- அ.வென்சி ராஜ்
சிரித்தால் குழி விழும் அழகிய கன்னத்தில், கண்ணீர் வழிய அமர்ந்திருந்தாள் சுமதி. இவளுடைய ஆசிரியர் எவ்வளோ சொல்லியும் எட்டாம் வகுப்பிற்கு மேல் படிக்காமல் அலட்சியமாய் வீட்டில் இருந்து விட்டாள். பெற்றோரும் இளம் வயதிலேயே நல்ல வரன் வந்தது என்று திருமணம் செய்து கொடுத்துவிட்டார்கள். வைரம் போல அழகாய் ஐந்து வயதிலும் இரண்டு வயதிலும் இரண்டு பெண் குழந்தைகள்.
சென்ற மாதம் நடந்த விபத்து ஒன்றில் கணவர் இறந்து போக விரக்தியின் உச்சத்தில் அமர்ந்திருந்தாள். வீட்டிற்கு வருவோரும் போவோரும் ஆளுக்கு ஒரு யோசனையைச் சொல்கிறேன் என அவள் மனமென்னும் குட்டையை மேலும் கலக்கிச் சென்றனர்.
நன்கு குழம்பிப் போயிருந்த அவள் படிப்பையும் பாதியில் நிறுத்தி விட்டோம், இப்பொழுது கணவரும் இல்லை எப்படி இந்த இரண்டு பெண் குழந்தைகளை வளர்ப்பது? என்னால் முடியுமா? எனத் திகைத்துப் போய் மிரட்சியாய் கண்ணீரோடு அமர்ந்திருந்தாள்.
இவளைப் பற்றிய செய்தியைக் கேள்விப்பட்ட அவளுடைய ஆசிரியர் திருமதி ஜோசி அவர்கள் சுமதியைக் காண வந்தார்கள். அவளைப் பார்த்ததும் ஆசிரியர் ஜோசி அவர்களின் கண்கள் குளம் எனத் தேங்கியது. "நான் எவ்வளவு சொல்லி இருப்பேன் படி என… கேட்டாயா? இந்நேரம் நீ படித்திருந்தால் உனக்கு அந்தப் படிப்பு எவ்வளவு உதவியாக இருந்திருக்கும்" எனக் கூறினார்.
ஆசிரியரின் கைகளைப் பற்றிக் கொண்டு அழுதாள் சுமதி. அப்பொழுது ஆசிரியர் மெதுவாக அவளுடைய தலையை வருடி "வருத்தப்படாதே.. அழாதே.. கலங்கி நிற்காதே.. கற்ற கல்வி ஒருபொழுதும் நம்மை கைவிடாது. எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது சொல்கிறேன் செய்கிறாயா?" எனக் கேட்டார்.

உடனே சுமதி "சரி" எனத் தலையாட்டினாள். "எட்டாம் வகுப்பு வரை படித்திருக்கிறாய் அல்லவா? சட்டை தைக்கக் கற்றுக் கொண்டதெல்லாம் நினைவிருக்கிறதா? அதை கொஞ்சம் நினைவுபடுத்திக் கொள். நான் உனக்கு ஒரு தையல் இயந்திரம் வாங்கித் தர ஏற்பாடு செய்கிறேன். வீட்டில் இருந்து தைக்கத் தொடங்கு. அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் உன்னிடம் தைக்கக் கொடுப்பார்கள். ஏதோ ஓரளவு உன்னால் முடிந்த வரை முயற்சி செய்" எனக் கூறினார்.
அவளுக்கும் அது சரி எனப்பட்டது. ஆனால் என்னால் முடியுமா என வினவினாள். உடனே ஆசிரியர் "உன்னால் கண்டிப்பாக முடியும் முயற்சி செய். அப்படியும் மீதி இருக்கும் நேரங்களில் வடகம், வத்தல், ஊறுகாய் என உன்னால் முடிந்தவற்றைச் செய்து பாக்கெட்டுகளிலோ பாட்டில்களிலோ போட்டு விற்கலாம். அதற்கும் என்னால் ஆன உதவிகளைச் செய்கிறேன்" எனக் கூறினார்.
உடனே சுமதி "என்னால் ஏனம்மா உங்களுக்கு வீண் சிரமம்" எனக் கேட்டாள். அதற்கு ஆசிரியர் "அதெல்லாம் சிரமம் கிடையாது சுமதி. எங்களிடம் படித்த குழந்தைகள் வகுப்பை முடித்துச் சென்றவுடன் அத்தோடு விட்டுவிடுவது எங்களுக்குப் பழக்கமல்ல. ஆசிரியர்களாகிய நாங்கள் உங்களுக்கு வாழ்நாள் முழுவதும் ஆசிரியர்களே. எல்லாச் சூழ்நிலைகளிலும் வாழ்க்கையைக் கற்றுக் கொடுக்க வேண்டியவர்கள் நாங்கள் தான். அதனால் நான் செய்வதை ஒரு உதவியாக எடுத்துக் கொள். நீ எப்பொழுது நல்ல நிலைமைக்கு வருகிறாயோ அப்பொழுது எனக்குத் திருப்பித் தரலாம்" எனக் கூறினார்.
