- தமிழ்மாமணி இரா. கலைச்செல்வி
சங்ககாலத்தில் இருந்து ,இன்று வரை பெண் கவிஞர்கள் தமிழ் வளர்ச்சிக்கு பெரும் தொண்டாற்றி வருகிறார்கள். ஆனால் தமிழ் இலக்கிய வளர்ச்சியில், ஆண்களின் பங்களிப்பை உற்று நோக்கும்போது பெண்களின் பங்களிப்பு குறைவுதான். அதற்குக் காரணம் பெண்களை அழுத்தி வைத்திருக்கும் சமூக கட்டுப்பாடுகள், பெண்ணினத்திற்கே உரிய பல கடமைகள், பெண்ணை சமூகம் பார்க்கும் பார்வை,குடும்பம் கட்டுக்கோப்புடன் இருக்க வேண்டிய நிர்பந்தம் ,குடும்ப அமைதி என்ற பல்வேறு காரணிகள் பெரிதும் காரணமாய் உள்ளன.
பெண்கள் தமிழ் வளர்ச்சிக்காக தங்களின் இலக்கிய ஆர்வத்தினையும், கற்பனைத் திறத்தினையும் முழுவதும் வெளிப்படுத்த , பல சிக்கல்கள் இன்றும் உள்ளன.
சங்ககாலத்தில் தமிழ் வளர்ச்சிக்கு பெண்களின் பங்கு:
சங்ககாலத்தும் , சங்கம் மருவிய காலத்தும் எழுந்த இலக்கியங்களில் பெண்ணடிமை நிலைமையை காண முடிகிறது . சங்ககாலத்திலும் பெண் இலக்கியவாதிகள் விரல் விட்டு எண்ணக் கூடியவர்களே இருந்தனர். தொல்காப்பியம் தொடங்கி இலக்கியவாதிகள் பலர் ஆணாதிக்கவாதிகளாகவே செயல்பட்டு வந்துள்ளனர் . சங்க காலத்தில் தமிழ் இலக்கியம் முழுவதும் ஆணாதிக்க பார்வை தான் அழுத்தமாகப் பதிந்துள்ளது. சங்க கால பெண்பால் புலவர்களான ஒளவையார் ஆதிமந்தியார் , காரைக்கால் அம்மையார், போன்றோர் பெண்ணுரிமையை பாடு பொருளாக பாடியுள்ளனர் .
தொல்காப்பியக் காலத்தில் தமிழுக்கு பெண்களின் பங்கு:
தொல்காப்பியத்திலும் பெண்ணானவள் அச்சம், நாணம், மடம் என்ற இயல்புகளைக் கொண்டு, பெண்கள் அடக்கம் ,அமைதியின் உருவகமாகவும், செயல் திறன் அற்றவளாக உருவாக்கப்படுகிறாள். ஆணுக்கும் பெண்ணுக்கும் தனித்தனி வரையறைகள் சங்க கால இலக்கியங்களில் ஊக்கப்படுத்தப்பட்டுள்ளன.
பொம்பள சிரிச்சா போச்சு ..!!
புகையிலை விரிச்சா போச்சு ..!!
கல்லானாலும் கணவன் ..!!
புல்லானாலும் புருஷன் ..!!
என்ற பழமொழிகளும், புது மொழிகளும் அக்காலத்தில் தோன்றி, ஆண்களை ஆள்பவனாகவும், அதிகாரம் செய்பவனாகவும் சித்தரித்து ,பெண்களை அடக்கி ஒடுக்கி முடக்கியது. இலக்கிய பங்களிப்பு என்பது அக்கால பெண்களுக்கும் எட்டா கனியாகவே இருந்தது.
ஆணாதிக்கத்தால் பெண் எழுத்தாளர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு :
ஆணாதிக்க சமுதாயம் வகுத்ததுதான் பால் வகை. ஆண் தனக்குரிய சமூக கனவாக இராணுவம், தொழிற்சாலை, அரசியல், நீதி ,தொழில்நுட்பம் போன்றவற்றை தெரிந்து கொண்டான். பெண்ணுக்கு இல்லம் என்பதை உரிமையாக்கி , அதற்குள் அவள் ஆட்படுத்தப்பட்டாள். சங்ககாலம் தொட்டு , அப்படி வீட்டுக்குள் ஆட்படுத்தப்பட்ட பெண் தற்போது ஆணுக்கு நிகராய், பெண்கள் இலக்கியங்களில் தனது முத்திரையை பதிக்க, பெரும் முயற்சி செய்ய வேண்டியதாய் உள்ளது. பெண்கள் இலக்கிய உலகில் சாதித்துக் கட்ட சமூகத்திலும் குடும்பத்திலும் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
ஆண் இலக்கியவாதியை சமூகம் பார்க்கும் பார்வைக்கும் ,பெண் இல்க்கியவாதியை சமூகம் பார்க்கும் பார்வைக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. ஆண் இலக்கியவாதிகளை , ஆராதிக்கும் இச் சமூகம், பெண் இலக்கியவாதிகளை, அவர்களின் கருத்து சுதந்திரத்தினை கடுமையாக விமர்சிக்கிறது. காரணம் சங்க காலங்களில் தமிழ் இலக்கியங்களில் பெண்ணுக்கான பலவிதிமுறைகள் விதைக்கப்பட்டது. அதிலிருந்து இன்னும் மீள முடியாமல் இருக்கும் நிலையிலேயே ,இக்கால பெண் எழுத்தாளர்களின் நிலைமை உள்ளது.
