- அ.வென்சிராஜ்
முண்டாசுக் கவிஞனின் கவிதை வரிகளை ஆழமாக உள்வாங்கி ஓர் அழகான கட்டுரை.
கட்டுரைக்கு முன்...
வாழிய செந்தமிழ்! வாழியநற் றமிழர்!
இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க நன்மைவந் தெய்துக!
தீதெலாம் நலிக! அறம்வளர்ந் திடுக! மறம்மடி வுருக
எனும் முண்டாசுக் கவிஞனின் வரிகளோடு தமிழ்த்தாயை வணங்கி என் உளக்கருத்தை உங்கள் முன் பதிகிறேன்.
இயந்திரம் போல் ஓடும் இந்நாளில், ஓடுகிற வேகத்தில் வாசித்துக் கொண்டிருந்த எங்களை சற்று நிதானித்து வரிகளை உள்வாங்கி சிந்திக்க வாய்ப்பளித்த நல்ல உள்ளங்களுக்கு நன்றிகள் பல.
என் பார்வையில் பாரதி

தமிழன் என்றாலே வீரம் அந்த வீரத்திற்கு ஒரு மிடுக்கான திமிர் உண்டல்லவா? அந்த திமிருக்கு மொத்த சொந்தக்காரன் என் முறுக்கு மீசைக்காரன் பாரதியார். வீரத்தமிழனாம் எம் பாரதி எப்பொழுதுமே சமூகத்தின் மீது அதிக அக்கறை கொண்டவர் அநீதிகளை வார்த்தை என்னும் சாட்டையால் விளாசித் தள்ளியவர் அவரின் பாடல்கள் எப்பொழுதுமே மூடநம்பிக்கைக்கு எதிராகவும், பெண்களின் முன்னேற்றத்திற்கு ஆதரவாகவும், தொலைதூரப் பார்வை கொண்டதாகவும் இருக்கும். 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அவர், 21 ஆம் நூற்றாண்டிற்கு ஏற்ற கருத்துக்களை முன் குறித்து எழுதி வைத்தார் என்றால் அவரின் முற்போக்கு சிந்தனையை நான் என்னென்று சொல்ல....?
எனக்குள்ளே பாரதி
தாய்த் தமிழின் மீது பற்று கொண்டோர்க்கு பாரதியாரை பிடிக்காமல் போகுமா? அதுபோல தான் எனக்கும். வீரத்தமிழன் பாரதியையும், அவர் எழுத்துக்களையும் அதிகம் பிடிக்கும் கனல் பார்வை கவிஞனாம் பாரதியின் கவிதைகள் எனக்குள்ளே ஏதோ சொல்லிக் கொண்டே இருக்கும் அதில் சில வரிகள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளன என்று தான் சொல்ல வேண்டும். உதாரணமாக,
நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ
- சாதிகள் இல்லையடி பாப்பா
பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்.
தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா நின்னை தீண்டும் இன்பம்
தோன்றுதடா நந்தலாலா.
தனி ஒருவனுக்கு உணவில்லையேல் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்
- நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும்
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் இத்தகைய வரிகளை பாடிட அறிவு மட்டும் போதாது; தனித் திமிரே வேண்டும்.
எதனைத் தேர்ந்தெடுத்தேன்?
இக்கட்டுரையில் பாரதியாரின் கவிதைத் தொகுப்பில் பல்வகை பாடல்கள் என்னும் பிரிவில், தனிப்பாடல்கள் என்னும் தலைப்பில் ஏழாம் பாடலான 'அக்கினி குஞ்சு' என்னும் கவிதையின் வரிகளை எனது கண்ணோட்டத்தில் எடுத்துரைக்க விரும்புகின்றேன்
அக்கினி குஞ்சொன்று கண்டேன் அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்.
மேலோட்டமாக இதைப் படித்தபோது, சிறிய தீப்பொறி ஒன்றைப் பார்த்தேன். அதனை எடுத்துச் சென்று அங்கே ஒரு வனத்தில் இருந்த மரப்பொந்தில் வைத்தேன் அதனால் அந்த வனமே எரிந்து சாம்பலானது. நெருப்பின் சக்தியில் சிறிய அளவு பெரிய அளவு என்று வேறுபாடு உண்டா என்ன? என்பதைத்தான் புரிந்து கொள்ள முடிந்தது.
