லோக்சபா சபாநாயர் பதவி.. 3 கட்சிகள் போட்டா போட்டி.. காய் நகர்த்தும் பாஜக.. வெற்றி யாருக்கு?

Jun 10, 2024,05:32 PM IST

டில்லி : அமைச்சரவை ஒதுக்கீட்டில் கூட்டணி கட்சிகளுடன் ஒத்துபோய், ஒரு வழியாக அமைச்சர் சீட்களை ஒதுக்கி முடித்தாகி விட்டது. யாருக்கு எந்த துறை என்பதும் ஏறக்குறைய முடிவு செய்யப்பட்டு விட்டதாகவே சொல்லப்படுகிறது. ஆனால் இப்போது லோக்சபா சபாநாயகர் பதவிக்கு அனைத்து கட்சிகளும் முட்டி மோதிக் கொண்டிருக்கின்றனவாம். 


லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று, மொத்தமுள்ள 534 இடங்களில் 303 என்ற பெரும்பான்மை பலத்தை கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பெற்று, மத்தியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்து விட்டது பாஜக. பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையும் நேற்று பதவியேற்றுக் கொண்டுள்ளது. 


பாஜக மற்றும் கூட்டணி கட்சி எம்.பி.,க்களில் மத்திய அமைச்சர், இணையமைச்சர் என மொத்தம் 72 பேர் கொண்ட மத்திய அமைச்சரவை நேற்று பதவியேற்றுக் கொண்டனர். ஆனால் இவர்களில் யாருக்கு எந்த துறை என்ற தகவல் வெளியாகவில்லை.  இன்று மாலை அந்த விவரம் தெரிய வரும். ஆனால் மோடி 2.ஓ.,வில் இடம்பிடித்த பெரும்பாலானவர்களுக்கு தற்போதும் அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டுள்ளதால் ஏற்கனவே அவர்கள் வகித்த துறைகளே மீண்டும் அவர்களுக்கு ஒதுக்கப்பட உள்ளதாக தெரிகிறது. சிலருக்கு இலாகா மாறக் கூடுமாம்.


லோக்சபா சபாநாயகர் பதவிக்கு சண்டை:




அமைச்சரவையில் யாருக்கு எத்தனை இடம் என ஒரு வழியாக கூட்டணி கட்சிகளுடன் பேசி முடித்து விட்டார்கள். இப்போது லோக்சபா சபாநாயகர் பதவிக்கு பாஜக, தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் குறி வைத்துள்ளன. சபாநாயகர் பதவி என்பது பிரதமரை விடவும் செல்வாக்கு நிறைந்த பதவி ஆகும். அதாவது ஜனாதிபதி, துணை ஜனாதிபதிக்கு அடுத்துள்ள பதவி. அமைச்சரவையில் முக்கிய துறைகளை தங்கள் வசமே வைத்துக் கொள்ள நினைப்பதை போலவே, லோக்சபா சபாநாயகர் பதவியையும் தாங்களே வைத்துக் கொள்ள வேண்டும் என பாஜக நினைக்கிறது.


சபாநாயகர் பதவி நம்மிடம் இருந்தால்தான் நாடாளுமன்றம் நமது கட்டுக்குள் இருக்கும். கூட்டணிக் கட்சிகளிடம் அதைக் கொடுத்து விட்டால், நமது பிடியை நாமே விட்டுக் கொடுத்தது போலாகி விடும் என்று பிரதமர் மோடி  கருதுகிறாராம்.  இதன் காரணமாக பாஜகவிடம் ஒரு யோசனை உள்ளதாம்.