ஆண்கள் பெண்களை , குடும்ப அமைப்பில் அடங்கி ,ஆடவன் கைப்பாவையாக உருவாக்குவதற்கு துணை போயினர். .ஆண் பெண் இடையே அதிகார உறவுகள் வளர்ந்து பெருக , குடும்பம் என்ற அமைப்பும் காரணம் ஆயிற்று. குடும்பத்தின் முழு பொறுப்பும் பெண்ணின் தலையில் சுமத்தப்படும் பொழுது, அவள் அதிலிருந்து மீண்டு, பொது வாழ்க்கையான இலக்கிய உலகில் ,அதன் வளர்ச்சிக்கு தடம் பதிப்பது ஒரு கடினமான செயலாகவே பெண் இலக்கியவாதிகள் உணர்கிறார்கள்.
பெண் கவிஞர்கள் வளர்ச்சிக்கு பாரதியார், பெரியாரின் பங்கு:
பெண் விடுதலை அமைப்புகளை முதலில் அமைத்தவர் பாரதியார் ஆவார்.தமிழ் இலக்கியத்தில் பெண்ணின் நிலையை மாறுபட்ட கண்ணோட்டத்தில் எடுத்து கூறியவர்களுள் பாரதியும், சுயமரியாதை இயக்கத்திற்காக போராடிய பெரியாரும் குறிப்பிடத்தக்கவர்கள். பெண் விடுதலை குறித்து பாரதியார் எழுதிய கவிதைகள், பெண்ணிய கருத்துக்களை அறிவதற்கு சான்றாக திகழ்கின்றன .
“அச்சமும் நாணமும் நாய்களுக்கு வேண்டுமாம்”
“மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம்”
“ பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் “
என பாரதியார் கூறியுள்ளார் .
பெண் விடுதலை குறித்து எழுந்த, சீர்திருத்த இயக்கங்களில் பெரியாரின் சுயமரியாதை இயக்கம், பெண் என்பவள் ஆணின் போகப் பொருள் என்பதை மறுத்து, ஆணின் பாதி என்பதை மாற்றி ,பெண்ணினம் தன்னை முழுமையாக புரிந்து கொள்ள உதவியது. பெரியாரை தமிழ் இலக்கியப் பெண்ணிய முன்னோடி “ எனக் கூறலாம்.
பெண்ணியம் என்றால் என்ன?
பெண்களை அழுத்தி வைத்திருக்கும் சமூக கட்டுப்பாடுகள் மாற வேண்டும் என பேசுவதும், எழுதுவதும், போராடுவதும் பெண்ணிய கொள்கைகளாக உள்ளன. “பெண்ணியம் “என்ற சொல் இப்போது சமூகத்தில் சில தமிழ் இலக்கியவாதிகளால் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட நிலையில் , வாழ்வியலில் இருந்து விலகி விடுவதற்கான அபாய நிலை ஏற்படுகிறது. அந்த அபாயத்தை போக்கும் படி ,பல பெண் கவிஞர்கள் தங்களது தெளிவான கருத்துக்களை கவிதைகள் ,கதைகள் மூலம் சிறப்பாக தற்போது தடம் பதித்து வருகின்றனர். தமிழ் வளர்ச்சியில் இவர்களின் பங்கு தற்போது மிகவும் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.
