2026 தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல்.. விஜய் வழி தனி வழி.. தெளிவா சொல்லிட்டாரு.. 4 முனைப் போட்டிதான்!

Jul 05, 2025,10:54 AM IST

சென்னை: தமிழ்நாடு அரசியல் களம் எப்போதுமே சுவாரஸ்யமானது. அடுத்து வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கிய நகர்வுகள் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன.   அதிலும் தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் தனது முடிவை தெளிவாக நேற்று பொட்டில் அடித்தாற் போல சொல்லி விட்டதால் களம் இப்போதே அனல் பறக்க ஆரம்பித்துள்ளது.


இம்முறை, தமிழகத்தில்  நான்கு முனைப் போட்டி நிலவும் வாய்ப்புகள் பிரகாசமாகி விட்டது. கடந்த பல தசாப்தங்களாக ஆட்சிக் கட்டிலில் மாறி மாறி அமர்ந்து வரும், திராவிடக் கட்சிகளான திமுக, அதிமுக, தவிர்த்து தற்போது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகியவையும் வலுவான கட்சிகளாக களத்தில் உள்ளன.


தேசிய ஆளும் கட்சியான பாஜக, இம்முறை அதிமுகவுடன் கரம் கோர்த்து களம் காண்கிறது. இன்னொரு தேசியக் கட்சியான காங்கிரஸ், திமுகவுடன் வலுவான உறவில் உள்ளது. அதிமுக கூட்டணியில் பாஜக இடம் பெற்றிருந்தாலும் கூட இந்தத் தேர்தல் பாஜகவின் எதிர்காலத்துக்கும் முக்கியமானது என்பதால் அதுவும் தனித்து உற்றுக் கவனிக்கப்பட்டு வருகிறது.


திமுக: ஆளும் கட்சியின் பலமும் சவால்களும்




தற்போது ஆட்சியில் இருக்கும் திமுக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 2026 தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்த திமுக, தனது நலத்திட்டங்கள் மற்றும் ஆளுகையின் மூலம் மீண்டும் மக்களின் நம்பிக்கையைப் பெற முயற்சிக்கும். 


"200 இடங்களைக் கைப்பற்றுவோம்" என்ற இலக்குடன் திமுக பணியாற்றி வருகிறது. பேசும் இடங்களில் எல்லாம் முதல்வர் மு.க.ஸ்டாலின் இதைத்தான் வலியுறுத்திப் பேசி வருகிறார். இருப்பினும், மக்கள் மத்தியில் நிலவும் ஏமாற்றங்களுக்குப் பஞ்சம் இல்லை. அதேபோல நிறைய எதிர்பார்ப்புகள், விலைவாசி உயர்வு போன்ற பொருளாதார சவால்கள், மற்றும் ஆளும் கட்சிக்கு எதிரான இயல்பான எதிர்ப்பு அலை ஆகியவை திமுக எதிர்கொள்ளும் சவால்களாக அமையும். 


கூட்டணிக் கட்சிகளுடனான உறவும், தொகுதிப் பங்கீடும் திமுகவுக்கு முக்கியமானதாக இருக்கும். சில கூட்டணிக் கட்சிகள் அதிக சீட்கள் கேட்கும் நிலையில் உள்ளன. அவற்றையும் திமுக சமாளிக்க வேண்டும். விஜய் என்ற எழுச்சியை சமாளிக்க வேண்டும். பாஜக தரப்பிலிருந்து வரும் பல்வேறு இடையூறுகளை சமாளிக்க வேண்டும். இதைத் தாண்டித்தான் அது வெற்றிக் கோட்டை தொட முடியும் என்பதால் திமுகவுக்கு இது சவாலான தேர்தல்தான்.


அதிமுக: இழந்த செல்வாக்கை மீட்டெடுக்கப் போராட்டம்


10 வருட காலம் ஆட்சிப் பொறுப்பில் இருந்து விட்டு, 2021 தேர்தலில் எதிர்க்கட்சியாக மாறிய அதிமுக, 2026 தேர்தலில் தனது இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க தீவிரமாக முயற்சிக்கும். 


பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் களமிறங்கும் அதிமுக, உட்கட்சிப் பூசல்கள் மற்றும் இரட்டைத் தலைமைப் பிரச்சினை போன்றவற்றிலிருந்து மீண்டு வந்துள்ளது. தற்போது ஒற்றைத் தலைமையுடன் தேர்தலை சந்திக்கிறது. இடைப்பட்ட காலத்தில் நடந்த அனைத்துத் தேர்தல்களிலும் அதிமுக தோல்வியுற்றிருப்பது அக்கட்சிக்கு பின்னடைவுதான். 


அதேசமயம், பாஜகவுடனான கூட்டணி உறவும், பாமக, தேமுதிக போன்ற கட்சிகளைத் தன் பக்கம் ஈர்ப்பதும் அதிமுகவுக்கு சவாலான காரியமாக இருக்கும். கடந்த மக்களவைத் தேர்தலில் ஏற்பட்ட சறுக்கல், அதிமுகவுக்கு ஒரு எச்சரிக்கை மணியாகவே ஒலிக்கும். இந்த முறை அதிமுக வெல்வது அத்தனை எளிதாக இருக்காது என்பதால் நிச்சயம் அக்கட்சிக்கு இது வாழ்வா சாவா போராட்டம்தான். 


ஒரு வேளை இத்தேர்தலில் அதிமுக பெரும் தோல்வியைச் சந்தித்தால் எடப்பாடி பழனிச்சாமியின் தலைமைப் பதவிக்கும் கூட ஆபத்து வரும் என்பதில் சந்தேகம் இல்லை.


பாஜக: தேசிய அளவில் வலுப்பெறும் கனவு


பாஜக தமிழ்நாட்டில் காலூன்ற வேண்டும் என்ற நீண்டகால இலக்குடன் செயல்பட்டு வருகிறது. மத்திய அரசின் திட்டங்கள், இந்துத்துவ சித்தாந்தம், மற்றும் பிரதமர் மோடியின் செல்வாக்கு ஆகியவற்றின் மூலம் தமிழ்நாட்டில் தனது வாக்கு சதவீதத்தை உயர்த்த பாஜக முயற்சிக்கும். அதிமுகவுடன் கூட்டணி அமைத்ததன் மூலம் கணிசமான இடங்களைக் கைப்பற்றலாம் என்று பாஜக கருதுகிறது.


இருப்பினும், திராவிடக் கட்சிகளின் ஆதிக்கம் நிறைந்த தமிழகத்தில், பாஜக ஒரு தனிப் பெரும் சக்தியாக உருவெடுப்பது அவ்வளவு எளிதல்ல. அண்ணாமலை போன்ற தலைவர்கள் மூலம் களத்தில் தீவிரமாக செயல்பட்டாலும், மக்களிடையே முழுமையான அங்கீகாரத்தைப் பெறுவது பாஜகவுக்கு ஒரு பெரும் சவாலாக இருக்கும். தற்போது அண்ணாமலை தலைமைப் பொறுப்பில் இல்லாத நிலையில் அக்கட்சியின் செயல்பாடுகள் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டியிருக்கிறது.


நாம் தமிழர் கட்சி: தனித்து நின்று வளர்ந்து வரும் சக்தி


சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி, கடந்த சில தேர்தல்களில் தொடர்ந்து தனித்துப் போட்டியிட்டு, தனது வாக்கு சதவீதத்தை கணிசமாக உயர்த்தி வருகிறது. திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக, தமிழ்த் தேசியம் என்ற சித்தாந்தத்துடன் களமிறங்கும் நாம் தமிழர் கட்சி, இளைஞர்கள் மற்றும் குறிப்பிட்ட சமூகத்தினர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 


2026 தேர்தலிலும் தனித்துப் போட்டியிட்டு, தனது வாக்கு வங்கியை மேலும் வலுப்படுத்த நாம் தமிழர் கட்சி முயலும். இது திமுக மற்றும் அதிமுகவின் வாக்கு வங்கிகளைப் பிரிக்கும் என்பதால், நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சி ஒரு முக்கியமான காரணியாகப் பார்க்கப்படுகிறது.


