த.வெ.க. மாநாடு: வரலாறு காணாத கூட்டம் குவிவதால்.. 3 மணிக்கே மாநாடு தொடங்கும் என அறிவிப்பு!

Oct 27, 2024,11:58 AM IST

விக்கிரவாண்டி: தமிழக வெற்றிக் கழகம் மாநாட்டுக்காக எதிர்பார்த்ததை விட அதிக அளவில் கூட்டம் குவிந்து வருவதால் மாநாட்டை 4 மணிக்குப் பதில் 3 மணிக்கே தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு வி. சாலை பகுதியில் பிரமாண்ட திடலில் இன்று மாலை தொடங்குகிறது. இந்த மாநாட்டுக்காக ஏகப்பட்ட ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். ஆனால் இந்த ஏற்பாடுகள் எல்லாம் போதாது என்பது போல மிகப் பெரிய அளவில் கூட்டம் கூடி வருகிறது.


மாநாட்டிற்கு வருவோர் அமருவதற்காக 75000 இருக்கைகள் போடப்பட்டுள்ளன. ஆனால் காலையிலேயே பெருமளவில் தொண்டர்கள் உள்ளே வந்து அமர ஆரம்பித்து விட்டனர். இப்போதே கிட்டத்தட்ட அனைத்து இருக்கைகளும் நிரம்பி விட்டன. இதனால் இனிமேல் வருவோர் நின்று கொண்டுதான் மாநாட்டைப் பார்க்க நேரிடும் நிலை ஏற்பட்டுள்ளது.




அதேபோல பார்க்கிங் பகுதிகளும் காலையிலேயே நிரம்பி விட்டன. இன்னும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் நாலாபுறமிருந்தும் வந்து கொண்டுள்ளன. ஆயிரக்கணக்கானோர் வந்து கொண்டுள்ளனர். இதனால் எதிர்பார்த்ததை விட பல மடங்கு அதிக அளவிலான கூட்டம் திரளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தற்போது மாநாடு நடைபெறும் பகுதியில் கடும் வெயில் அடித்து வருகிறது. இதனால் பலர் மயக்கமடைந்துள்ளனர். பலருக்கு நீர்ச்சத்து குறைபாடு பிரச்சினையும் ஏற்படுகிறது. இதனால் முதலுதவி அளித்து அவர்களுக்கு குளுக்கோஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. நடுப் பகலில் இன்னும் வெயில் அதிகரிக்கும் என்பதால் மக்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் கூடுதல் மருத்துவ வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. 


வெயில் அதிகமாக இருப்பதாலும் கூட்டம் கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டிருப்பதாலும் மாநாட்டை 4 மணிக்குப் பதில் 3 மணிக்கே தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் தொண்டர்கள் உற்சாகமாகியுள்ளனர். கூட்டம் முன் கூட்டியே தொடங்குவதால் விஜய்யும் முன்கூட்டியே பேசும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.


இதற்கிடையே மாநாட்டு வளாகத்தில் குடிநீருக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் கூடுதல் குடிநீருக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் குடிநீர்ப் பிரச்சினை தீரும் என்றும் கட்சி பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.


விக்கிரவாண்டியில் கடும் கூட்ட நெரிசல்


மறுபக்கம், பல்வேறு டோல் கேட்களிலும் இலவசமாக தவெகவினரின் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன. அப்படி இருந்தும் கூட பெருமளவில் வாகனங்கள் வருவதால் விக்கிரவாண்டி டோல்கேட்டில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. குறிப்பாக தெற்கு, மேற்கு மாவட்டங்களிலிருந்து மிக அதிக அளவில் வாகனங்கள் வந்து கொண்டுள்ளன. 


அதிக அளவில் வாகனங்களும், தொண்டர்களும் வந்து கொண்டிருப்பதால், விக்கிரவாண்டி டோல்கேட்டுக்கு முன்பும் பின்பும் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதை சரி செய்யும் பணியில் தவெகவினரும், காவல்துறையினரும் ஈடுபட்டுள்ளனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்