பெண்ணியத்தை செயல் வடிவம் ஆக்கிட ,பெண் புது கவிஞர்கள் பலர் தங்களை அடையாளம் காட்டியுள்ளார்கள் . 20 ஆம் நூற்றாண்டில் பெண் கவிஞர்களின் இலக்கிய பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாக அமைந்துள்ளது. தமிழ் சூழலில் 20-ம் நூற்றாண்டு தொடக்கத்தில் பெண்கள் எழுதத் தொடங்கியிருந்தாலும் ,70களில் இருந்து தான் பெண் கவிஞர்கள் அதிக அளவில் எழுதத் தொடங்கி, அவர்களின் கவிதை தொகுதிகள் அதிக அளவில் வெளிவரத் தொடங்கியது. இருபதாம் நூற்றாண்டு இறுதியில் தமிழ் இலக்கியத்தில் பெண்களின் பங்கு சிறப்பாக இருக்கும் என்பது தெரிய தொடங்கியுள்ளது.
பெண்னின் நிலை பற்றி பொன்மணி வைரமுத்துவின் கவிதை:
நான்கு சுவர்களுக்குள்
நங்கை அவள் சிறைப்பட்டாள்..!!
அச்சம் ,நாணம் ,மடம், பயிர்ப்பு என்கிற
நான்கு திரைகளுக்குள் ..!!
நங்கையவள் மறைந்திருந்தாள்..!!
நான்கு பேர் வம்புக்கே
நடுங்கி வீட்டின் உள்ளிருந்தாள்..!!
நான்கு பேர் சுமக்கின்ற
நாளில் தான் சுதந்திரமாய்
வீதிகளுக்கு வந்தாள்..!!
பொன்மணி வைரமுத்துவின் இந்தக் கவிதை வரிகள், பெண்கள் இச்சமுகத்தின் மீது கொண்டிருக்கும் அச்ச உணர்வை வெளிப்படுத்துகின்றன. இதிலிருந்து பெண்கள் இன்னும் அடிமைப்படுத்தப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள் என்பதே உண்மை. இந்த ஆணாதிக்க சமூகத்தில், பெண் படைப்பாளிகள், இலக்கியவாதிகள் தங்களுடைய படைப்பாற்றலை சுதந்திரமாக வெளிக் கொணர முடியாத நிலையே, இந்த நவீன யுகத்திலும் நிலவுகிறது.
கவிஞர் பொன்மணி வைரமுத்துவின் படைப்பாற்றல் திறன், அவரின் தமிழ் ஆளுமை திறன், இலக்கியத்தில் அவரின் பங்களிப்பு , ஆரம்ப கட்ட காலத்தில் அபரிமிதமாக இருந்தது. இப்போது அவரின் பங்களிப்பு எங்கே.? அவரின் படைப்பாற்றல் எங்கே போயிற்று? அப்படிப்பட்ட பெண் கவிஞர் பொன்மணி வைரமுத்து கூட, இப்பொழுது தனது குடும்ப நலத்திற்காகவும் ,கணவனின் முன்னேற்றத்திற்காகவும் , தன் சுயத்தினை முற்றிலும் இழந்து, திரை மறைவில் வாழ்ந்து வருகிறார். இது ஒன்றே தற்போதைய பெண் இலக்கியவாதிகளின் நிலைக்கு மிகப்பெரிய உதாரணமாய் அமையும். உலகம் அறிந்த கவிப்பேரரசு வைரமுத்துவின் மனைவிக்கே இந்த நிலை என்றால், சாதாரண பெண் படைப்பாளிகளின் நிலை என்னவாக இருக்கும்.?
ஆணாதிக்கம் எப்படி பெண்ணின் சுயத்தை மறைக்கிறது என்பதற்கு இதுவே தக்க உதாரணம். இப்படிப்பட்ட நிலை நிலவும் போது, பெண்கள் எப்படி தங்களின் படைப்புத்திறனை வளர்த்துக் கொள்ள முடியும்? தமிழ் வளர்ச்சிக்காகவும் இலக்கியத்திற்காகவும் பெண்கள் எப்படி தன்னை முன் நிறுத்திக் கொள்ள முடியும்.? எப்படி சுதந்திரமாக தமிழ் வளர்ச்சிக்கு பங்காற்ற முடியும்? ஆண்கள் தன் வீட்டுப் பெண்களின் இலக்கிய உணர்வையும், ஆர்வத்தையும் மதித்து அதை வெளிக்கொணர , தானாக முன்வர வேண்டும். ஆணின் வளர்ச்சிக்கு தன் வீட்டு பெண்களை பலிக்கடா ஆக்குவது எந்த வகையில் சரியெனக் கொள்ளலாம்.?