சற்று உள்ளார்ந்து சிந்தித்தால்..
பாரதிக்கு, தீ மீது ஏதோ ஒரு தீராத காதல் அவரின் பல பாடல்களில் அக்கினியின் அனலை ஆங்காங்கே காணலாம். உதாரணமாக, தெய்வப் பாடல்கள் என்னும் பிரிவில், முதல் பாடலான, விநாயகர் நான்மணி மாலையில் அகவல் பாவில் 'அக்கினி தோன்றும்; ஆண்மை வலியுறும்' என்றும், நந்தலாலா என்னும் தலைப்பில் 'தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா' என்றும் பாடி உள்ளது குறிப்பிடத்தக்கது இயற்கையின் மீது அதீத காதல் கொண்ட பாரதி ஏன் காட்டை தீயினால் அழிக்க வேண்டும்?
அப்படி எனில், இங்கு காடாக எது மறைத்து கூறப்படுகிறது?
நெருப்பிட்டு அழிக்கும் அளவுக்கு அவர் எதைப் பார்த்து வெகுண்டு எழுந்திருப்பார்?
ஒரு காட்டையே சிறு தீப்பொறியால் எரிக்கின்ற கோபக் கனல் அவரின் திமிரான வார்த்தைகளில் பொறி பறக்க தெரிகிறது. எதன் மீது அத்தனை ஆழமான கோபம்?
ஒருவேளை...
அன்று சமூகத்தில் காணப்பட்ட உடன்கட்டை ஏறுதல், குழந்தைத் திருமணம், விதவைகளின் அவல நிலை போன்ற மூடப்பழக்க வழக்கங்களை கண்டு மூச்சிரைக்க கோபப்பட்டு, அவற்றை அக்கினியால் அழித்து விட, பாடி இருக்க வேண்டும்
பெண் விடுதலைக்கு குரல் கொடுத்த தமிழ் புதையலாம் பாரதி, பெண் அடிமைத்தனத்தை அடியோடு அக்கினியில் எரித்து விட இவ்வாறு பாடி இருக்க வேண்டும்.
சுதந்திர உணர்வின்றி அடிமைகளாய் மாக்கள் போல் அஞ்சி வாழ்ந்த மக்களைப் பார்த்து நொந்து போனவராய் அடிமை உணர்வை வேரோடு அக்கினியால் பொசுக்கி விட ஆசைப்பட்டு இப்படி பாடி இருக்க வேண்டும்.
சாதி என்னும் புதைகுழியில் சிக்கி, தீண்டாமை என்னும் சேற்றில் மூழ்கி மாய்ந்த இந்த மக்களுக்காய், சாதியையும் தீண்டாமையையும் ஒரே காட்டில் இட்டு அக்கினியை பொந்தில் வைத்து காட்டையே சாம்பலாக்க ஆர்ப்பரித்திருக்க வேண்டும்
ஆம். சமூக அவலங்களை பார்த்து ரௌத்திரம் பழகச் சொன்னார் நம் சக்தி தாசன் அநீதி கண்டு வெகுண்டெழ வயது ஒரு தடையல்ல; கோபத்தின் அளவும் ஒரு பொருட்டல்ல சிறு நெருப்பு எப்படி பெருங்காட்டையே சாம்பலாக்குமோ அதுபோல, கோபத்தின் அளவு எதுவாயினும் தடுக்க நினைத்த காரியத்தை தடுத்தே தீர வேண்டும் என்பதை இந்த பாடல் மூலம் நான் உணர்கின்றேன் அவரின் கோப அக்கினி பார்வை காட்டை அல்ல. பெரும் காட்டையே எரித்து சாம்பலாய் சரிந்து போகச் செய்யும். இறுதியாய் வல்லின எழுத்துகள் அதிகமாய் வரும் விதம் 'தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்' என்னும் தாளமானது அவரது கோபத்தின் உச்சத்தைக் காட்டுகிறது
ஏன் பிடித்தது?
