IndiaVsPakistan: "ஜெய்ஸ்ரீராம்" கோஷமிட்டு.. பாக். வீரரை சீண்டிய இந்திய ரசிகர்கள்!

Oct 15, 2023,12:39 PM IST

அகமதாபாத்: அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று நடந்த உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியின்போது ஆட்டமிழிந்து பெவிலியன் திரும்பிய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகம்மது ரிஸ்வானைப் பார்த்து ஜெய்ஸ்ரீராம் கோஷமிட்ட ரசிகர்களால் பரபரப்பு ஏற்பட்டது.


தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் இந்த செயலைக் கண்டித்துள்ளனர்.


சில நாட்களுக்கு முன்புதான் ரிஸ்வான், காஸா மக்களுக்கு ஆதரவாக டிவீட் போட்டிருந்தார். இலங்கை அணிக்கு எதிரான வெற்றியை, காஸாவைச் சேர்ந்த சகோதர, சகோதரிகளுக்கு அர்ப்பணிப்பதாக அவர் தெரிவித்திருந்தார். மறுபக்கம், இந்தியாவிலோ பலரும் குறிப்பாக ஒரு குறிப்பிட்ட கட்சியைச் சேர்ந்தவர்கள் இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளனர். இஸ்ரேலைப் புகழ்ந்தும், இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதல் உத்திகளைப் புகழ்ந்தும்,  பாராட்டியும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் களமாடி வருகின்றனர். பாலஸ்தீனியர்களுக்கு எதிராகவும், முஸ்லீம்களுக்கு எதிராகவும் இவர்கள் தொடர்ந்து பேசியும், எழுதியும் வருகின்றனர்.




இந்தப் பின்னணியில்தான் நேற்று ரிஸ்வானைப் பார்த்து சில ரசிகர்கள்  ஜெய்ஸ்ரீராம் கோஷமிட்டு முகம் சுளிக்க வைத்துள்ளனர். அவர் காஸா மக்களுக்கு ஆதரவாக டிவீட் போட்டதால்தான் இந்த சீண்டல் நடந்ததாக கருதப்படுகிறது.


இந்தியா - பாகிஸ்தான்  கிரிக்கெட்


இந்தியா - பாகிஸ்தான் இடையே உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி நேற்று நடந்தது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியம்தான் உலகிலேயே மிகப் பெரியஸ்டேடியமாக கருதப்படுகிறது. கிட்டத்தட்ட 1.30 லட்சம் பேர் இங்கு அமர முடியும். நேற்று மைதானம் நிரம்பியிருந்தது. அதாவது 1.30 லட்சம் பேர் அங்கு குழுமியிருந்தனர்.


மைதானத்தில் குழுமியிருந்த ரசிகர்களில் சிலர்தான் இதை விளையாட்டாகப் பார்த்து ரசித்தனர். பெரும்பாலானவர்கள் ஏதோ இந்தியாவும், பாகிஸ்தானும் போர் புரிவது போலத்தான் நடந்து கொண்டனர். அவர்களது வெறித்தனமான சத்தம் போட்டி முழுவதும் நீடித்தது.


பாகிஸ்தான் அணி பேட்டிங்கின்போது அந்த அணியின் விக்கெட் கீப்பரான முகம்மது ரிஸ்வான் 49 ரன்கள் எடுத்த நிலையில் ஜஸ்ப்ரீத் பும்ரா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.  ஆட்டமிழந்து அவர் பெவிலியன் திரும்பியபோது வழியில் இரு பக்கமும் அமர்ந்திருந்த ரசிகர்களில் சிலர் ரிஸ்வானைப் பார்த்து ஜெய்ஸ்ரீராம் என்று கோஷமிட்டனர். அவரை சிலர் திட்டவும் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ரிஸ்வான் இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் அவர் பாட்டுக்குப் போய் விட்டார். சிலர் பாபர் மசூதி குறித்தும், சிலர் பாகிஸ்தானை விமர்சித்தும் பேசியதால் சலசலப்பு ஏற்பட்டது.


சென்னை ரசிகர்களின் நாகரீகம்


இந்த சம்பவம் குறித்து பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். விளையாட்டை விளையாட்டாக எடுத்துக் கொள்ள வேண்டும். நமது நாட்டுக்கு வந்திருக்கும் விளையாட்டு வீரர்களை மரியாதையுடன் நடத்த வேண்டியது நமது கடமை. அவர்களை மதத்தின் பெயராலும், நாட்டின் பெயராலும் இகழ்வது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல.. அநாகரீகமானது என்று பலரும் கண்டித்துள்ளனர்.




1999ம் ஆண்டு நடந்த சுதந்திரக் கோப்பை கிரிக்கெட் தொடரின்போது, சென்னையில் இந்தியா பாகிஸ்தான் மோதிய முக்கியப் போட்டி நடைபெற்றது. அப்போது பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் சயீத் அன்வர் அதிரடியாக ஆடி 194 ரன்களைக்  குவித்தார். இந்திய பந்து வீச்சை சிதறடித்து அவர் ஆடிய விதம் அந்தக் காலகட்டத்தில் மிகப் பெரிதாக பேசப்பட்டது. அவரது அபார ஆட்டத்தால் பாகிஸ்தான் அப்போட்டியில் வெற்றி பெற்றது. வெற்றி பெற்றதும், பாகிஸ்தான் வீரர்கள் சந்தோஷத்துடன் மைதானத்தை வலம் வந்தபோது மொத்த ரசிகர்களும் எழுந்து நின்று கைதட்டி பாகிஸ்தான் வீரர்களைப் பாராட்டிய காட்சியைப் பார்த்து மொத்த பாகிஸ்தானியர்களும் நெகிழ்ந்து போனார்கள்.  அந்த இடத்தில் பாகிஸ்தான் வெல்லவில்லை.. இந்தியாவும் தோற்கவில்லை.. மாறாக கிரிக்கெட் வென்றது.


விளையாட்டை விளையாட்டாக மட்டுமே சென்னை ரசிகர்கள் பார்த்தார்கள்.. சிறப்பாக விளையாடியவர் யாராக இருந்தாலும் பாராட்ட வேண்டும் என்ற அடிப்படையில்தான் சயீத் அன்வருக்கு மரியாதை கொடுத்தார்கள். ஆனால் குஜராத் ரசிகர்கள் சிலர் நடந்து கொண்ட நேற்றைய செயல் பலரையும் முகம் சுளிக்க வைத்து விட்டது.


உதயநிதி ஸ்டாலின் கருத்து


அகமதாபாத் ஸ்டேடியத்தில் நடந்த சம்பவம் குறித்து தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.




இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள டிவீட்டில், விளையாட்டை மதிப்பதற்கும், விருந்தோம்பலுக்கும் பெயர் போனது இந்தியா. ஆனால் அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு நேர்ந்தது ஏற்றுக் கொள்ளப்பட முடியாதது.  மிகவும் தரக்குறைவான செயல் இது.


விளையாட்டு நாடுகளை இணைக்க வேண்டும். உண்மையான சகோதரத்துவத்தை ஏற்படுத்த வேண்டும். அதற்குத்தான் விளையாட்டைப் பயன்படுத்த வேண்டுமே தவிர,  துவேஷத்தைப் பரப்ப இதை பயன்படுத்துவதை அனுமதிக்கக் கூடாது, அதைக் கண்டிக்க வேண்டும் என்றார் அவர்.



சமீபத்திய செய்திகள்

news

தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!

news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்

news

அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!

news

Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!

news

படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!

news

எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!

news

நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!

news

புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து

அதிகம் பார்க்கும் செய்திகள்