8 சதவீத வாக்குகளைப் பெற்று அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக உருவெடுத்துள்ள நாம் தமிழர் கட்சிக்கு, விஜய்யின் தவெக ஒரு இடையூறாக கருதப்படுகிறது. அதையும் சமாளித்து இந்தத் தேர்தலில் தனது வாக்கு வங்கியை நாம் தமிழர் கட்சி பெற்றால் அக்கட்சி எதிர்காலத்தில் மிகப் பெரிய சக்தியாக உருவெடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.


விஜய் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் வருகை




நடிகர் விஜய் தனது "தமிழக வெற்றிக் கழகம்" என்ற புதிய கட்சியைத் தொடங்கி, 2026 சட்டமன்றத் தேர்தலில் களமிறங்கப் போகிறார். இடைப்பட்ட இந்த இரண்டு ஆண்டுகளில் அவரது கட்சி மீதான எதிர்பார்ப்புகளை அதிகரிக்க வைத்துள்ளார். ஒரு விதமான பில்டப்பும் உருவாகி விட்டதால், அக்கட்சிக்கு பெரும் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.


விஜயின் ரசிகர்கள் பட்டாளம் மிகப்பெரியது என்பதால், அவரது கட்சி கணிசமான வாக்குகளைப் பிரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது எந்தக் கட்சிக்கு சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ அமையும் என்பது தேர்தல் முடிவுகளில்தான் தெரியும்.


பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்பதை விஜய் நேற்று திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். அதேபோல , பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ளதால் அதிமுகவுடனும் கூட்டணி கிடையாது. அதேசமயம், பாஜக கூட்டணியை விட்டு அதிமுக வெளியே வந்தால் தவெக அக்கட்சியுடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. 


இருப்பினும், தமிழ்நாட்டில் அசைக்க முடியாத சக்தியாக மாறிவலுடன் இருக்கும் திராவிடக் கட்சிகளின் வாக்கு வங்கியை விஜய் கட்சியால் தகர்க்க முடியுமா அல்லது புதிய வாக்குகளை மட்டுமே ஈர்க்குமா என்பது முக்கியமான கேள்வியாக உள்ளது.


இப்படி அனல் பறக்கும் கூட்டணிகள் கிட்டத்தட்ட வடிவம் பெற்று விட்டதால், அடுத்த 10 மாதங்கள் தமிழக அரசியல் களம் பல திருப்பங்களையும், விறுவிறுப்பான மாற்றங்களையும் காணும் என்பதில் சந்தேகமில்லை.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அமெரிக்காவின் காலக்கெடுவுக்கு பிரதமர் மோடி பணிந்து போவார்.. ராகுல் காந்தி பேச்சு

news

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு!

news

One Big and Beautiful bill.. வரி மற்றும் செலவு மசோதாவில் கையெழுத்திட்ட அதிபர் டிரம்ப்!

news

தேவசயனி ஏகாதசி.. சனிக்கிழமை இரவு தொடங்கி.. ஞாயிறு காலை முடியும்!

news

தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில்.. குஷ்பு, கெளதமி.. எந்தெந்த நடிகைகள் போட்டியிட சீட் கிடைக்கும்?

news

நிலையற்ற விலையில் தங்கம்... நேற்று குறைந்த தங்கம் விலை இன்று உயர்வு!

news

2026 தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல்.. விஜய் வழி தனி வழி.. தெளிவா சொல்லிட்டாரு.. 4 முனைப் போட்டிதான்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 05, 2025... இன்று வெற்றிகள் தேடி வரும் ராசிக்காரர்கள்

news

2026 சட்டசபைத் தேர்தல்: விஜய்தான் முதல்வர் வேட்பாளர் .. பாஜகவுடன் கூட்டணி கிடையாது.. தவெக அதிரடி!

அதிகம் பார்க்கும் செய்திகள்