இன்று.
பெண் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்முறைகளைக் கண்டு மனம் பொங்கி எழும்போது..
போது கைப்பேசியால் சீரழியும் இளம் தலைமுறைகண்டு மனம் வெதும்பும் சமூகத்தை சீர்கெடச் செய்யும் பல திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்களைக் காணும் பொழுது.
அரசியல் அவலங்களையும், கையூட்டு, கலாச்சார சீர்கேடு மற்றும் பண்பாட்டு பேரழிவையும் பார்க்கும் பொழுது என் மனம் ஆவேசம் அடைந்தால் அப்பொழுதெல்லாம் பாரதியின் அக்கினி குஞ்சொன்று கண்டேன் பாடல் தான் என் நினைவில் வருகிறது. பாரதி இந்தப்பாடலை அந்த காலத்திற்காக மட்டும் எழுதிவிடவில்லை அன்றே தொலைநோக்குப் பார்வையுடன் நாம் வாழும் இந்த கலாச்சார காலகட்டத்திற்காகவும் தான் இப்பாடலை எழுதியுள்ளார். அந்தப் பாடலைப் படிக்கும் பொழுது நாம் ஒவ்வொருவரும் பாரதியே அநீதிகளைத் தட்டிக்கேட்போம் கோபம் சிறிதா பெரிதா என்பது முக்கியமல்ல அநீதிகளைக் காடாக்கி, நம் ரௌத்திரத்தை அக்கினியாக்கி, அநீதியென்ற காடெரித்து, சமூகம் சீரமைக்க கவிஞன் வழி நிற்போம்.
அவரால் மட்டுமே முடியும்!
அவரால் மட்டுமே தீக்குள் விரல் வைத்து அதில் இன்பம் கண்டு, அந்த இன்பத்தை இறைவனாக உணர முடிந்தது.
அவரால் மட்டுமே காக்கை நிறத்தில் கூட கடவுளைக் காண முடிந்தது.
அவரால் மட்டுமே இந்திய நதிகளை இணைக்க முடிந்தது.
அவரால் மட்டுமே சேதுவில் பாலம் கட்ட முடிந்தது
அவரால் மட்டுமே 21ம் நூற்றாண்டின் அறிவியல் வளர்ச்சியை 19ஆம் நூற்றாண்டிலேயே கணித்துக் கூற முடிந்தது.
முடிக்க மனமின்றி...
இத்தகைய மங்கா புகழுடைய எம் முண்டாசுக் கவிஞனின் சிறப்புகளை எடுத்துக் கூற வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி. அவரின் இந்த ஒரு பாடலை இவ்வளவு ஆழ்ந்து என்னை சிந்திக்க வைத்து கருத்துக்களை சிதறச் செய்த நல் உள்ளங்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி கூறி முடிக்க மனமின்றி கருதி இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.
(ஆசிரியை அ. வென்சி ராஜ், திருவாரூரைச் சேர்ந்தவர். பண்ணைவிளாகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் பணியாற்றுகிறார். ஆசிரியையாக மட்டுமல்லாமல், பட்டிமன்ற பேச்சாளர், தன்னம்பிக்கை பேச்சாளர், சமூக செயற்பாட்டாளர் என பன்முகம் கொண்டவரர் அ. வென்சி ராஜ்)
சுடச் சுட.. சுவையான நெய் சாதம் ரெடி.. குழந்தைகளே வாருங்கள் ருசிக்கலாம்!
தொழுதேத்தும் பத்மநாபன்.. யாதவ குல திலகன்.. மதுசூதனன் மாயன்!
தமிழன் என்றாலே வீரம்.. அந்த வீரத் திமிருக்கு சொந்தக்காரன்.. முறுக்கு மீசைக்காரன் பாரதியார்!
பச்சை பயிறு ஈரல் கிரேவி.. சத்தியமா நம்புங்க.. இது சைவ மெனுதான்.. என்னங்க சொல்றீங்க!
எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்
2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க
விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
{{comments.comment}}