Vijay Speech: டாஸ்மாக், பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள்.. விஜய் தொடப் போகும் ஹாட் டாப்பிக்குகள்!

Oct 27, 2024,10:42 AM IST

விக்கிரவாண்டி: தமிழக வெற்றிக் கழகம் மாநாட்டில் அதன் தலைவர் விஜய் பேசப் போகும் பேச்சில் இடம் பெறப் போகும் முக்கிய அம்சங்கள் குறித்து பலவேறு தகவல்கள் கசிய ஆரம்பித்துள்ளன.


அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த தவெக மாநாடு இன்று மாலை 4 மணிக்குத் தொடங்கவுள்ளது. மாலை 6 மணி வாக்கில் விஜய் மேடைக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு அவர் இரவு 7 மணி அளவில் பேசத் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் வரை பேசக் கூடும் என்று தெரிகிறது. இரவு 9 மணிக்குள் மாநாட்டை முடிக்க திட்டமிட்டுள்ளனர்.


இந்த நிலையில் விஜய்யின் பேச்சு குறித்து பெரும் ஆர்வம் எழுந்துள்ளது. காரணம், அவரது பேச்சில்தான் தவெகவின் நிலைப்பாடு குறித்து மக்கள் அறிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும். காரணம், ஏற்கனவே இங்கு பெரிய பெரிய கட்சிகள் ஆழமாக வேரூண்றி உள்ளன. அவற்றைத் தாண்டி மக்கள் மனதை விஜய் கவர வேண்டுமானால் அவர்கள் யாரும் செய்யாததை இவர் செய்ய வேண்டும் அல்லது செய்யப் போவதாக சொல்ல வேண்டும். எனவே விஜய்யின் இலக்கு என்ன, அவரது திட்டம் என்ன என்பதை மக்கள் புரிந்து கொண்டால்தான் அவரது கட்சிக்கான எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்பதால் விஜய் பேச்சு என்ன சொல்லப் போகிறது என்பதில் அனைவரின் கவனமும் குவிந்திருக்கிறது.


விஜய் சில முக்கியமான விஷயங்களை மக்கள் முன்பு வைக்கக் கூடும் என்ற தகவல் கசிந்துள்ளது. அதன்படி கீழ்க்கண்ட டாப்பிக்குகளை அவர் தொடக்கூடும்..


டாஸ்மாக் கடைகள் மூடல்




தமிழ்நாட்டு மக்கள் குறிப்பாக பெண்களின் மிகப் பெரிய எமனாக இருப்பது டாஸ்மாக் மதுக் கடைகள்தான். குடிப் பழக்கத்தால் ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான பெண்கள் விதவைகளாகியுள்ளனர். வாழ்க்கையைத் தொலைத்துள்ளனர். ஆயிரக்கணக்கான குடும்பங்கள் நடுத் தெருவுக்கு வந்துள்ளன. இந்தக் குடிப்பழக்கத்தால் குற்றச் செயல்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 


டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும், தமிழ்நாட்டில் முழு மது விலக்கைக் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை பாமக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால் கடந்த காலத்தில் ஆட்சியில் இருந்த அதிமுக அரசும் சரி , இப்போதைய திமுக அரசும் சரி இதுவரை முழுமையான மது விலக்கை அமல்படுத்தவில்லை. அதில் நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதாக தொடர்ந்து கூறி வருகின்றன.


இந்த இடத்தில் ஸ்கோர் செய்ய விஜய்க்கு வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டு பெண்கள் மத்தியில் மதுக் கடைகள் குறித்து கடும் எதிர்ப்பும், கோபமும் உள்ளது. அந்த சனியனை இழுத்து மூட வேண்டும் என்ற மனக் குமுறல் தொடர்ந்து அவர்கள் மத்தியில் இருந்து வருகிறது. அதுதொடர்பான உறுதியான, ஆக்கப்பூர்வமான, தெளிவான கொள்கையை விஜய் அறிவித்தால் மிகப் பெரிய ஆதரவு அவருக்கு கிடைக்கக் கூடும். அந்த வகையில் டாஸ்மாக் குறித்து விஜய் முக்கியமாக பேசலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.


மாணவ மாணவியர்




மாணவ மாணவியருக்கான திட்டங்கள் குறித்தும் விஜய் முக்கியமாக பேசக் கூடும்.  குறிப்பாக நீட்டுக்கு எதிரான திட்டவட்டமான திட்டத்தை அவர் அறிவிக்கலாம். மாணவ மாணவியருக்கான ஆக்கப்பூர்வமான திட்டங்களை அறிவிப்புகளை அவர் வெளியிட்டால் அவர்களது வாக்குகளை மொத்தமாக கவரும் வாய்ப்பு விஜய்க்குக் கிடைக்கும்.


ஏற்கனவே கல்வி நிதி உதவி விழா என்ற பெயரில் கடந்த 2 வருடங்களாக அவர் நடத்தி வரும் நிகழ்ச்சிகள் பலரையும் கவர்ந்துள்ளன. குறிப்பாக மாணவர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும், ஆர்வத்தையும், ஆதரவையும் அவை உருவாக்கியுள்ளன. அதை மேலும் பல மடங்கு அதிகரிக்கும் வகையிலான அறிவிப்புகளை அவர் வெளியிடலாம்.


