கடமை கண்ணியம் கட்டுப்பாடு காத்து.. எல்லோருக்கும் முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.. விஜய் அழைப்பு

Oct 20, 2024,12:25 PM IST

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில மாநாடு தொடர்பாக தனது 2வது கடிதத்தை இன்று வெளியிட்டுள்ள கட்சித் தலைவர் விஜய், மாநாட்டுக்கு கர்ப்பிணிகள், முதியோர், சிறார்கள் வருவதைத் தவிர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் மாநாட்டுக்கு வருவோர் கடமை கண்ணியம் கட்டுப்பாடு காத்து எல்லோருக்கும் முன்னுதாரணமாக திகழ வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, வி சாலை கிராமத்தில் வருகிற 27ம் தேதி பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் ஜரூராக நடந்து வருகின்றன. இந்த நிலையில் அக்டோபர் 4ம் தேதி கட்சி மாநாடு தொடர்பாக கட்சித் தொண்டர்களுக்கு தனது முதல் மடல எழுதியிருந்தார் விஜய். அதில் தோழர்களே இது வேற மாதிரியான களம்.. எச்சரிக்கையுடன் களமாடுவோம் என்று தொண்டர்களுக்கு அறிவுறுத்தியிருந்தார்.


இந்த நிலையில் இன்று தனது 2வது மடலை கட்சித் தொண்டர்களுக்கு விடுத்துள்ளார் விஜய். அதில் அவர் கூறியிருப்பதாவது:




மாநாட்டுப் பணிகளுக்கான குழுக்களும் தொகுதி பொறுப்பாளர்கள் பட்டியலும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நம் முதல் மாநில  மாநாடான வெற்றிக் கொள்கை திருவிழாவின் ஏற்பாடுகளில் நீங்கள் தீவிரமாக இருப்பதும் எனக்குத் தெரியும்.


அரசியலை வெற்றி தோல்விகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அளவிடாமல் ஆழமான அக உணர்வாகவும் கொள்கை கொண்டாட்டமாகவும் அணுகப்போகும் நம்முடைய அந்த தருணங்கள் மாநாட்டில் மேலும் அழகுற அமையட்டும்.


அரசியல் களத்தில் வாய்மொழியில் வித்தை காட்டுவது நம் வேலை அன்று. நம்மை பொறுத்தவரை செயல் மொழிதான் நமது அரசியலுக்கான தாய் மொழி.


மாநாட்டு களப்பணிகளில் மட்டுமல்லாமல் நம் ஒட்டுமொத்த அரசியல் களப்பணிகளிலும் நாம் அரசியல்மயப்படுத்தப்பட்டவர்கள் என்ற ஆழமான எண்ணத்தை மக்கள் மத்தியில் நீங்கள் உண்டாக்குவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.


உற்சாகமும் உண்மையான உணர்வும் தவழும் உங்கள் முகங்களை மாநாட்டில் காண போகும் அந்த தருணங்களுக்காகவே என் மனம் தவம் செய்து காத்துக் கிடக்கிறது இதை நீங்களும் அறிவீர்கள் என்று எனக்கு தெரியும்.


இந்த நெகிழ்வான நேரத்தில் முக்கியமான ஒரு வேண்டுகோளை வைக்க விரும்புகிறேன்.


கழகத் தோழர்கள் எல்லோரையும் போலவே கர்ப்பிணிப் பெண்கள், பள்ளி சிறுவர் சிறுமியர், நீண்ட காலமாக உடல் நலமின்றி இருப்பவர்கள், முதியவர்கள் பலரும் தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து நம் மாநாட்டுக்கு வர திட்டமிட்டு இருப்பர். அவர்களின் அந்த ஆவலை நான் மிகவும் மதிக்கிறேன். உங்கள் எல்லோருடனும் அவர்களையும் மாநாட்டில் காண வேண்டும் என்ற ஆவல் தான் எனக்கும் இருக்கிறது.


ஆனால் எல்லாவற்றையும் விட அவர்களின் நலனே எனக்கு மிக மிக முக்கியம். மாநாட்டிற்காக அவர்கள் மேற்கொள்ளும் நீண்ட தூர பயணம் அவர்களுக்கு உடல் ரீதியாக சிரமத்தை ஏற்படுத்த கூடும். அதனால் அவர்கள் இவ்வளவு தூரம் சிரமப்பட்டு வர வேண்டாம் என்று அவர்களின் குடும்ப உறவாகவும் இருக்கும் உரிமையில் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். ஊடக மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக தங்கள் வீடுகளில் இருந்தே நமது வெற்றிக் கொள்கை திருவிழாவில் கலந்து கொள்ளலாம் என்றும் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.


மாநாட்டுக்கு வருகின்ற மற்ற அனைவரும் மாநாட்டுக்கு வந்து செல்லும்போது பாதுகாப்புடன் பயணிப்பது மிக மிக முக்கியம். அதேபோல பயண வழிகளில் அரசியல் ஒழுங்கையும் நெறிமுறைகளையும் போக்குவரத்து விதிமுறைகளையும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.


நாம் எதை செய்தாலும் அதில் பொறுப்புணர்வுடன் கடமை கண்ணியம் கட்டுப்பாட்டையும் காப்போம் என்பதை உணர்த்துமாறு செயல்பட்டால் தான் நம் செயல்கள் மிக நேர்த்தியாக அமையும். அரசியலுக்கும் அது பொருந்தும். நாம் எப்போதும் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாகவே இருக்க வேண்டும். எந்நாளும் இதை ஒரு கட்டுப்பாட்டு விதியாகவே கடைபிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.


வி சாலை எனும் விவேக சாலையில் சந்திப்போம், வெற்றி நிச்சயம் என்று கூறியுள்ளார் தலைவர் விஜய்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்