அவருடைய வார்த்தைகள் இவளுக்குப் புது உத்வேகத்தையும் நம்பிக்கையையும் தந்தது. அவர் கூறியபடியே ஒரு தையல் இயந்திரம் வாங்கித் தைக்கத் தொடங்கினாள். சும்மா இருக்கும் நேரங்களில் வடகம், வத்தல், ஊறுகாய் எனப் பலவற்றைத் தயார் செய்து பாக்கெட்டுகளாகப் போட்டுக் கடைகளுக்கும் வீடுகளுக்கும் கொடுக்கத் தொடங்கினாள்.
நல்ல வருமானம் வந்தது. மனநிறைவோடு தன் குழந்தைகளுடன் மகிழ்வான ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொண்டாள். அப்பொழுது தான் அவள் நினைத்தாள்... "என்னால் முடியுமா? எனக் கேட்பது முட்டாள்தனம் ... என்னால் முடியும் என நினைப்பதே நமக்கான மூலதனம்" ஆண் துணையில்லை என்றதும் அழுது கொண்டு ஒரு மூலையில் சோர்ந்து போய் துவண்டு விடாமல், ஒரு பெண்ணால் எதுவும் முடியும் என நினைத்து எடுத்த முயற்சி வெற்றி தந்தது.
இந்தத் தருணத்தில் சுமதி தன் ஆசிரியர் திருமதி ஜோசி அவர்களுக்கு ஆனந்தக் கண்ணீரால் நன்றி கூறினாள். தான் செய்த தவறைத் தன் மகள்களும் செய்து விடக்கூடாது என்பதால் தன் அன்பு மகள்கள் வளர்ந்ததும் எந்தக் கல்லூரியில் படிக்க வைக்கலாம் என யோசித்துக் கொண்டிருந்தாள். இப்பொழுது சுமதி ஒரு நிமிடம் சிந்தித்தாள்.
என்னால் முடியுமா என்ற வினா..... என்னால் முடியும் என்ற விடையானது.
(அ. வென்சி ராஜ்... இவர் திருவாரூர் பகுதியைச் சேர்ந்தவர். பண்ணைவிளாகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். இவர் பட்டிமன்ற பேச்சாளராகவும், தன்னம்பிக்கை பேச்சாளராகவும், சமூக செயல்பாட்டாளராகவும் அறியப்படுகிறார். திருவாரூர் தமிழ்ச்சங்கம், தமிழ்நாடு புலவர் பேரவை, இந்தியன் ரெட் கிராஸ் ஆகியவற்றில் வாழ்நாள் உறுப்பினராக உள்ளார். செஞ்சிலுவை சங்கத்தில் கொரடாச்சேரி இணை கண்வீனியராகவும், திருவாரூர் இன்னர்வீல் சங்கத்தில் உறுப்பினராகவும், ஹெல்ப் லைன் டிரஸ்ட் என்னும் ரத்ததான அமைப்பில் தலைமை ஆலோசகராகவும் பயணம் செய்கிறார்)
விடைபெற்றார் பாரதிராஜா.. முதல் மரியாதை நாயகனுக்கு ஆயிரக்கணக்கானோர் இறுதி மரியாதை!
அல்லி நகரின் அகல் விளக்கே.. வெள்ளித் திரையின்.. மங்காத ஒளியே!
கரூரில் கூட்ட நெரிசல் வழக்கு:மீண்டும் விறுவிறுப்பான சி பி ஐ விசாரணை
தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுகிறாரா? டெல்லியில் தீவிர ஆலோசனை
எம்ஜிஆர்., வழியில்...நாளை கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்லும் முதல்வர் விஜய்
என்னது...முதல்வர் தொகுதியிலேயே குடிநீர் விநியோகம் ரத்தா?
நமது துன்பத்திற்கு நாமே காரணமா?
திமுக கூட்டணியில் சி.பி.ஐ. நீடிக்கும் சூழல் இப்போது இல்லை.. மு.வீரபாண்டியன் அறிவிப்பு
ஹார்மோஸ் நீரிணை முற்றிலும் மூடல்: ஈரான் ராணுவம் அதிரடி அறிவிப்பு
{{comments.comment}}