பாரதீதீ..!

Dec 13, 2025,02:53 PM IST

- அ.வென்சி ராஜ்


சின்னசுவாமி சுப்பிரமணியாகிய  நீர்....

பாரதியாகி.... 

மகாகவி பாரதியாகி... 

மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தீரோ... 


முண்டாசு கவிஞனே...

முறுக்கு மீசைக்காரனே...

மூடநம்பிக்கையை ஒழிக்க வந்த ஜக்கம்மாவின் அன்பனே.... 

உன் சாட்டையடி வார்த்தைகளுக்கு பயந்தல்லவா இன்றும் ஜாதிகள் பயந்து ஒளிந்து கொண்டிருக்கின்றன... 

மூடநம்பிக்கைகளுக்கு முட்டுக் கொடுத்தவர்களை எல்லாம் முக்காடு போட்டு அல்லவா ஓடச்செய்தாய்... 

தமிழன்னையின் தவப்புதல்வனாய் தன்னிகரில்லா தலைமகனாய் அல்லவா வாழ்ந்து வந்தாய்... 

21ம் நூற்றாண்டின் வளர்ச்சிதனை 19ஆம் நூற்றாண்டிலேயே பட்டியலிட்டவன் அல்லவா நீ.... 

உன் வீர நடை கண்டு வீரர்கள் எல்லாம் ஓடித்தான் போனார்கள்....

உன் தூய தமிழ் கண்டு தீயவர் எல்லாம் தெறித்துதான் ஓடினார்கள்... 


அப்படி உன்னிடம் என்னதான் இருந்தது. . . 




பெயரிலே தீ இருப்பதாலோ என்னவோ... 

உன் வார்த்தைகளிலும் தீ கொழுந்து விட்டு எரிகிறது.....

கொடுமைகளை வார்த்தை என்னும் தீயால்.....

சுட்டெரிப்பாய் என தெரிந்ததால் தான்....

புனைப் பெயராய் உனக்கு

பாரதி எனப் பெயரிட்டனரோ.... 

நீயும்... 

குறிலை நெடிலாக்கி....

கொடுமைகளைக் கண்டு...

கொழுந்து விட்டெறிந்தாயோ...? 


அப்படி என்னதான் உனக்கும் தீக்கும் உறவென்று யோசிக்கிறேன்.... 


ஒன்றா?  இரண்டா? எதைச் சொல்ல..? 


சாதிக்கு வைத்தாய் தீ....

குலத்தாழ்ச்சிக்கு வைத்தாய் தீ.....

பெண் அடிமைக்கு வைத்தாய் தீ....

விடுதலை வேட்கைக்கு மக்கள் மனதில் வைத்தாய் தீ... 

சமூக கொடுமைக்கு வைத்தாய்  தீ.... 

மூடநம்பிக்கை வேரருக்க வைத்தாய் தீ .... 

உன்  செல்லம்மாவுடன் நீ செருக்காக நடக்கையில்  கூட மிடுக்கான தீ... 

கண்ணம்மாவின் அன்பில் கூட அழகிய தீ. ..... 

பாப்பா பாட்டின் பரிந்துரையிலும் பாசத் தீ....

காக்கை சிறகினிலே பற்றி எரிந்த கருமையின் தீ. ..


தீச்சுடர் பாடகனே.. 

உன்னால் மட்டுமே தீக்குள் விரலை வைத்து மகிழ முடிகிறது... 

தீயிலும் இறைவனைக் கண்டு இன்புற்று திளைக்க முடிகிறது... 

இந்நாளில் சமூகத்தில்  தீமைகள் காணும் பொழுது... 

உன்னைப் போல  நானும் தீயாய் சுட்டெரித்து பொசுக்கிட எனக்கும் வார்த்தை என்னும் வரம் தா...

உன் அகவை நாளிலே அகமகிழ்ந்து கூறுகின்றேன். ...

உன்னால் நெடிதுயர்ந்த பெண்கள் பல கோடி பேர்...

சிங்கப்பெண்களாய் சீறி எழுந்தவர்கள் சில கோடி பேர்...

ஜாதி நீக்கி தலை நிமிர்த்தியவர்கள் எத்தனையோ கோடி பேர்...


பாட்டவிழ்த்து விட்டவனே ... 

பல வேடிக்கை மனிதரைப் போல்...

நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ...

என்னும் உன் வரிகளைப் போல ...

வீறு கொண்டு எழுகின்றோம்...

உன் வார்த்தைகளை நெஞ்சில் விதைத்து...

வையம் போற்றி வாழ்வாக்க துடிக்கின்றோம்...

வாழ்க உன் புகழ். ..

பாரதீதீதீ...... 


அ. வென்சி ராஜ், 

திருவாரூர்.


(அ. வென்சி ராஜ்... இவர் திருவாரூர் பகுதியைச் சேர்ந்தவர். பண்ணைவிளாகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். இவர் பட்டிமன்ற பேச்சாளராகவும், தன்னம்பிக்கை பேச்சாளராகவும், சமூக செயல்பாட்டாளராகவும் அறியப்படுகிறார். திருவாரூர் தமிழ்ச்சங்கம், தமிழ்நாடு புலவர் பேரவை, இந்தியன் ரெட் கிராஸ் ஆகியவற்றில் வாழ்நாள் உறுப்பினராக உள்ளார். செஞ்சிலுவை சங்கத்தில் கொரடாச்சேரி இணை கண்வீனியராகவும், திருவாரூர் இன்னர்வீல் சங்கத்தில் உறுப்பினராகவும், ஹெல்ப் லைன் டிரஸ்ட் என்னும் ரத்ததான அமைப்பில் தலைமை ஆலோசகராகவும் பயணம் செய்கிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அலர்ட்!

news

பசி,பட்டினியை போக்கவில்லை... தீபம் ஏற்ற வேண்டும் என கூறுகிறார்கள்: சீமான் ஆவேசம்!

news

வானுயர் ஜிஎஸ்டிபி வளர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது:முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

news

மெஸ்ஸியை பார்க்க முடியாமல் ரசிகர்கள் ஆவேசம்... ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மம்தா பானர்ஜி!

news

வெள்ளை யானை வழிபட்ட திருத்தலம்.. திருவானைக்கா.. தேவாரத் திருத்தலங்கள் (2)

news

திமுக அரசின் துரோகத்திற்கு எதிராக தெருவுக்கு வந்த போராடும் அரசுஊழியர்கள்: அன்புமணி ராமதாஸ் வேதனை!

news

ஜிடிபி வளர்ச்சியில் தமிழ்நாடு புதிய சாதனை.. பெரிய மாநிலங்களில் நம்பர் 1 நாமதான்!

news

தங்கம் விலையில் இன்று மாற்றமில்லை... வெள்ளியின் விலையும் சற்று குறைவு தான்!

news

Flashback 2025.. தென்னிந்தியத் திரையுலகுக்கு பெரும் சோகம் தந்து விடைபெறும் 2025!

அதிகம் பார்க்கும் செய்திகள்