திரைப்பாடல்களில் காதல் இலக்கியம்.. தித்திக்கும் தமிழ்ப் பாடல்கள்!

Jun 13, 2025,10:45 AM IST

- தென்றல்


காதல்! ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான இன்பமான உணர்வு. வார்த்தைகளால் நிரப்பி விளங்க வைக்க முடியாத சொல்.


சந்தித்த வேளையில், சிந்திக்கவே இல்லை, தந்துவிட்டேன் என்னை! என்று கண்ணதாசன் ஒரு பாடலில் எழுதியது போல, காதல் என்பது அறிவுக்கு எட்டாது மனதிற்குள் நிகழும் ஒரு ரசாயன மாற்றம். 


உயிருக்கு உயிரான காதலர்களாக இருந்தாலும் அவர்களுக்கு இடையில் சிறு சிறு சண்டைகள் வருவது இயல்புதானே. இந்தச் செல்லச் சிணுங்கல்கள் இல்லாது போனால் காதல் எப்படி சுவைக்கும்? இதற்கு பெயர் ஊடல்!


"ஊடலுவகை" என்று ஒரு அதிகாரமே எழுதி வைத்திருக்கிறார் வள்ளுவர். உவகை என்றால் மகிழ்ச்சி.


"ஊடுதல் காமத்திற்கின்பம் அதற்கின்பம்

கூடி முயங்கப் பெறின்"




என்கிறது ஒரு குறள். அதாவது காமத்திற்கு இன்பம் தருவது ஊடல் தானாம். ஊடல் முடிந்து சமாதானமாகி கூடி தழுவினால் அந்த ஊடலினால் இன்பம் இன்னும் அதிகமாகிறதாம். 


சரி..சரி.. வள்ளுவன் சொன்னால் உண்மையாகத்தான் இருக்கும். 


இப்படியான ஊடலை பல திரைப்பாடல்களில் ஏற்றி விளையாடி இருக்கிறார்கள் நம் கவிஞர்கள். அதிலும் கண்ணதாசன் அவர்கள் கைகளில் இந்தக் கருபொருளைக் கொடுத்தால் என்னவாகும்? காதல் தேன் சொட்ட சொட்ட பாடல்கள் தித்திப்பாகும்.


அப்படி ஒரு பாடலில், பூங்காவில் ஒரு காதலன் காதலிக்காகக் காத்திருக்கிறான். நேரங்கள் யுகங்களாகத் தோன்றுகின்றன.  பொறுமையை இழந்திருக்கிறான். ஒரு வழியாக காதலி வந்து சேருகிறாள். அவளிடம் சொல்கிறான்:


Video: தித்திக்கும் தமிழ்ப் பாடல்கள்


"நான் மலரோடு தனியாக ஏனிங்கு நின்றேன்

என் மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்" என்று. 


அவளுக்குப் புரிந்துவிட்டது! இவன் கோபமாக இருக்கிறான். அவள் சொல்கிறாள்:


"நீ இல்லாது யாரோடு உறவாட வந்தேன்

உன் இளமைக்கு துணையாகத் தனியாக வந்தேன்" என்று. 


இவன் குற்றச்சாட்டுகளை அடுக்குகிறான். 


"நீ வருகின்ற வழி மீது யார் உன்னை கண்டார்? 

உன் வளை கொஞ்சும் கை மீது பரிசென்ன தந்தார்? 

உன் மலர் கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்? 

உன் வடிவான இதழ் மீது சுவை என்ன தந்தார்? "


உன் வடிவான இதழ் மீது சுவை என்ன தந்தார் -  அம்மாடியோ! இது பெரிய குற்றச்சாட்டாக இருக்கிறதே! இப்போது இவனைச் சமாதானம் செய்தாக வேண்டும். 


அவள் சொல்கிறாள்: 


"பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத.. 

நான் வளை கொண்ட கையாலே மெதுவாக மூட..

என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக..

நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற" 


சங்க இலக்கியங்களில், தலைவன் தலைவி ஊடலின் அடிப்படையிலான பாடல் வரிகள் இவை!  கேட்பதற்கே ஆனந்தமாக இருக்கிறது அல்லவா.. மீண்டும் சுவைக்கலாம்!


(தென்றல் தொடர்ந்து வீசும்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் இன்று முதல் நவம்பர் 7ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்!

news

ஸ்ரீகாகுளம் கோவில் நிர்வாகம் அனுமதி வாங்கவில்லை...விசாரணைக்கு ஆந்திர முதல்வர் உத்தரவு

news

அரசின் தோல்விக்காக.. ஆசிரியர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளை கையேந்த வைப்பது கண்டிக்கத்தக்கது: அன்புமணி

news

மத்திய அரசு பள்ளிகளில் இந்தியை திணிக்கிறது...சித்தராமைய்யா காட்டம்

news

திமுகவிடம் இருந்து தமிழ்நாட்டை மீட்போம்.. 2026ல் உண்மையான மக்களாட்சியை அமைப்போம்: தவெக தலைவர் விஜய்

news

Aadhar update ஆதாரில் இன்று முதல் புதிதாக நடைமுறைக்கு வரும் மாற்றங்கள் பற்றி தெரியுமா?

news

டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோஹன் போபண்ணா அறிவிப்பு

news

ஸ்ரேயாஸ் ஐயர் சிட்னி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்

news

தமிழ்நாடு என்றால் தமிழ் என்ற அடையாளத்தை தமிழகம் இழந்து வருகிறது: அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்