட்டுக்காக மலேசியா புறப்பட்டார் விஜய்
போராட்டத்தில் திடீர் பரபரப்பு... மயங்கி விழுந்த ஆசிரியை... பதற்றத்தில் போராட்டக் களம்!
கரை தேடி வந்து உயிர்களை உள்வாங்கிய தினம்...!
{{comments.comment}}