தேவையில்லை...!

Oct 10, 2026,12:43 PM IST

- பா.பானுமதி


சுமையோடு பிறந்தாலும் 

ஆமை சோர்ந்து போய்விடுவதில்லை 


இமையின்றி பிறந்தாலும் 

மீன்கள் நீரில் அமிழ்ந்து போகவில்லை 


முள்ளோடு இருந்தாலும் 

மீனை மனிதன் சாப்பிடாமல் இருப்பதில்லை 


முள்ளோடு மலர்ந்தாலும் 

ரோஜா வசீகரிக்க தவறுவதில்லை 


கருமையாக இருந்தாலும் 

மேகம் வள்ளல் என்பதை மறப்பதில்லை 




கரடு முரடாக இருந்தாலும்

மலையேற மறப்பதில்லை


வெண்பனி மலையில் வசிக்க முடியாவிட்டாலும் 

ரசிக்க தவறுவதில்லை 


சுனாமி வந்தாலும் மீனவன் கடலுக்குச் செல்லாமல்

சோர்ந்து விடுவதில்லை 


இளமை போனாலும் என்றும் உண்மை காதல் 

உதிர்ந்து போய்விடவில்லை 


கோடை வெயில் கொளுத்தினாலும் 

கோடை மழை குளிர்விக்காமல் விடுவதில்லை


இப்படி இருக்க வலிகளைக் கண்டு வாடாமலாமா

வழிகளை கண்டறியாமல் வளைந்து போகலாமா


கவலைகளைக் கண்டு கலங்கி நிற்பதால் 

கழண்டு போய் விடுவதில்லை 


நீர் திவலையா நினைத்து தள்ளி விட்டு சென்றால் 

அமைதிக்கு பஞ்சம் இல்லை  


சோதனைகளை சொல்லிக் கொண்டிருக்காதே 

வேதனைகளில் விழுந்து கொண்டு இருக்காதே 

போதனைகளில் புதைந்து போகாதே


சாதனையாக்கா விட்டாலும் பரவாயில்லை 

சரித்திரம் படைக்க விட்டாலும் பரவாயில்லை 


சராசரி அமைதியும் நிம்மதியும் கொண்டிரு 

எல்லாம் ஒரு நாள் மாறும் என்று நம்பி இரு 

நாளை நல்லதாகும்


(பா. பானுமதி, ஆசிரியர், கவிஞர், பட்டிமன்றப் பேச்சாளர், மதுரையைச் சேர்ந்தவர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்