கூரைவீடு !

Oct 14, 2026,02:05 PM IST

- கவிஞர் க.யாஸ்மின் சிராஜுதீன்


அபர்ணா மூன்று அடுக்கு மாடி வீட்டில்  வசித்து வருகிறாள். பண்டிகைகாலம் என்பதால்  வீட்டை சுத்தம் செய்கிறாள். அப்போது  அங்கு வரவேற்பறையில் மாட்டி வைத்திருந்த  போட்டோக்களில் தன் திருமண போட்டோவைப் பார்த்தாள்... இதை இங்கு மாட்டி  அழகு பார்க்க  எத்தனை வருடங்களானது தெரியுமா.. ஓரிரு வருடங்கள் இல்லை.. சரியாக பத்து  வருடங்கள் ஆனது.


ஏன்னா ... அவளுடைய நினைவுகள் பின்னோக்கி சென்றது ..வாங்க அபர்ணா கூட நாமும் டைம் மெஷினில் ஏறிப்போவோம்... அடடா , சூப்பர்  ..சூப்பர் வந்துட்டோம்  பத்து வருடம் பின்னாடி. வாங்க  அபர்ணாவின் அழகிய மாளிகையைப் பார்ப்போம்.. ஒரு  சிறிய  கூரை வீடு, சுவர்கள் மண்ணால் ஆனது, கூரை கரும்புத் தோகையால் வேயப்பட்டது. தரை மண்ணால் ஆனது.


வெள்ளிக் கிழமை சிகப்பு மண்ணால் மெழுகி தரை அழகிய சிகப்பு வண்ணமாகவும் மற்ற நாட்களில்  சாணத்தால் மெழுகி மஞ்சளாகவும் வண்ணம் பூசிக்கொண்டு ஜொலிக்கும். சமையல் அறை, பூஜை அறை ,சாப்பிடும் அறை, படுக்கை அறை , படிக்கும் அறை, வரவேற்பு அறை  என எல்லா அறைகளும் ஒன்றாய் சங்கமிக்கும் ஒரே ஒரு அறை.


இரண்டு பக்கமும் வாயிற் கதவு , அட ...இங்க பாருங்க, இரும்பு கட்டிலுக்கு கீழே பாருங்க  குளிர்சாதனப்பெட்டி கூட தோற்றுப்போகும் அளவுக்கு பிளாஸ்டிக்  டிரேக்களில்  காய்கறிகள் ஜம்மென்று  அமர்ந்து இருக்குதுங்க, சாமான்கள் வைக்க ஒரே நீண்ட  மரப்பலகை சுவரில் அடித்த ஷேல்ஃப். சின்ன தொலைக்காட்சிப் பெட்டி, அலமாரி, முகம்

பார்க்கும் கண்ணாடி, கிரைண்டர், மிக்சி, குழந்தைக்கு தொட்டில் ,  ஒரு காற்றாடி என ஏதோ தேவையான  வசதிகள் கடலைப்போல ஒரே இடத்தில் சங்கமித்து இருந்தன.




உறவினர்கள் வந்தாலும் இதே அறையில்தான் தங்குவர். சில சமயம் நடு வீட்டில் பாம்புகளும் விளையாடும் . சற்று பெரிதாக்கிய திருமண போட்டோவை மாற்ற இடமில்லை. கூரை வீட்டின் சுவர் உயரமாக இருக்காது இல்லையா, வேறு வழி இல்லை . அதனால் இந்த போட்டோவை என் கனவு வீடான புது வீடு கட்டி வரவேற்பறையில் மாட்டி அழகு பார்க்கலாம் என மனதில் கனவை வளர்த்துக்கொண்டு பெட்டியில் பாதுகாத்தாள் அபர்ணா... பத்து வருடமாக.


என்ன பத்து வருடமா ...அப்படினு வியப்பா இருக்கா..ஆமாங்க  எப்போது கனவு நிஜமாகும் என தெரியாமலேயே அபர்ணாவின் வாழ்க்கை நகர்ந்தது  ...  வருடங்கள்  இறகு முளைத்த தேராய் ஓடியது  ..சரி சரி .. வாங்க வாங்க டைம் மெஷின் கிளம்ப போகுது நிகழ் காலத்துக்கு  ... அபர்ணா இனிய கூரை வீட்டின் இன்பமான தருணங்களை சுகமாய் கனவு கண்டாள் ....அவள் தனது பிள்ளைகளுக்கு  அடிக்கடி சொல்வாள் நாம் கஷ்டப்பட்டு இந்நிலைக்கு வந்தோம். பொறுமைக்கு கிடைத்த இறைவன் கொடுத்த பரிசுதான் இன்றைய  மூன்றடுக்கு மாடி வீடு..


என்ன !  ஒரு அழகான கனவு நிஜமான தருணம் பாருங்க ...! அபர்ணா நினைத்தது போலவே  வீடும் கட்டியாச்சி  திருமண போட்டோவும் வரவேற்பறையில் மாட்டியாச்சி... அபர்ணா அடிக்கடி சொல்வாள் பொறுமைக்கு நிகர் வேறெதுவுமில்லை.. காலம் அனைத்தையும் மாற்றும் வல்லமை கொண்டது .. 


வாழ்க்கை ஒருவட்டம்  அதில் நாமெல்லாம் ஒரு காலகட்டம்.. இருக்கிறது என ஆடவும் கூடாது, இல்லையென வாடவும்  கூடாது, மகிழ்ச்சி வெளி உலகில் இல்லை நமக்குள்ளேயேதான் இருக்கிறது..எங்கு வாழ்கிறோம் என்பது முக்கியமில்லை ,எப்படி வாழ்கிறோம் என்பதுதான் முக்கியம் ..  உழைப்பு ஒன்றே மூலதனம் மாற்றம் ஒன்றே மாறாதது நினைவில்கொள்ளுங்கள்.. அபர்ணா  உழைக்க தயங்கமாட்டாள்,,எனவே உயர்வை அடைந்தாள்..


(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.  26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும்  whatsApp வழியாக  கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்