என்னை எதிர்த்து என் அண்ணி போட்டியிட்டா எனக்கென்ன?.. சந்திக்க நான் ரெடி.. சுப்ரியா சூலே அதிரடி!

Feb 18, 2024,06:07 PM IST

மும்பை: லோக்சபா தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் (சரத்சந்திர பவார்) கட்சியின் சுப்ரியா சூலேவுக்கு எதிராக, அவரது சித்தி போட்டியிடக் கூடும் என்று பரபரப்பான தகவல் வெளியாகியுள்ள நிலையில், அதைப் பற்றி தான் கவலைப்படவில்லை என்று சுப்ரியா சூலே கூறியுள்ளார். தேர்தல்னு வந்து விட்டால் எதிர்த்து நிற்பவர் குடும்பத்தைச் சேர்ந்தவரா இல்லையா என்று பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்றும் சுப்ரியா கூறியுள்ளார்.


மகாராஷ்டிராவில் இரு பெரும் கட்சிகளான சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகியவை உடைக்கப்பட்டு விட்டன. சிவசேனாவை உடைத்து ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஒரு கட்சியாக்கி விட்டனர். இன்னொரு பிரிவு உத்தவ் தாக்கரே கையில் உள்ளது. அதேபோல தேசியவாத காங்கிரஸையும் உடைத்து விட்டனர். ஒரு பிரிவுக்கு அஜீத் பவாரை தலைவராக்கியுள்ளனர். அஜீத் பவாரின் சித்தப்பா சரத் பவார் வசம் இரண்டாவது பிரிவு உள்ளது.


இதில் அஜீத் பவார் மற்றும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான கட்சிகளுக்கே தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளது. மற்ற இருவருக்கும் கட்சிப் பெயரை மாற்ற அறிவுறுத்தியுள்ளது. அவர்களும் வேறு வழியில்லாமல் பெயரை மாற்றிக் கொண்டு இயங்கி வருகிறார்கள்




இந்த நிலையில் அஜீத் பவார் தனது மனைவி சுனித்ரா பவாரை,  சித்தப்பா மகள் சுப்ரியா சூலேவுக்கு எதிராக களம் இறக்க திட்டமிட்டுள்ளார். இதனால் பவார் சகோதரர்கள் குடும்பச் சண்டை மேலும் பெரிதாகும் அபாயம் எழுந்துள்ளது. மகாராஷ்டிர அரசியலிலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


சுப்ரியா தற்போது பாராமதி லோக்சபா தொகுதியில் உறுப்பினராக உள்ளார். இந்தத் தொகுதியில்தான் தனது மனைவி சுனித்ராவை நிறுத்த அஜீத் பவார் திட்டமிட்டுள்ளாராம்.  தற்போது அஜீத் பவார் தலைமையிலான கட்சிக்கே தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியிருப்பதால் சின்னம் தனக்கு சாதகமாக இருக்கும் என்று அஜீத் பவார் கருதுகிறாராம்.


சரத் பவார் மற்றும் அவரது மகள் தொடர்ந்து போட்டியிட்டு வரும் தொகுதிதான் பாராமதி. ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்தது இந்தத் தொகுதி. இத்தொகுதியில் பவார் குடும்பத்திலிருந்து சரத் பவார் கடந்த 1984ம் ஆண்டு முதல் முறையாக எம்.பி. ஆனார்.  அதன் பின்னர் இடையில் ஜனதாக் கட்சிக்கு தொகுதி மாறியது. அதன் பின்னர் 1991ம் ஆண்டு மீண்டும் பவார் குடும்பத்துக்கு தொகுதி மாறியது. இந்த முறை அஜீத் பவார் போட்டியிட்டு வென்றார். பின்னர் தனது சித்தப்பாவுக்காக அவர் ராஜினாமா செய்ய இடைத் தேர்தலில் சரத் பவார் வெற்றி பெற்றார். 


இடையில் 1994ம் ஆண்டு சரத் பவாரிடமிருந்து தொகுதி பாபுசாகேஹ் தீத்தே என்பவருக்கு மாறியது. மீண்டும் 1996ம் ஆண்டு தொகுதி சரத் பவார் வசம் வந்தது. அன்று முதல் இன்று வரை பவார் குடும்பத்திடம்தான் பாராமதி தொகுதி இருக்கிறது. பாராமதி தொகுதியில் 2009ம் ஆண்டு வரை எம்.பியாக இருந்தார் சரத் பவார்.  மொத்தம் 6 முறை எம்.பியாக அவர் இருந்துள்ளார்.


2009ம் ஆண்டு முதல் தொகுதி சரத் பவாரின் மகள் சுப்ரியா சூலேவிடம் உள்ளது. 3வது முறையாக அவர் எம்.பியாக இருந்து வருகிறார். இந்த நிலையில்தான் கட்சி இரண்டாக உடைந்து தொகுதியையும் சித்தப்பா குடும்பத்திடமிருந்து பறிக்க தனது மனைவியை களம் இறக்கத் திட்டமிட்டுள்ளார் அஜீத் பவார்.


அஜீத் பவாரின் மனைவி சுனித்ரா பவார் சமூக சேவகர் ஆவார். அவரது பிறந்த வீடும் அரசியல் குடும்பப் பின்னணி கொண்டதுதான். அவரது அண்ணன் பத்மசின் பாட்டீல் மூத்த அரசியல் தலைவர் ஆவார், முன்னாள் அமைச்சரும் கூட. அஜீத் பவார் - சுனித்ரா தம்பதிக்கு ஜெய், பார்த் என்று இரு மகன்கள் உள்ளனர். மூத்தவரான ஜெய் குடும்ப பிசினஸைக் கவனித்துக் கொள்கிறார். பார்த் அரசியலில் உள்ளார். 2019 லோக்சபா தேர்தலில் இவர் மாவால் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.


Environmental Forum of India என்ற என்ஜிஓ நிறுவனத்தை 2010ம் ஆண்டு தொடங்கி நடத்தி வருகிறார் சுனித்ரா பவார். இதுதவிர வித்யா பிரதிஷ்தான் என்ற கல்வி நிறுவனத்தின் அறங்காவலராகவும் இருக்கிறார் சுனித்ரா.


யார் போட்டியிட்டால் எனக்கென்ன.. சுப்ரியா சூலே




இதற்கிடையே,  தனக்கு எதிராக தனது அண்ணி போட்டியிடப் போவதாக வெளியான செய்திகள் குறித்து சுப்ரியா சூலே கருத்து தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து சுப்ரியா சூலே கூறுகையில்,  இதை எப்படி குடும்பச் சண்டை என்று சொல்ல முடியும். யார் வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிடலாம். அதுதான் ஜனநாயகம்.  எங்களது குடும்பம் மிகப் பெரியது. அங்கு தகுதியானவர்கள் நிறையவே உள்ளனர்.


அவர்களிடத்தில் வலுவான வேட்பாளர் இருந்தால் தாராளமாக நிறுத்தட்டும்.. நானும் அவர்களுடன் விவாதம் நடத்தத் தயார்.  கொள்கை ரீதியான போட்டியாகவே இது இருக்கும். வேட்பாளரை முடிவு செய்யட்டும், விவாதத்திற்கு நாள் குறிக்கட்டும், இடத்தையும் சொல்லட்டும்.. நான் விவாதிக்கத் தயார்.. மக்கள் முடிவு செய்யட்டும் என்றார் சுப்ரியா சூலே.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்