- தென்றல்
தமிழ்நாட்டுக் கோவில்களுக்குப் போனால் மறக்காமல் ஒரு சிற்பத்தைப் பார்க்கலாம்.. அதுதான் யாளி. தமிழகத்தின் பல கோயில் தூண்களில் செதுக்கப்பட்டிருக்கிறது யாளி. பிரசித்திபெற்ற மதுரை மீனாட்சிஅம்மன் கோயிலில் எங்கு திரும்பினும் யாளி சிற்பம்.
தமிழகக் கோவில்களில், உற்சவ மூர்த்தி உலாவரும் வாகனத்தில் யாளி! தெய்வச் சிலைக்கு பின்னாலிருக்கும் திருவாசியில் யாளி! தமிழ் இலக்கியப் பாடல்களில், புராணங்களில் யாளி! கல்வெட்டுக்களில் யாளி! தெய்வீக இசைக்கருவியாம் வீணையில் யாளி! கண்கவரும் வடிவமைப்பாய் பெண்களின் புடவைகளில் யாளி! கடவுளின் பூஜைக்குப் பயன்படுத்தப்படும் விளக்குகளில் கூட யாளி!
யாளி - என்ன இது?

மிருகங்களின் கலவையாக காட்சி தருகிறது. சிங்கம், யானை, முதலை, நாய், எலி போன்ற விதவிதமான முக அமைப்பு! யானையின் துதிக்கை, தந்தம், குதிரையின் உடல், பாம்பின் வால் என்று பல்வேறு அம்சங்களுடன் உடல் அமைப்பு! சிம்மயாளி, கஜயாளி, மகரயாளி, ஞமலியாளி, மூஷிகயாளி, அஸ்வயாளி, நரயாளி என்று பல வடிவங்களில் யாளி! இந்த வித்தியாசமான உருவத்தின் காலடியில் சிங்கமோ யானையோ மிதிபட்டுக் கிடக்கிறது!
பிரம்மாண்டமாய், வலிமைமிக்கதாய், வீரத்தின் வெளிப்பாடாய், மங்கல வடிவமாய் மர்மமானதாய் சித்தரிக்கப்பட்டிருக்கிறது இந்தப் பிராணி!
இத்தனை சிறப்புகளைக் கொண்ட இது, பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மறைந்து விட்ட தொன்மையான மிருகமா? கோடிக்கணக்கான ஆண்டுகளாக மாறிக்கொண்டே வந்திருக்கும் உயிரினங்களில் ஒரு விலங்கின் பழமையான தோற்றமா? அல்லது மனிதனின் விஸ்தாரமான அதீத கற்பனையா?
சங்க இலக்கிய பாடல்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது யாளி. இயற்கை சீற்றத்தால் அழிந்துவிட்டதாய் நம்பப்படும் குமரி கண்டத்திலிருந்து வந்து, ஆதி சோழர்கள் காலத்தில் வாழ்ந்திருக்கலாம், பசு போன்ற பிற மிருகங்களை இந்தக் கொடூர மிருகம் கொன்றதால், மனிதர்களால் வேட்டையாடி அழிக்கப்பட்டிருக்கலாம் என்பது சில இலக்கிய ஆர்வலர்களின் நம்பிக்கை.
இந்த அனுமானங்களைத் தள்ளிவிட்டு, யாளி வாழ்ந்ததற்கான அறிவியல் ஆதாரங்களைத் தேடினால், இருக்கிறதா?
யாளி போன்று உருவத்தில் பெரிய மிருகமான டைனோசர்கள் வாழ்ந்த ஆதாரங்கள் உலகளில் பல இடங்களில் கிடைத்திருக்கின்றனவே! அவற்றின் எலும்புகள், முட்டைகள், கூடுகள் புதைப்படிமங்கலாக தமிழ்நாட்டின் அரியலூரிலும் கிடைத்திருக்கின்றனவே! ஆனால் யாளி வாழ்ந்ததற்கான சான்றுகள் இருக்கின்றனவா?
இல்லை என்பதே பதில்!

இன்று வரை யாளியின் எலும்புகளோ புதைப்படிமங்கலோ எங்கும் எதுவும் கிடைக்கவில்லை! அப்படியொரு மிருகம் வாழ்ந்ததற்கான சாத்தியங்கள் மிக மிகக் குறைவு என்பதை அணித்தரமாய்ச் சொல்லுகிறது அறிவியல் உலகம்.
இப்படி இருவேறு பார்வைகள் இருக்க, இந்த வினோதமான உருவத்தை நம் முன்னோர்கள் ஏன் கோயில்களில் தெய்வத்திற்கு அருகில் வைத்தார்கள்? ஆழமான காரணம் கட்டாயம் இருக்குமல்லவா!
* சிங்கத்தின் துணிச்சல், யானையின் பலம், குதிரையின் வேகம் போன்ற மிதமிஞ்சிய ஆற்றலை ஒருங்கிணைத்து சித்தரிக்கப்பட்டிருப்பதால் மனிதர்களை, ஏன் கோயில்களைக் கூட காக்கும் பாதுகாவல் சின்னமாக இருக்கலாம்.
* இறை சக்தியின் பிரம்மாண்டத்தை வெளிப்படுத்துவதாக இருக்கலாம். கோவிலுக்குள் நேர்மறை ஆற்றல் நிறைந்திருக்க நிறுவப்பட்ட கட்டமைப்பாக இருக்கலாம்.
* அதிபயங்கரமான தீய சக்திகளை வெல்லும் பேராற்றலின் தன்மையாக இருக்கலாம். மனிதா, மமதை கொள்ளாதே, இயற்கையின் முன்னால் நீ தோற்றுப்போவாய் என்ற மனிதகுலத்திற்கான செய்தியாகக் கூட இருக்கலாம்.
* வருங்கால தலைமுறைக்கு மேன்மையான பண்புகளைக் கடத்த முயற்சித்திருக்கிறார்கள் என்றும் நம்பலாம்.
இயற்கை படைத்ததோ இல்லையோ, புனிதமாய் மங்கலகரமாய் தூய்மையானதாய் உன்னதமானதாய் சக்தியின் வடிவமாய், மனிதனால் படைக்கப்பட்டிருக்கிறது யாளி சிற்பம். ஒவ்வொரு யாளியும் ஒவ்வொரு பொருளைத் தாங்கி நிற்கிறது. உதாரணமாய், மனித முகம் கொண்ட நர யாளி எல்லையில்லா அறிவை, வெற்றியை உணர்த்துகிறது.
யாளி சிற்பங்கள் நிறைந்த கோயில்களில் கண்களை மூடி அமர்ந்திருக்கும் தருணங்களில், ஏன், வீட்டு பூஜை அறைகளில் யாளி விளக்கேற்றி வழிபடும் நேரங்களில் கூட, நேர்மறை ஆற்றல், சொல்லவொன்னா அமைதி அவ்விடத்தையும் நம் மனதையும் ஆக்கிரமிப்பதை அனுபவப்பூர்வமாக உணரலாம்.
(தென்றல் தொடர்ந்து வீசும்)
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}