சென்னை: சிலரை அத்தனை சீக்கிரம் மறக்க முடியாது.. அப்படி ஒரு அழுத்தமான முத்திரையைப் பதித்திருப்பார்கள் அவர்கள். அது பிக் பாஸுக்கும், கமல்ஹாசனுக்கும் ரொம்பவே பொருந்தும். கமல்ஹாசனை தவிர்த்து விட்டு பிக்பாஸை பார்ப்பது மிக மிக கடினம்தான். அப்படிப்பட்ட சவாலைத்தான் விஜய் சேதுபதி ஏற்றுள்ளார்.
7 சீசன்களை கமல்ஹாசன்தான் சிறப்பாக தொகுத்து வழங்கி அசத்தலாக நடத்தி வந்தார். தற்போதைய 8வது சீசனில் கமல்ஹாசன் விலகிக் கொள்ளவே, புதிய ஹோஸ்ட்டாக வந்துள்ளார் விஜய் சேதுபதி. நிச்சயம், கமல்ஹாசனின் மேஜிக் விஜய் சேதுபதியிடம் இல்லைதான். ஆனால் விஜய் சேதுபதியின் முத்திரை மெல்ல மெல்ல அழுத்தமாக படிய ஆரம்பித்துள்ளது. அதுவே பெரிய வெற்றிதான்.
எல்லோரும் கமல்ஹாசனை மறந்து விட்டு விஜய் சேதுபதியை ரசிக்க ஆரம்பிக்கத் தொடங்கி வருகின்றனர். ஆனால் விஜய் சேதுபதியால் கமல்ஹாசனை மறக்க முடியவில்லை என்றே தோன்றுகிறது. காரணம், ஒவ்வொரு போட்டியாளரை அறிமுகப்படுத்தும்போதும், அவர்களுடன் பேசும்போதும், ஆடியன்ஸிடம் பேசும்போதும் அடிக்கடி கமல்ஹாசன் பெயரை உச்சரித்தார் விஜய் சேதுபதி.
விஜய் சேதுபதி அடிப்படையில் கமல்ஹாசனின் மிகப் பெரிய விசிறி. ஒரு திரை விழாவில் கமல்ஹாசனிடம் மண்டியிட்டு பொக்கேவைக் கொடுத்து அத்தனை பேரையும் ஆச்சரியப்படுத்தினார். அவருடன் இணைந்து விக்ரம் படத்திலும் மிரட்டியிருப்பார். இப்படி கமல்ஹாசனின் பேன் பாயாக வலம் வரும் விஜய் சேதுபதி, தனது குரு நடத்திய ஷோவை நடத்துகிறோமே என்ற சின்ன பயம் உள்ளுக்குள் இருப்பதாகவே தெரிகிறது.
"எனக்கு கமல் சார் மாதிரி பேசத் தெரியலை.. நல்லவேளை கமல் சார் இங்கே இல்லை".. என்று 3 தடவகைக்கு மேல் கமல்ஹாசனின் பெயரைக் குறிப்பிட்டு விட்டார் விஜய் சேதுபதி. இதன் மூலம் கமல் ஹாசனின் பிக் பாஸ் ரசிகர்களுக்கும் ரொம்பப் பிடித்தவராக மாறியுள்ளார் விஜய் சேதுபதி.
பிக் பாஸில் அப்படி ஒரு அழுத்தமான முத்திரையைப் பதித்து விட்டுப் போயுள்ளார் கமல்ஹாசன்.. அத்தனை சீக்கிரம் அதை மறந்து விட முடியுமா என்ன!
{{comments.comment}}