என்டிஆர் மகள் புரந்தேஸ்வரி




ஆந்திர பாஜக தலைவர் புரந்தேஸ்வரியை சபாநாயகர் பதவிக்கு பாஜக., முடிவு செய்து வைத்துள்ளதாம். இதில் ஒரு ராஜதந்திரம் இருக்கிறது. மறைந்த என்.டி.ராமாராவின் மகள்தான் புரந்தேஸ்வரி. காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தவர். மாநில பாஜக தலைவராக இவரை உட்கார வைத்தது பாஜக. ஒரு வேளை எதிர்காலத்தில் என்டிஆர் குடும்பத்தின் ஆதரவு தேவைப்படலாம் என்ற முன் யோசனையில்தான் புரந்தேஸ்வரியை மாநில தலைவராக்கியது பாஜக.


ராஜமுந்திரி எம்.பியாக தேர்வாகியுள்ளார் புரந்தேஸ்வரி. புரந்தேஸ்வரியின் சகோதரிதான் ஆந்திர முதல்வராகப் பதவியேற்கவுள்ள சந்திரபாபு நாயுடுவின் மனைவி புவனேஸ்வரி.  எனவே புரந்தேஸ்வரியை சபாநாயகராக்க பாஜக முடிவு செய்தால், அதற்கு சந்திரபாபு நாயுடு எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார் என்று பாஜக கணக்கு போடுகிறது.  இதனால் புரந்தேஸ்வரியை முன்னிறுத்தி சந்திரபாபு நாயுடுவை தன் பக்கம் கொண்டு வர பாஜக முயல்கிறதாம்.


அதே சமயம், நாளை கூட்டணிக்குள் பிரச்சனை என்று வந்தால் பாஜக., தங்கள் கட்சியை உடைத்து விடக் கூடாது என்பதற்காக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஐக்கிய ஜனதா தளம் கட்சியும்  சபாநாயகர் பதவியை கைப்பற்றி விட முயற்சி செய்கிறது.  மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ், சிவசேனா ஆகிய கட்சிகள் உடைக்கப்பட்டபோது பாஜகவுக்கு சாதகமாக சபாநாயகர் எடுத்த முடிவுகளால் அந்த இரு கட்சிகளின் அங்கீகாரமும் பறி போயின, சின்னம் பறி போனது.. தேர்தல் ஆணையமும் அவர்களுக்கு உதவவில்லை. இதனால்தான் சபாநாயகர் பதவியின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதைக் கைப்பற்ற தெலுங்கு தேசமும், ஐக்கிய ஜனதாதளமும் முயலுகின்றன.


ஆனால் கூட்டணி கட்சிகளுக்கு சபாநாயகர் பதவியை விட்டுக் கொடுத்து விடக் கூடாது என்பதற்காக பாஜக., நைசாக காய் நகர்த்தி வருகிறது. 


இந்தியா கூட்டணி வேட்பாளர் யார்?




இதற்கிடையில் எதிர்க்கட்சி சார்பில் இந்தியா கூட்டணியும் சபாநாயகர் பதவிக்கு யாராவது ஒருவரை நிறுத்த வாய்ப்புள்ளது. அப்படி எதிர்க்கட்சிகள் சார்பில் வேட்பாளர் நிறத்தப்பட்டால் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டு, அதிக எம்பி.,க்களின் ஆதரவு பெறுபவரே சபாநாயகராக தேர்வு செய்யப்படுவார். அதே சமயம் எதிர்க்கட்சிகள் தரப்பில் யாரும் நிறுத்தப்படவில்லை என்றால் பொதுவான ஒருவரை பாஜக., நிறுத்த வாய்ப்புள்ளது. அவர் எதிர்க்கட்சிகளால் ஒரு மனதாக ஏற்றுக் கொள்ளக் கூடியவராக இருக்க வேண்டும். பாஜக.,விற்கு சாதகமானவராகவும் இருக்க வேண்டும். 


சபாநாயகர் தேர்வை சர்ச்சை இல்லாமல் முடிக்க பாஜக ஆர்வமாக உள்ளது. அதேசமயம், இதை சாக்காக வைத்து லோக்சபாவுக்குள் ஒரு பரபரப்பைக் கிளப்ப காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சிகளும் ஆவலுடன் காத்திருக்கின்றன.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்