இன்று பரணி தீபம்...பரணியில் பிறக்கும் ஈசனின் ஒளி

Dec 02, 2025,12:35 PM IST

அ. சீ. லாவண்யா


ஆருத்ரா தரிசனத்துக்கு ஒப்பான ஆன்மீக உச்சத்தை தரும் பரணி தீபம் நாளை அதிகாலை திருவண்ணாமலையில், பக்தர்களின் பக்தி மற்றும் ஆயிரக்கணக்கான அடியார்களின் கோஷத்துடன் நடைபெறும். நாளை காலை 04.30 மணிக்கு அண்ணாமலையார் சன்னதியில் ஒரு அகண்ட அகலில் நெய் தீபம் ஏற்றப்படும். பின்னர் அதை வெளியில் எடுத்து வந்து, அந்த ஒரு அகலில் இருந்து ஐந்து அகண்ட அகல்களில் நெய் தீபம் ஏற்றப்படும். பிறகு மீண்டும் அந்த ஐந்து தீபங்களும் ஒன்றாக்கப்பட்டு, ஒரே தீபமாக பைரவர் சன்னதியில் வைக்கப்படும். இந்த தீபம் தான் மாலையில் மலை உச்சிக்கு எடுத்துச் செல்லப்பட்டு, மகாதீபமாக ஏற்றப்படும்.


இறைவன் ஒருவனே, அவன் பஞ்சபூதங்களின் வடிவமாக எங்கும் நிறைந்திருக்கிறான் என்ற "ஏகன் அநேகன்" தத்துவத்தை அனைவருக்கும் உணர்த்தவே அண்ணாமலையார் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்படுகிறது. தங்களில் யார் பெரியவர் என போட்டி போட்ட பிரம்மாவுக்கும், விஷ்ணுவுக்கும், அடிமுடி காண முடியா அண்ணாமலையாராக...ஜோதி பிளம்பமாக சிவ பெருமான் காட்சி அளித்தார். தாங்கள் கண்ட இந்த ஜோதி தரிசனத்தை அனைவரும் காண வேண்டும் என அவர்கள் வேண்டியதால் அதே இடத்தில் மலையாக ஈசன் உறைந்ததாகவும், சிவன் ஜோதி வடிவமாக காட்சி தந்த கார்த்திகை பெளர்ணமி நாளில் மகாதீபம் ஏற்றப்படுவதாகவும் புராணங்கள் சொல்கின்றன. மகாதீப தரிசனம் 21 தலைமுறைக்கு முக்தியை தரக் கூடியதாகும்.


பரணி நட்சத்திரத்தில் தீபம் ஏற்றும் சிறப்புகள் : 




கார்த்திகை மாத பரணி நட்சத்திரத்தில் தீபம் ஏற்றுவது "அக்னி வடிவ பரமசிவன்" அருளைப் பெறுவதாக சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. இன்று வீடுகளில் மாலை 6 மணிக்கு பிறகு பரணி தீபம் ஏற்றி விட்டு, நாளை மாலை திருவண்ணாமலை மலை உச்சியில் ஏற்றப்படும் மகாதீபத்தை தரிசித்த பிறகு வீடுகளில் தீபம் ஏற்றி வழிபட வேண்டும் என்பது நியதி. அண்ணாமலையார் கோயிலில் காலை உற்சவம், தீபாராத்தி, அபிஷேகம், வேதப்பாராயணம், ஸ்பெஷல் திருப்பல்லியெழுச்சி ஆகியவை நடைபெறும். அதன் பிறகு பரணி தீபம் ஏற்றப்படும்.


ஜோதிட ரீதியாக பரணி நட்சத்திரம் என்பது யமதர்ம ராஜாவிற்குரியதாகும். தெரிந்தும் தெரியாமலும் நாம் செய்த பாவங்கள் நீங்குவதற்காகவும், நம்முடைய முன்னோர்கள் அவர்கள் செய்த பாவத்திற்காக யமலோகத்தில் துன்பப்படாமல், முக்தியை பெற வேண்டும் என்பதற்காக திருக்கார்த்திகை தீபத்திற்கு முந்தைய தினமான இன்று, பரணி நட்சத்திரத்தில் வீடுகளில் பரணி தீபம் ஏற்ற வேண்டும். ஒரு தாம்பாலத்தில் ஐந்து நெய் அகல் விளக்குகளை வட்டவடிவமாக ஏற்றி வைத்து, வழிபட வேண்டும். இதுவே பரணி தீபம் ஆகும். 


பாதுகாப்பு ஏற்பாடுகள் : 


பக்தர்கள் அதிகளவில் வருவதால், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மருத்துவத்துறை இணைந்து கட்டுப்பாட்டு கோபுரங்களை அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர். திருவண்ணாமலையில் பாதுகாப்பு பணியில் 15,000 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் ஆகியவற்றை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். திருவண்ணாமலையில் நாளை மாலை ஏற்றப்படும் மகாதீபத்தை தரிசிக்க இப்போதே ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிய துவங்கி விட்டனர்.


அரோகரா எனும் முழக்கத்தில் அடியார் மனம் உருகும். தீபம் போலவே நெஞ்சிலும் நம்பிக்கை ஒளி பரவும். இன்றைய பரணி தீபம் வாழ்வை முழுதும் செழிப்பாக மாற்றும். அண்ணாமலையாருக்கு அரோகரா.


(அ.சீ. லாவண்யா, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அதிமுக.,வுக்கு பெரும்பான்மை...என்டிஏ 210 இடங்களில் வெற்றி...எடப்பாடி பழனிச்சாமி உறுதி

news

பிரமிக்க வைக்கும் பிரண்டை துவையல்.. வரலாறு கூறும் சமையல் (பகுதி 3)

news

வசந்த நவராத்திரி!

news

அண்ணன் எடப்பாடி கே.பழனிச்சாமி...டிடிவி தினகரன் பேச்சால் ஆர்ப்பரித்த தொண்டர்கள்

news

ஆங்கிலேயர்களின் கண்ணில் விரலை விட்டு ஆட்டிய.. நாயகன்.. சுபாஷ் சந்திர போஸ்!

news

உங்க வாழ்க்கையே ஆதாரமாகட்டும்.. Let Your Life Be the Proof

news

நாளை 7 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!

news

மதுராந்தகத்தில் பாஜகவின் ஜல்லிக்கட்டு.. பிரதமர் மோடியின் வருகையும் 2026 தேர்தல் கணக்கும்!

news

NDA கூட்ட மேடையில் 'மாம்பழம்' சின்னம்: பிரதமர் மோடி முன்னிலையில் விதிமீறல் என ராமதாஸ் கடும் கண்டனம்

அதிகம் பார்க்கும் செய்திகள்