அடுத்த வாரம் மின்வாரிய வெள்ளை அறிக்கை...அமைச்சர் நிர்மல்குமார் அறிவிப்பு

Jun 18, 2026,02:59 PM IST

சென்னை : தமிழக அரசின் நிதி நிலைமை தொடர்பான வெள்ளை அறிக்கையை சமீபத்தில் தமிழக நிதியமைச்சர் மரியா வில்சன் வெளியிட்டார். இது கடந்த இரண்டு நாட்களாக தமிழக அரசியலில் விவாதப் பெருளாக மாறி வரும் நிலையில், அடுத்த வாரம் மின்வாரியம் தொடர்பான வெள்ளை அறிக்கையை வெளியிட உள்ளதாக தமிழக மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் இன்று அறிவித்துள்ளார்.


மின்வாரிய நிலை குறித்து வெள்ளை அறிக்கை:

தமிழக மின்சார வாரியத்தின் தற்போதைய நிதி நிலைமை மற்றும் செயல்பாடுகள் குறித்து பொது மக்களுக்குத் தெளிவுபடுத்தும் நோக்கில், அடுத்த வாரம் மிக முக்கியமான 'வெள்ளை அறிக்கை' ஒன்று வெளியிடப்படும் என்று அமைச்சர் நிர்மல் குமார் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். மின்வாரியத்தில் நிலவும் நிர்வாகச் சிக்கல்களைச் சீரமைப்பதற்கான முதற்கட்டமாக இது பார்க்கப்படுகிறது.


லஞ்ச ஒழிப்பும் நிதிச் சேமிப்பும்:




ஒவ்வொரு அரசுத் துறையிலும் நிலவி வரும் பல்வேறு நிர்வாகப் பிரச்சினைகளைக் கண்டறிந்து, அவற்றை முழுமையாகச் சரிசெய்ய முதலமைச்சர் விஜய் தீவிரமாக முயன்று வருகிறார் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, "அரசுத் துறைகளில் லஞ்சத்தை முழுமையாகக் குறைத்தாலே, அரசுக்குச் சேர வேண்டிய நிதியை பெருமளவில் சேமிக்க முடியும்" என்று முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார். இதன் மூலம் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுவது தடுக்கப்பட்டு, மக்கள் நலத்திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும் எனத் தெரிகிறது.


நீர்நிலைகளைப் பாதுகாப்பதில் தவெக அரசின் உறுதி:

வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் புதிய உள்கட்டமைப்புகளுக்கு தவெக அரசு எப்போதுமே எதிரானது அல்ல என்பதை அமைச்சர் தெளிவுபடுத்தினார். அதே வேளையில், சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்களை அழித்து எந்தவொரு திட்டமும் செயல்படுத்தப்படாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது. குறிப்பாக, நீர்நிலைகளை முற்றிலும் அழித்துவிட்டு, புதிய விமான நிலையத்தை அமைக்கும் எண்ணம் தவெக அரசுக்குக் கிடையாது என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.


பரந்தூர் விமான நிலையப் போராட்டம்:

முன்னதாக, விவசாய நிலங்களையும் நீர்நிலைகளையும் பாதிக்கும் வகையில் திட்டமிடப்பட்ட பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்கு எதிராகவே தற்போதைய முதலமைச்சர் விஜய் தனது ஆரம்பக்கட்டப் போராட்டத்தைத் தொடங்கினார் என்பதை அமைச்சர் நிர்மல் குமார் இந்த ஊடகச் சந்திப்பில் நினைவு கூர்ந்தார். எனவே, மக்களின் வாழ்வாதாரத்தையும் இயற்கைச் சூழலையும் பாதுகாக்கும் வகையிலேயே அரசின் முடிவுகள் இருக்கும் என்பதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்