யார் காரணம்.....?

Dec 22, 2025,03:59 PM IST

- அ.வென்சி ராஜ்


விருந்தோம்பல், வீரம், காதல், தாய்மை, சகோதரத்துவம் என அனைத்தையும் உலகத்திற்கே கற்றுக் கொடுத்தது நம் தமிழரின் சிறப்பு.


இத்தகைய சிறப்பு வாய்ந்த தமிழ்நாட்டில் வாழும் தமிழர்கள் ஆகிய நாம் இன்று நம்முடைய குழந்தைகளுக்கு என்னவெல்லாம் கற்றுக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.? 


இன்று பள்ளிகளில் நல்லொழுக்கம், கட்டுப்பாடு, கடமை தவறாமை, காலம் தவறாமை, கல்வி அறிவு, விளையாட்டு, பொது அறிவு, சமூகப் பொறுப்புகள் இவற்றோடு கூடவே சேர்த்து நல்ல தொடுகை கெட்ட தொடுகை ஆகியவற்றையும் கற்றுக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். கட்டாயத்தில் இருக்கிறோம் என்பதை விட அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம். 


காரணம் என்ன.?




பாலியல் கல்வியினையும் அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் விவரம் தெரிந்த ஒன்பதாம்  வகுப்புக்கு மேல் உள்ள மாணவர்களுக்கு சொல்லிக் கொடுத்தது போக இன்று ஒன்றாம் வகுப்பு குழந்தைகளுக்கு கூட நல்ல தொடுகை கெட்ட தொடுகை கற்றுக் கொடுக்க வேண்டியதன் அவசியம் என்ன.? சற்று சிந்திப்போம்....


இந்த சமூகம் எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது?  பாலுணர்வுகளை கட்டுப்படுத்த முடியாத மிருகமாகி கொண்டிருக்கின்றானா மனிதன்.? என்ற கேள்வி மட்டுமே இன்று மிச்சம் இருக்கின்றது.  ஒரு காலத்தில் 16 வயது 20 வயது பெண் பிள்ளைகள் காணாமல் போய் சீரழிக்கப்பட்டு  கொல்லப்பட்டார்கள் என்ற செய்தி  நம்மை நடுங்கச் செய்து கொண்டிருந்த காலம் போய், தற்பொழுது வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருக்கும் பச்சிளம் குழந்தைகள் இரண்டு மூன்று வயது, ஐந்து வயது குழந்தைகள் கூட காணாமல் போகிறார்கள். அவர்கள் இரண்டு மூன்று நாட்கள் கழித்து சடலமாக பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு இறந்து கிடக்கிறார்கள் என்னும் செய்திகளை எல்லாம் படிக்கும் பொழுது  தலை சுற்றுகிறது. வயிற்றில் ஏதோ ஒன்று இனம் புரியாத பயம் பிசைந்தெடுக்கிறது...


நிச்சயமாக நம்முள் இருக்கும் கேள்வி இந்த சமூகம் எதை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது.? ஏன் இந்த அவல நிலை? பிஞ்சு குழந்தைகளுக்கு கூட பாதுகாப்பு இல்லாத நிலை ஏன்?  தங்களுடைய காமவெறியை இந்த குட்டி குழந்தைகளிடம் தீர்த்துக் கொள்ளும் அளவுக்கு என்ன கட்டாயம் வந்துவிட்டது.?

பார்ப்போம்... 


அப்படி ஒரு கட்டாயம் வந்திருக்கிறது தான். மனிதாபிமானம் இல்லாத ஒரு மனித சமூகம் உருவாகிக் கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை.  எப்படி?  அன்று தகாத  படங்களை பார்க்க வேண்டும் என்றால் ஒளிந்து மறைந்து, யாராவது பார்த்து விடுவார்களோ என பயந்து , கிடைக்குமோ கிடைக்காதோ என  தேடிப் பார்த்துக் கொண்டிருந்த காலம் எல்லாம் போய்விட்டது. இன்று சர்வ சாதாரணமாக திரைப்படங்களிலும், நாடகங்களிலும், குழந்தைகளுக்கான சில படங்களிலும் ஏன் குழந்தைகள் விளையாடக்கூடிய விளையாட்டின் இடையிலே விளம்பரமாகக் கூட இந்த தகாத படங்களும் பாலுணர்வைத் தூண்டக்கூடிய காட்சிகளும் வந்து கொண்டு தான் இருக்கின்றன. .