குடும்பத்தின் கட்டமைப்பை பாதுகாக்க, பெண்கள் தன் சுயத்தையே இழக்க வேண்டிய சமூக சூழல் இருக்கின்ற நிலையில், தான் விரும்பினாலும், தமிழ் வளர்ச்சிக்கு பங்களிக்க முடியாத நிலையிலையே பல பெண் தமிழ் இலக்கியவாதிகளின் நிலைமையும் உள்ளது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி .இதையும் மீறி சமூகத்தில் தன்னை தடம் பதித்துள்ள பெண் இலக்கியவாதிகளின், தமிழ் வளர்ச்சிக்கான பணியினை சமூகம் மனமார பாராட்ட வேண்டும். பெண் எழுத்தாளர்களின் இலக்கிய பங்களிப்புக்கு பத்திரிக்கை உலகமும் முன்னுரிமை கொடுக்க வேண்டும். அரசு பெண் இலக்கியவாதிகளை ஊக்கப்படுத்த வேண்டும். எத்தனையோ பெண் படைப்பாளிகளுக்கு எவ்வளவோ ஆர்வம் இருந்தும்,திறமை இருந்தும் அவர்களை ஊக்கப்படுத்தவோ, வழி நடத்தவோ குடும்பத்திலும் சமூகத்திலும் வெற்றிடமே நிலவுகிறது.
இலக்கியங்களில் இன்றைய பெண் கவிஞர்களின் பங்கு நிலை:
தற்போதைய பெண் கவிஞர்கள் ,பெண் சிசுக்கொலை, மனிதம்,வரதட்சணை , ஆண் பெண் நட்பு , பணி புரியும் மகளிர் பிரச்சனை, தரமான காதல், பச்சிளம் குழந்தைகளின் பாலியல் கொடுமைகள், வன்புணர்வு , குடும்ப வன் கொடுமை ஆகிய கூறுகளை படம் பிடித்து காட்டுவதில் வல்லவர்களாக உள்ளார்கள.
திருமணத்திற்கு முன்பு , தனது பெற்றோர் வீட்டில் சுதந்திரமாக இருக்கும் அவள், திருமணத்திற்கு பின்பு குடும்பம் என்ற போர்வையாலும், கணவன் என்பவனின் ஆதிக்கத்தினாலும், தனது கனவுகளை,ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் போகிறது. ஆணாதிக்க சமூகத்தில் பல பெண் இலக்கியவாதிகள், கவிஞர்கள் தொலைந்து போனார்கள். தொலைந்து கொண்டிருக்கிறார்கள். மௌனம் தான் பெண். அவளது சிக்கல்களும் சிந்தனைகளும் மொழியின் அடி ஆழத்தில் மௌனமாய் உறைந்து கிடக்கின்றன.
உதடுகளைப் பிரித்து பேச முடியாமல், மனதில் கட்டுண்டு கிடக்கும் பெண்ணின் உணர்வுகளை, தங்கள் மொழியில் பதிவு செய்து கொள்ளும் உரிமையை இழந்து நிற்கின்றனர்..இதை கனிமொழி கருணாநிதி தனது “தேடல்” என்ற கவிதையில் அழகாக வடித்துள்ளார். “அர்த்தநாரீஸ்வரனின் அழகிய பாதியாய் அமர்ந்திருப்பவள், அவனுள் அடங்கிப் போனது போல் தான் ,நாமும் “ எனக் கூறியுள்ளார்.
புதுக்கவிதை கட்டமைப்பை பெற்றுக்கொண்டு, பெண் கவிஞர்களின் கவிதைகள், கருத்துக்கள் புது வல்லமை பெற்று வருகிறது. பழைய மூட பழக்கவழக்கங்கள், சடங்குகள், வாழ்வியல் முறைகளை குறித்து புதிய புரட்சியுடன் புதுக் கவிதைகளை பல பெண்கள் படைத்துள்ளனர். இருப்பினும் பெண் இலக்கியவாதிகளில் படைப்புகளில் கொஞ்சம் தயக்கம் இல்லாமல் இல்லை.பெண் கவிஞர்களின் முன்னேற்றத்திற்கு சமூகம் தடையாக இல்லாமல், அவர்கள் வளர்ச்சியை பெருமையோடு வரவேற்க வேண்டும் .
இலக்கியங்களில் பெண் கவிஞர்கள் குறித்த சமூக பார்வை :
பெண் மதிக்கப்படும் பொழுது சமூகம் மிளிரும். ஏனென்றால் ஒரு சமூகத்தின் இயக்கத்திற்கு, பெண்ணின் பங்களிப்பும் அவசியமாகிறது .பெண்ணை புறம் தள்ளி எந்த வளர்ச்சியும் கிடையாது.பெண் சுதந்திரம் என்பது ஆண்களை எதிர்ப்பதும் ,வீட்டு வேலை செய்யாமல் இருப்பதும், ஆண்களை விட மேலோங்கி இருப்பதும் என்று எப்படி எப்படியோ தவறாக புரிந்து கொள்கிறார்கள் .ஆண் பெண் இருவரும் தங்களது சுதந்திர உரிமைகளை விட்டு கொடுக்காமல், சுதந்திரமாக அவரவர் எண்ணங்களுக்கு தகுந்தாற்போல், சமூகப் பிரச்சினைகளுக்காக தீர்வு காண்பதற்கு போராட வேண்டும் .சமூக நலனுக்காக என்ன செய்ய வேண்டும் என்பதில் ஆண் இலக்கியவாதிகளுக்கு எவ்வளவு உரிமை உள்ளதோ அதே உரிமை பெண் இலக்கியவாதிகளுக்கும் இருக்க வேண்டும்.
