நேரா கும்பகோணம் போய்ருங்க.. அங்கிருந்து ரூ. 750 மட்டும்தான் டிக்கெட்.. எதிலைங்க?.. "நவகிரக பஸ்"லங்க!

Feb 17, 2024,09:24 PM IST

சென்னை: "கும்போணம் போனோன".. அக்கம் பக்கத்து ஊர்களில் உள்ள கோவில்களுக்கெல்லாம் போகணும்னு ரொம்ப ஆசையா இருக்கும்.. ஆனால் ஊர் ஊரா பஸ் மாறிப் போக பலருக்கும் அயர்ச்சியாக இருக்கும்.. அதையெல்லாம் தீர்த்து வைக்க வந்து விட்டது நம்ம தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்.


கும்பகோணத்துக்கு போய்ட்டா போதும்.. அங்கிருந்து தலைக்கு வெறும் ரூ. 750 பயணக் கட்டணத்தில் நவகிரக சுற்றுலாவையே முடித்து விடலாம்.. கேட்கவே கிளப்பலா இருக்குல்ல.. படிச்சுப் பாருங்க.. இன்னும் அலப்பறையா இருக்கும்.


தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கும்பகோணம் கோட்டத்திலிருந்து இந்த அற்புதமான ஸ்கீமை களத்தில் இறக்கிருக்காங்க.. டீட்டெய்லா சொல்றோம் கேட்டுக்கங்க.. நீங்க என்ன பண்றீங்க.. நேரா கும்பகோணம் வந்துருங்க.. அங்க இருந்து காலைல 6 மணிக்கு பஸ் புறப்பட்டு நேரா திங்களூர் சந்திரன் கோவிலுக்குப் போய்ச்சேரும். அங்கு தரிசனத்தை முடித்துக் கொண்டு வண்டியை எடுத்தா, நேரா போய் ஆலங்குடி குரு பகவான் கோவில் தரிசனத்துக்கு காலை 7.15 மணிக்கு நிறுத்துவாங்க. சாமி கும்பிட்டதும் பசிக்கும்ல.. அதனால "பிரேக்பாஸ்ட்" பிரேக் விடுவாங்க.


சாப்பிட்டு முடிச்சதும் பஸ்ஸை காலைல 9 மணிக்கு மறுபடியும் எடுத்து நேரா திருநாகேஸ்வரம் போவாங்க.. அங்க யாரு இருக்கா?.. நம்ம ராகு பகவான்.. அவரை சப்ஜாடா தரிசனம் பண்ணிட்டு பஸ்ஸுல ஏறி உக்காந்தா, அடுத்த ஸ்டாப் சூரியனார் கோவில். பத்து மணிக்கெல்லாம் போய்ரலாம்.. சூரிய பகவானை நமஸ்காரம் பண்ணி திவ்யமாக தரிசனத்தை முடித்த பிறகு காலைல 11 மணி வாக்குல, கஞ்சனூர் சுக்கிரன் கோவிலுக்குப் போய்டலாம். அங்கே போய் சுக்கிரனை தரிசனம் பண்ணிட்டு 11.30 மணிக்கு அப்படியே வைத்தீஸ்வரன் கோவிலுக்கு வந்து சேருவோம். செவ்வாய் கிரக தரிசனத்தை சிறப்பாக முடித்து அப்படான்னா வெளியே வந்தா.. வயிறு கபகபன்னு பிறாண்டும்.. ஸோ, சூப்பரான லன்ச்சுக்குப் போய்ரலாம். 12.30 மணியில இருந்து 1.30 மணி வரை மத்தியான சாப்பாட்டு பிரேக்.. சூப்பரான மதிய உணவை முடித்து விட்டு, விசுக்குன்னு பஸ்ஸுல ஏறி உக்காந்தா, 2.30 மணிக்கெல்லாம் திருவெண்காடு வந்து விடலாம்.. அங்கு புதனாரைப் பார்த்து மன நிறைவோடு சாமியை கும்பிடுங்க. 




அதை முடித்த பிறகு 4 மணிக்கு கீழ பெரும்பள்ளம் வந்து சேருவோம். அங்கு கேது பகவான் தரிசனம். கடைசியாக 4.45 மணிக்கு திருநள்ளாறு போகிறோம்.. அங்கு சனி பகவான் தரிசனம்..  "தொட்ட சனி விலகட்டும்.. கொட்டு கொட்டென்று நலம் பல கொட்டட்டும்" என்று மனமுருக வேண்டிக் கொண்டு வெளியே வந்தால்.. அவ்வளவுதாங்க.. டூர் முடிஞ்சு போச்சு... அப்படியே 6 மணிக்கு பஸ்ஸை எடுத்தால், ராத்திரி 8 மணிக்கெல்லாம் கும்பகோணம் பஸ் ஸ்டாண்ட் வந்து சேர்ந்து விடுவோம்.. !


இத்தனை கோவில்களைச் சுற்றிப் பார்க்க ஒரு நபருக்கு ஜஸ்ட் ரூ. 750 மட்டும்தான் டிக்கெட் கட்டணம்.  பிப்ரவரி 24ம் தேதி முதல் இந்த சேவை தொடங்குகிறது. உங்களோட அன்றாட வேலைகள் எதும் பாதிக்காதபடி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள்ள மட்டும்தான் இந்த சிறப்புப் பஸ் இயக்கப்படுகிறது. எனவே மன நிறைவான வீக்என்ட் டூர் போகணும்னு ஆசைப்பட்டீங்கன்னா நேரா கும்பகோணம் வந்துருங்க.. மத்ததை இவங்க பாத்துப்பாங்க.


எல்லாஞ்சரி தலைவரே.. பஸ்ஸுக்கு எங்க போய் டிக்கெட் புக் பண்றது?.. அதுக்குத்தான் உங்க கைலயே TNSTC ஆப் இருக்கே.. எடுங்க, அழுத்துங்க.. புக் பண்ணிக்கங்க.. அது சரியா வராட்டி, www.tnstc.in இணையதளமும் இருக்கு.. அதிலேயும் போய் பண்ணிக்கலாம்.


நல்லா ஞாபகம் வச்சுக்கங்க.. பிப்ரவரி 24ம் தேதி இந்த அட்டகாசமான நவகிரக சுற்றுப்பயணம் தொடங்குகிறது.. பயன்படுத்திக்கங்க.. பலன் அடையுங்க!

சமீபத்திய செய்திகள்

news

மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!

news

குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமாக இருக்கிறார்.. 2 நாளில் டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை அறிக்கை

news

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. பாஜகவைச் சேர்ந்தவரே வேட்பாளராக இருப்பார் என தகவல்!

news

எஸ் பாங்க் கடன் மோசடி.. அனில் அம்பானிக்கு சொந்தமான 50 இடங்களில் ரெய்டு

news

குழந்தைகளை கொன்ற வழக்கு: குன்றத்தூர் அபிராமிக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

news

பாமக கட்சி பெயர், கொடியை டாக்டர் அன்புமணி பயன்படுத்தக் கூடாது.. டாக்டர் ராமதாஸ் உத்தரவு

news

தொடர் உயர்வில் இருந்த தங்கம் திடீர் சரிவு... அதுவும் சவரனுக்கு ரூ.1,000 குறைவு!

news

Aadi Amavasai: அமாவாசை தினத்தில் சமைக்க வேண்டிய காய்கறிகள் என்ன?

அதிகம் பார்க்கும் செய்திகள்