"விஜயகாந்த் - இப்ராகிம் ராவுத்தர்".. நல்லதொரு நண்பன் இருந்தால்.. இமயம் ஏறலாம்.. உச்சமும் தொடலாம்!

Dec 28, 2023,06:56 PM IST

சென்னை: நட்புக்கு இலக்கணமாக நீண்ட காலமாக பேசப்பட்டவர்கள் விஜயகாந்த்தும், இப்ராகிம் ராவுத்தரும்.. இந்த நட்புக்கு இணையான நட்பை அதற்குப் பின் திரையுலகில் யாரிடமும் காண முடியவில்லை. அப்படி இருவரும் ரத்தமும் சதையுமாக வலம் வந்தார்கள்.. இன்று தனது நண்பனிடமே போய்ச் சேர்ந்து விட்டார் விஜயகாந்த்.


மதுரையில் பிறந்து வளர்ந்தவரான விஜயகாந்த்துக்கு சிறு வயதிலிருந்தே மிக மிக நெருங்கிய நண்பராக இருந்தவர் இப்ராகிம் ராவுத்தர். மதுரை மண்ணுக்கே உரிய குசும்பும், சேட்டைகளும் நிரம்பியவர்களாக இருவரும் வளர்ந்தனர்.


விஜயகாந்த்துக்கும் சரி, இப்ராகிம் ராவுத்தருக்கும் சரி படிப்பு சரியாக வரவில்லை.. அதில் கவனம் இல்லை.. ஏதாவது சாதிக்கணும் மாப்ளே என்று அடிக்கடி கூறிக் கொண்டே இருப்பாராம் விஜயகாந்த். என்ன செய்யலாம் என்று இருவரும் பேசியபோது தான் விஜயகாந்த்துக்கு நடிப்பு மீது இருந்த ஆர்வம் வெளிப்பட்டது. சரி மெட்ராஸ் போறோம் நடிக்கிறோம் என்று விஜயகாந்த் முடிவெடுக்க, இரண்டு பேரும் கிளம்பி சென்னைக்கு வந்து விட்டனர்.




விஜயகாந்த் ஒருபக்கமும், இப்ராகிம் ராவுத்தர் ஒரு பக்கமுமாக நடிப்புக்கு சான்ஸ் கேட்டு படையெடுக்க ஆரம்பித்தனர். விஜயகாந்த்துக்காக இப்ராகிம் ராவுத்தர் போகாத ஸ்டூடியோவே இல்லையாம். அந்த அளவுக்கு தனது நண்பனுக்காக ஒவ்வொரு ஸ்டூடியோ படியாக ஏறி இறங்கியுள்ளார் இப்ராகிம் ராவுத்தர். விஜயகாந்த் அப்போது ரொம்ப மெல்லிசாக, கெச்சலாக இருப்பார். கலரும் கருப்பு.. இதைச் சொல்லி பலரும் அவமானப்படுத்தியதுதான் மிச்சம்.


இதனால் ஒரு கட்டத்தில் வெறுத்துப் போய் விட்டார் விஜயகாந்த். வாடா ஊருக்கே போய்ரலாம் என்று கூட இப்ராகிமிடம் கூறியுள்ளார். ஆனால் இப்ராகிம் பொறுமையா இரு.. கண்டிப்பா வாய்ப்பு கிடைக்கும் என்று கூறி வாய்ப்புகளைத் தீவிரமாக தேடியபோதுதான் இயக்குநர் எம்.ஏ.காஜாவின் அறிமுகம் கிடைத்தது. அவரது இனிக்கும் இளமை படத்தில் வாய்ப்பு கொடுத்தார் காஜா. அதுவும் வில்லன் வேடத்தில். அப்படத்தின் ஹீரோவாக நடித்தவர் சுதாகர்.. நாயகி ராதிகா. இப்படம் சரியாக போகவில்லை. இதனால் விஜயகாந்த்தும் பேசப்படவில்லை.


மீண்டும் வாய்ப்பு தேடும் படலம் தொடர்ந்தது. இப்ராகிம் கொடுத்த ஆதரவு, அவரது அயராத முயற்சி, விஜயகாந்த்தின் விடா முயற்சி எல்லாம் சேர்ந்து அவருக்கு ஹீரோ வாய்ப்பைக் கொடுத்தது. அகல் விளக்கு படத்தில் ஹீரோவானார் விஜயகாந்த். அதன் பிறகு அவரது கடின உழைப்பால் விடாமல் முன்னேறி விரைவிலேயே தனக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கினார். அதன் பிறகு நடந்ததெல்லாம் வரலாறு.


விஜயகாந்த்தின் நட்பு வட்டாரத்தில் மிக முக்கியமான இடத்தில் இருந்தவர் இப்ராகிம்தான். நீண்ட காலம் இந்த ஜோடி திரையுலகில் கோலோச்சியது. விஜயகாந்த் ஒரு பக்கம் நடிப்பில் கலக்கினார்.. மறுபக்கம் இப்ராகிம் ராவுத்தர் தயாரிப்பாளராக வெற்றி வாகை சூடினார்.. இருவரும் இணைந்து உருவானார்கள்.. வளர்ந்தார்கள்.. நல்ல வாழ்க்கையும் வாழ்ந்தார்கள்.. இப்ராகிம் ராவுத்தர் ஒரு கட்டத்தில் விஜயகாந்த்தை விட்டுப் பிரியும் நிலை வந்தபோது இருவருமே அதனால் நிலை குலைந்து போனார்கள். இப்ராகிம் ராவுத்தர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மரணத்தைத் தழுவினார். அது விஜயகாந்த்தை வெகுவாக பாதித்து விட்டது.


நல்ல நட்புக்கு இலக்கணமாக திகழ்ந்தவர்கள் விஜயகாந்த்தும், இப்ராகிம் ராவுத்தரும்.. நல்ல நண்பன் ஒருவன் இருந்தான் என்றால் எந்த உயரத்தையும் எட்ட முடியும்.. எதையும் சாதிக்க முடியும்.. எந்த நிலையையும் சமாளிக்க முடியும் என்பதற்கு அருமையான உதாரணம் விஜயகாந்த்தும், இப்ராகிம் ராவுத்தரும்தான்.


நண்பன் போன இடத்திற்கே இன்று விஜயகாந்த்தும் போய் விட்டார்.. அங்கும் அவர்களது நட்பு தொடரட்டும்.


சமீபத்திய செய்திகள்

news

கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்

news

எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!

news

உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?

news

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!

news

Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!

news

11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!

news

கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!

news

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை

news

இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்