மீனவர்கள் நலன்




தமிழ்நாட்டு மீனவ சமுதாயம் தொடர்ந்து பல இன்னல்களை சந்தித்து வருகிறது. அவர்களுக்கு இதுவரை எந்தவிதமான நிரந்தரத் தீர்வும் கிடைக்கவில்லை. குறிப்பாக இலங்கை கடற்படையினரிடம் சிக்கி தொடர்ந்து தமிழ்நாட்டு மீனவர்கள் உயிரைப் பறி கொடுத்து வருகின்றனர். வாழ்வாதாரங்களை இழந்து நிற்கின்றனர். விஜய்யின் பூர்வீகம் ராமநாதபுரம் என்பதால்  தனது படங்கள் சிலவற்றில் கூட அந்த உணர்வை அவர் வெளிப்படுத்தியிருப்பார்.


இந்த நிலையில் மீனவர்களின் நம்பிக்கையைப் பெறும் வகையில் குறிப்பாக ராமேஸ்வரம், நாகப்பட்டனம் பகுதி மீனவர்களின் நம்பிக்கையையும், அவர்களது ஆதரவையும் பெறும் வகையிலான அறிவிப்புகளை, திட்டங்களை விஜய் அறிவிக்கக் கூடும். ஒரு வேளை அவர் அதிரடியான திட்டங்களை வெளியிட்டால் ஒட்டுமொத்த மீனவ சமுதாயத்தின் ஆதரவும் விஜய்க்குக் கிடைக்கக் கூடும்.


பெண்கள்




தமிழ்நாட்டு வாக்காளர்களில் மிக முக்கியமானவர்கள் பெண்கள்தான். இவர்களது ஆதரவு யாருக்குக் கிடைக்கிறதோ அவர்களே வெற்றி பெற முடியும். அந்த வகையில் பெண்களின் வாக்குகளைக் கவரத்தான் ஒவ்வொரு கட்சியும் முட்டி மோதும். எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் இருந்தபோது அதிமுகவுக்கு பெண்களின் ஆதரவு அமோகமாக கிடைத்து வந்தது. குறிப்பாக  அதிமுகவின் முக்கிய வாக்கு வங்கியாக பெண்களே இருந்து வந்தனர். 


அந்த இடத்தைப் பிடிக்க இப்போது விஜய் முயலலாம். ஏற்கனவே பெண்கள் மத்தியில் விஜய்க்கு நல்ல கிரேஸ் உள்ளது. ஒவ்வொரு குடும்பத்திலும் விஜய்க்கு யாராவது ஒரு பெண் ரசிகை இருக்கிறார். எனவே பெண்களுக்கான முக்கிய திட்டங்களை அவர் அறிவித்தால், அந்த கோணத்தில் அவரது பேச்சில் அறிவிப்புகள் இடம் பெற்றால் நிச்சயம் பெண்களின் வாக்குகளையும், ஆதரவையும் விஜய் பெற வாய்ப்பு கிடைக்கும்.


இளைஞர்கள்




இளைஞர்கள் இன்னொரு முக்கிய டார்கெட். ஏற்கனவே தமிழ்நாட்டு இளைஞர்கள் மத்தியில் விஜய்க்கு மிகப் பெரிய ஆதரவு உள்ளது. இதை நம்பித்தான் அவர் அரசியலுக்கே வந்துள்ளார். இந்த ஆதரவை முழுமையாக தன் பக்கம் திருப்ப விஜய் பல அதிரடியான அறிவிப்புகள், திட்டங்களை அவர் அறிவிக்கக் கூடும். பிற கட்சிகளில் உள்ள இளைஞர்களையும் தன் பக்கம் ஈர்க்கும் வகையிலான அறிவிப்புகளையும் அவர் அறிவிக்கலாம்.


குறிப்பாக கல்லூரி மாணவர்கள் - மாணவிகளிலிருந்து தனது ஆதரவு வட்டத்தை அதிகரிக்க விஜய் முயலலாம். அதுதான் அவரது உண்மையான டார்கெட்டாக இருக்கக் கூடும். எனவே இதுதொடர்பாக அவர் என்ன அறிவிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.


திமுக - அதிமுகவின் தோல்விகள்




தமிழ்நாட்டை அதிக காலம் ஆண்ட கட்சிகள் என்றால் அது திமுக, அதிமுக ஆகியவைதான். இந்த கட்சிகள் வசம்தான் பல காலமாக தமிழ்நாடு இருக்கிறது. இரு  ஆட்சிகளும் தமிழ்நாட்டுக்கு எத்தனையோ செய்துள்ளன.. அதை யாரும் மறுக்க மாட்டார்கள். ஆனால் எதில் எல்லாம் இந்த இரு கட்சிகளும் தோல்வி அடைந்ததோ அதை விஜய் கையில் எடுக்கக் கூடும். குறிப்பாக ஜாதியக் கொடுமைகள், லஞ்சம், வேலையில்லாத் திண்டாட்டம், மதுக் கொடுமை, மீனவர்கள் பிரச்சினை உள்ளிட்ட பல முக்கிய அம்சங்களை அவர் ஹைலைட் செய்து தனது இலக்கு மற்றும் திட்டங்களை அறிவித்து தனது அரசியலை முடுக்கி விடுவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்