அதுமட்டுமா. ? இங்கு  எல்லா நிலைகளிலும் பெண்கள் கவர்ச்சி  பாவைகளாகவே காட்டப்படுகின்றனர். ஒரு சில படங்கள் விதிவிலக்காக மற்ற  திரைப்படங்களாகட்டும் விளம்பரங்கள் ஆகட்டும் எதுவாக இருந்தாலும் பெண்களின்  முக்கிய வேலை கவர்ச்சி காட்டுவதாக மட்டுமே இருக்கிறது. இதனால் ஆண்களின் மனநிலை பெண்கள் இதற்காகத்தான் ( கவர்ச்சிக்காகத் தான்) படைக்கப்பட்டார்களோ என்று எண்ணும் அளவிற்கு கீழ்த்தரமாக பயணப்படுகிறது. இதில் குற்றவாளி அவன் என்றோ நீ என்றோ நான் என்றோ ஒருவரை ஒருவர் மாற்றி கை காட்டுவதால் இது மாறி விடாது. இதில் அனைத்து தரப்பினரின் தவறும் உள்ளது  என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். 


திரைப்படம் மற்றும் நாடகங்கள் எடுக்கும் பொழுது  எதார்த்தமாக காட்டுகிறோம் அப்படியே காட்டுகிறோம் ரசிகர்கள் விரும்புகிறார்கள் காட்டுகிறோம் என்பதையெல்லாம் தாண்டி பொறுப்புள்ள ஒரு குடிமக்களாக, சமூக அக்கறை உள்ளவர்களாக கவர்ச்சி என்பதை அறவே ஒழித்தெடுக்க மனமுவந்து முன் வரவேண்டும்.  கவர்ச்சியற்ற எத்தனையோ திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல பெயரோடு நல்ல வசூலையும் அள்ளிக் கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


சமூக வலைதளங்களில்  சர்வ சாதாரணமாக பயன்படுத்தப்படும் பாலியல் உணர்வை தூண்டும் வீடியோக்களும் படங்களும் அரசால் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.  வலைத்தளங்களை உபயோகிப்பவர்களுக்கு சீன அரசை போன்று பல வகையிலும் கண்காணிப்புக்கு உட்படுத்தி இளைய சமுதாயத்தை நல்வழிப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


பெண்களும் முதலில் தாங்கள் போகப் பொருள் அல்ல என்பதை உணர வேண்டும். பெயர் வாங்குவதற்காகவும் புகழ் அடைவதற்காகவும் அல்லது பணம் சம்பாதிப்பதற்காகவோ தன் உடலின் அழகினை காட்டி நடித்தல் கூடாது  என்பதனை உணர அவர்கள் முன் வர வேண்டும்.


பாரதி கனவு கண்ட புதுமைப் பெண்கள் ஆடைகளை குறைத்துக் கொள்பவர்கள் அல்ல தங்கள் எண்ணங்களை உயர்த்தி பிடிப்பவர்கள் என்பதை உலகிற்கு உணர்த்த வேண்டும்.


ஆண்களும் பெண்களை தங்கள் இல்லங்களில் உள்ள தன் தாயாகவும் தங்கையாகவும் அக்காவாகவும் மகளாகவும் பார்க்கும் மனநிலைக்கு முன் வரவேண்டும். தங்கள் வீட்டுப் பெண்கள் எல்லாம் பாதுகாப்பாக பத்திரமாக இருக்க வேண்டும் எனவும் அடுத்த வீட்டு குழந்தைகளை எப்படி வேண்டுமானாலும் பார்க்கலாம் என்ற மனநிலை கட்டாயமாக மாற்றப்பட வேண்டும். 


