ஆண்களின் ஆதங்கம் நியாயமானதுதானே!

Nov 20, 2025,02:31 PM IST

- அ.வென்சி ராஜ் 


மகளிர் தினத்திற்கு மலையளவு குவியும் வாழ்த்துகள் ஏனோ தெரியவில்லை ஆண்கள் தினத்திற்கு வருவதில்லை தான்...


அதற்காக ஆண்கள் ஆதங்கப்படுகிறார்கள் என்று நாம் கோபப்பட வேண்டாம். அவர்களின் ஆதங்கம் நியாயமானது தான். 


எப்படி ஒரு பெண் தாயாக, தங்கையாக, அக்காவாக, மகளாக, மருமகளாக, பாட்டியாக, பேத்தியாக, அண்ணியாக, தோழியாக பல பரிமாணங்களை எடுக்கிறார்களோ  அதேபோல ஓர் ஆணும் தந்தையாக,மகளாக, மருமகனாக, அண்ணனாக, தம்பியாக, சகோதரனாக, நண்பனாக, தாத்தாவாக, பேரனாக  என அத்தனை  பரிமாணங்களையும் ஆண்களும் எடுக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் தாய்மை என்னும் ஒரு சொல்லில் நூலிழையில்  பெண்கள் நாம் அவர்களை விட ஒரு படி உயர்ந்து விடுகின்றோம். அதுதான் உண்மை. 




அதற்காக ஆண்களுக்கென்று  தனிச்சிறப்பில்லை என்று அர்த்தம் இல்லை. 


உலகில் எத்தனையோ ஆண்கள் தாயிழந்த குழந்தையை, குழந்தைகளை அன்பு செய்து மறுமணம் பற்றி சிந்திக்காமல்  தியாக உணர்வோடு  தம் குழந்தைகளுக்காகவே வாழும் தந்தையர்களும் இவ்வுலகில் இருக்கத்தான் செய்கிறார்கள்....


நகை,புடவை, பணம் ஆடம்பரம், சீரியல், சினிமா நடிகர்களின் மீது கொண்டுள்ள மோகம் என இன்று தலைவிரித்தாடும்  பிரச்சனைகளைக் கொண்டுள்ள பெண்களின் குணம் தெரிந்த பொழுதும் எத்தனையோ ஆண்கள் மகிழ்வோடு அவர்களுடன் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். ..


நாகரீகம் என்ற பெயரில் தங்கள் ஆடைகளிலே ஏற்ற இறக்கங்களை வைத்துக்கொண்டு ஜன்னல் கதவுகளைக் கொண்டு தங்கள் அங்கங்கள் தெரியும் அளவுக்கு உடையை அணிந்து அதை நாகரிகம் என்று சொல்லிக் கொண்டு திரியும் பெண்களையும் மன்னித்து அன்பு செய்து வாழ்ந்து கொண்டிருக்கும் ஆண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்....


பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் தலைவிரித்து ஆடும் இந்த காலகட்டத்திலே தன் மனைவியைத் தவிர பார்க்கும் அத்தனை பெண்களையும் தங்கையாக மகளாக சகோதரியாக தாயாக பார்க்கும் ஆண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்...


அடுப்பூதும் பெண்களுக்கு  படிப்பெதற்கு என்று கூறிய ஆண் சமூகத்தில் பிறந்த எத்தனையோ ஆண்கள் பாரதியார்  பெரியார்  அம்பேத்கர் போன்று  இன்றும் பெண்களின் முன்னேற்றத்திற்காக அவர்களை ஏணி கொண்டு ஏற்றி உயரத்தில் அமர்த்தி விடும் ஆண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ..


அந்த வகையில், ஒரு நாள் மட்டும் அல்ல ஆண்டு முழுவதும் உங்களுக்காக ஆண்கள் தினம் கொண்டாடினாலும் அது மிகையாகாது. தந்தையாக,  சகோதரனாக, நல்ல தோழனாக தோள் கொடுக்கும் அத்தனை ஆண்களுக்கும் இந்த தினம் அவசியமானதும் கூட.


(ஆசிரியை அ. வென்சி ராஜ், திருவாரூரைச் சேர்ந்தவர். பண்ணைவிளாகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் பணியாற்றுகிறார். ஆசிரியையாக மட்டுமல்லாமல், பட்டிமன்ற பேச்சாளர், தன்னம்பிக்கை பேச்சாளர்,  சமூக செயற்பாட்டாளர் என பன்முகம் கொண்டவரர் அ. வென்சி ராஜ்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்