சென்னை : தவெக தலைவர் விஜய், பிரச்சாரத்தை துவக்கிய முதல் நாளிலேயே நேற்று திட்டமிட்டிருந்த 3 இடங்களில் பிரச்சாரத்தை ரத்து செய்துள்ளார். பாதுகாப்பு இல்லை என்ற காரணத்தால் அவரது பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டதாக தவெக சார்பில் தெரிவிக்கப்பட்டது.
தவெக தலைவர் விஜய் நேற்று பெரம்பூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்து விட்டு, தனது பிரச்சாரத்தை பெரம்பூர் தொகுதியிலேயே துவக்கினார். முதல் நாளில் அவர், முதல்வர் மு.க.ஸ்டாலினின் கொளத்தூர் உள்ளிட்ட 6 தொகுதிகளில் பிரச்சாரம் செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் பெரம்பூர், கொளத்தூர் உள்ளிட்ட 3 தொகுதிகளில் மட்டுமே விஜய் பிரச்சாரம் செய்தார். வில்லிவாக்கம், அண்ணாநகர் உள்ளிட்ட மீதமுள்ள 3 தொகுதிகளில் விஜய்யின் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டது. மற்றொரு நாளில் அவர் பிரச்சாரம் செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
என்ன காரணம்?

விஜய் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டு, அனுமதி கேட்கப்பட்டிருந்த தொகுதிகளில் பாதுகாப்பு குறைபாடுகள் இருந்ததாகவும், தன்னெழுச்சியாக வந்த மக்களை கட்டுப்படுத்தி போதிய பாதுகாப்பு தர போலீசார் தவறி விட்டதன் காரணமாக 3 தொகுதிகளில் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தவெக பொதுச் செயலாளர் புஸி ஆனந்த் தெரிவித்திருந்தார்.
விஜய் பிரச்சாரம் செய்ய செல்லும் இடங்களில் சதி நடந்துள்ளது. மற்றொரு கரூர் சம்பவம் நடந்து விடக் கூடாது என்ற காரணத்தால் தான் பிரச்சாரத்தை ரத்து செய்தோம் என தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்தார்.
என்ன செய்ய போகிறார் விஜய்?
தவெக தலைவர் விஜய் இதற்கு முன் மாவட்டந்தோறும் சென்று பிரச்சாரம் செய்து வந்தார். கரூர் சம்பவத்திற்கு பிறகு அவர் பிரச்சாரம் செய்வதற்கு பல இடங்களில் போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் அதை நிர்வாகிகள் சந்திப்பு கூட்டமாக தவெக சார்பில் மாற்றினர். ஆனால் அதில் பிரச்சனைகள் ஏற்பட்டதால் தொடர்ந்து விஜய்யின் பிரச்சாரத்திற்கு பல கட்டுபாடுகளும் விதிக்கப்பட்டன.
தற்போது தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வருகிறது. இதில் விஜய் இரண்டு இடங்களில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். அதோடு தவெக 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதால் கட்சியின் தலைவர் என்ற முறையில் ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று, அந்த தொகுதி வேட்பாளரை அறிமுகம் செய்து, அவருக்கு ஆதரவாக விஜய் ஓட்டு கேட்டு, பிரச்சாரம் செய்ய வேண்டும்.
சென்னையிலேயே இப்படியா?
முதல் நாள் பிரச்சாரத்தில், அதுவும் பெரு நகரமான சென்னையிலேயே பாதுகாப்பு பிரச்சனை ஏற்படுவதாக சொல்லுகிறார்கள் என்றால், மற்ற மாவட்டங்களில் இருக்கும் கிராமப்புற பகுதிகளுக்கு சென்று விஜய் எப்படி பிரச்சாரம் செய்வார் என்ற கேள்வி எழுந்துள்ளது? அது மட்டுமல்ல கிராமப்புற பகுதிகளில் தான் விஜய்க்கு அதிகமான ரசிகர்கள் உள்ளார்கள்.
அப்படி இருக்கும் போது பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டால் விஜய் எப்படி 234 தொகுதிகளுக்கும் சென்று பிரச்சாரத்தை நிறைவு செய்வார்? 3 தொகுதிகளில் விஜய்யின் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டதற்கு தவெக.,வினர் கூறி உள்ள காரணங்கள் விஜய்யின் அடுத்தடுத்த பிரச்சாரங்களுக்கு பெரும் சவாலாக இருக்கும் என்றே நினைக்க வைக்கிறது.
21 நாட்களில் 231 தொகுதிகள் :
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 23 நாட்கள் மட்டுமே உள்ளது. ஏப்ரல் 21ம் தேதி இரவுடன் பிரச்சாரத்தை நிறைவு செய்ய வேண்டும். இந்த 21 நாட்களில் விஜய் எப்படி 231 தொகுதிகளுக்கும் சென்று பிரச்சாரம் செய்து, தேர்தல் பணிகளையும் கவனிக்க போகிறார்? என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழுந்துள்ளது.
சென்னையை போன்ற மற்ற மாவட்டங்களில் உள்ள தொகுதிகளிலும் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டால் விஜய்யால் 234 தொகுதிகளுக்கும் சென்று பிரச்சாரம் செய்ய முடியாமல் போகும். இது தவெக.,விற்கு மிகப் பெரிய பின்னடைவையும், நெருக்கடியையும் தேர்தலில் ஏற்படுத்தும். இதனால் விஜய் இந்த நெருக்கடியை எப்படி சமாளிக்க போகிறார் என்பது தான் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார்.. சிறைப்பட்டார் செக்கிழுத்தார் அது செக்கல்ல!
ஆசிரியர் ஓர் அகல்விளக்கு
{{comments.comment}}