ஆண் குழந்தைகளை வளர்க்கும் பொழுதே பெற்றோர்கள் பெண் பிள்ளைகளுக்கும் பெண் பிள்ளைகளின் பாதுகாப்பிற்கும் நீதான் பொறுப்பு என்று சொல்லி வளர்க்க வேண்டும். பெண் குழந்தைகளை வளர்க்கும் பொழுது பெற்றோர்கள் எந்த ஒரு நேரத்திலும் ஒரு ஆணின் இச்சைக்கும் அவர்களின் தவறான பார்வைக்கும் அவர்கள் தடம் புரள்வதற்கோ உன்னுடைய உடையோ செயல்பாடோ நடையோ காரணமாக இருக்கக் கூடாது என்பதை சொல்லி வளர்க்க வேண்டும். 


இப்படி ஒரு சமூகம் வளர்க்கப்படுமானால் அங்கு குழந்தைகளுக்கு நல்ல தொடுகை கெட்ட தொடுகை சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்படாது.   எனவே இந்த நல்ல மாற்றம் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் தொடங்க வேண்டும். எந்த ஒரு சூழ்நிலையிலும் மனிதம் மறவாமல் மனிதனாக வாழக்கூடிய நல் உணர்வினை கொடுத்து குழந்தைகளை வளர்க்க வேண்டும். இப்படிப்பட்ட குழந்தை வளர்ப்பு ஒன்று பெற்றோராலோ அல்லது ஆசிரியராலோ மட்டும் சாத்தியம் அல்ல பெற்றோர் ஆசிரியர் சமூகம் என மூன்று தரப்பினருமே முழு ஒத்துழைப்பு கொடுக்கும் பொழுது ஒரு நல்ல சமுதாயம் வளர்த்தெடுக்கப்படும் என்பதில் எவ்வித மாற்று கருத்தும் இல்லை. 


ஆண் குழந்தையாக இருந்தாலும் பெண் குழந்தையாக இருந்தாலும் பாதிப்பின்றி குழந்தைகள் வளர ஒன்றாக இணைந்து பாடுபடுவோம்.  பாலுணர்வு என்பது வாழ்வின் ஒரு சிறு அங்கமே. அது மட்டுமே வாழ்வு இல்லை என்பதை அடுத்த தலைமுறைக்கு அழகாக சொல்லிக் கொடுப்போம்.


(அ. வென்சி ராஜ்... இவர் திருவாரூர் பகுதியைச் சேர்ந்தவர். பண்ணைவிளாகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். இவர் பட்டிமன்ற பேச்சாளராகவும், தன்னம்பிக்கை பேச்சாளராகவும், சமூக செயல்பாட்டாளராகவும் அறியப்படுகிறார். திருவாரூர் தமிழ்ச்சங்கம், தமிழ்நாடு புலவர் பேரவை, இந்தியன் ரெட் கிராஸ் ஆகியவற்றில் வாழ்நாள் உறுப்பினராக உள்ளார். செஞ்சிலுவை சங்கத்தில் கொரடாச்சேரி இணை கண்வீனியராகவும், திருவாரூர் இன்னர்வீல் சங்கத்தில் உறுப்பினராகவும், ஹெல்ப் லைன் டிரஸ்ட் என்னும் ரத்ததான அமைப்பில் தலைமை ஆலோசகராகவும் பயணம் செய்கிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பிரச்சார பீரங்கியாக மாறுகிறாரா சரத்குமார்.. யாருக்கு குறி.. தேர்தலில் போட்டியிட விரும்பாதது ஏன்?

news

Christmas Celebrations: விஜய்யின் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட பேச்சு எப்படி இருந்தது?

news

2025ம் ஆண்டை அதிர வைத்த கரூர்.. ஷாக் கொடுத்த சார்.. செங்கோட்டையனால் ஷேக் ஆன அதிமுக!

news

தமிழக பொங்கல் பரிசு எப்போது ? வெளியான செம தகவல்

news

இதுக்கு ஒரு என்டே இல்லையா?...மீண்டும் ரூ.1 லட்சத்தை நெருங்கும் தங்கம் விலை

news

புதிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு

news

டிசம்பர் 26 வரை தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு...வானிலை மையம் தகவல்

news

The world of AI.. மனித சிந்தனையின் நவீன வடிவம்.. செயற்கை நுண்ணறிவு

news

ஏகநாஞ்சேரி என்றொரு கிராமம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்