“பெண் அடிமை தீரும் மட்டும்
இத் திரு நாட்டில்
மண்ணடிமை தீர்தல் முயற்கொம்பே”
என்ற பாவேந்தரின் கூற்றை நினைவில் கொண்டு ,பெண் இலக்கியவாதிகளை ஆண்களுக்கு நிகராக முன்னேற வழி வகுப்போம்.
இந்நிலையில் பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பதற்கேற்ப “ அச்சமும் நாணமும் நாய்களுக்கு வேண்டும் “என்று பாரதி பாடியதைப் போன்று, ஆண்களும் பெண்களும் சம உரிமை உள்ள உயிர்களாக பார்க்கக்கூடிய, புதிய வரையறைகளை வகுக்கப்பட்டால், தமிழ் இலக்கியங்களில் பெண்களின் பங்கு , உலகம் போற்றும் வகையில் சிறப்பாக இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. இந்த பணிகளையும் பெண் கவிஞர்கள் தங்கள் படைப்புகளில் முன்னெடுக்க வேண்டும். அப்படிச் செய்தால் ,
“ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக
வாழ்வோம் இந்த நாட்டிலே” எந்த பாரதியாரின் வரிகளின் படி,
“ஆணும் பெண்ணும் நிகர் எனக் கொள்வதால்
அறிவில் ஓங்கி இவ்வையம் தழைக்குமாம்”
என்று பாரதி பாடுவது போன்று வையம் தழைத்தோங்கும். தமிழ் இலக்கியங்களில் பெண்களின் பங்கு இனி வரும் காலங்களில் மிகவும் சிறப்பாக அமையும்.. குடும்பமும் ,சமூகமும் பெண்களின் இலக்கிய பணிக்கு தங்களின் ஆதரவினை நல்கி ,அவர்களின் தமிழ் இலக்கியப் பணி உச்சம் தொட, வாழ்த்துவோம்.
(எழுத்தாளர் பற்றி... சிவகங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, சென்னையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு உயர் அதிகாரி ஆவார். கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும், வாசிப்பின் மீதும் தீராக் காதல் கொண்ட எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, நீண்ட காலமாக எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒலிபரப்பாகியுள்ளன. சொந்தக் குரலிலேயே தனது கதைகளை அவர் வாசித்துள்ளார். கதைகள் தவிர, கவிதைகளையும் அதிகம் எழுதி வருபவர், யோகா உள்ளிட்ட பல்வேறு கலைகளையும் கற்றுத் தெளிந்தவர். உளவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். சாதனைப் பெண், தங்கத் தாரகை, கவிஞாயிறு உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்).
நான் பிடிவாதக்காரன் கிடையாது...பதவி மீது ஆசை எதுவும் இல்லை: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
மோடியால் முடியாததை நான் சாதித்ததால் எடப்பாடி பழனிச்சாமிக்கு வயிற்றெரிச்சல்: முதல்வர் முக ஸ்டாலின்
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி.. ஒரு புகாரும் வரவில்லை.. தேர்தல் ஆணையம்
தமிழ் வளர்ச்சியில் பெண் கவிஞர்களின் பங்கு!
ஹலோ மக்களே.. தீபாவளிக்கு சொந்த ஊர் போறீங்களா?.. இதை தெரிஞ்சுக்க மறந்துடாதீங்க!
திருவண்ணாமலைக்கு திடீரென போன லோகேஷ் கனகராஜ்.. கூலி வெற்றிக்காக பிரார்த்தனை!
32வது பிறந்த நாளை கொண்டாடும் ஹன்சிகா மோத்வானி.. போராட்டங்களே வாழ்க்கை!
புதிய வருமான வரி மசோதா 2025.. திங்கள்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கலாகிறது
டிரம்ப் போட்ட 50% வரியால் பாதிப்பு.. இந்திய ஜவுளி ஏற்றுமதித் துறைக்கு ரூ 87,000 கோடி இழப்பு!
{{comments.comment}}