இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு.. இனி மக்கள் சேவையில் என் புதிய பாதையில் புதிய பயணம்..ரஞ்சனா நாச்சியார்

Feb 25, 2025,06:30 PM IST

சென்னை: இந்தி திணிப்புக்கு  எதிர்ப்பு தெரிவித்து, பாஜக கலைக் கலாச்சாரப் பிரிவு மாநில செயலாளர் ரஞ்சனா நாச்சியார் அக்கட்சியில் இருந்து  விலகுவதாக அறிவித்துள்ளார்.


தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கை குறித்த சர்ச்சை பூதாகரமாக வெடித்துள்ளது. அதாவது தமிழகத்தில் இந்தி திணிப்பை ஒருபோதும் ஏற்க மாட்டோம் என பல்வேறு கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதே சமயத்தில் மும்மொழி கொள்கையை ஏற்றால்தான் தமிழகத்திற்கு  நிதியை தருவோம் என்ற மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர  பிரதானின் பேச்சுக்கு தமிழ்நாட்டில் எதிர்ப்பு வலுத்து வருகிறது. இவரின் பேச்சை கண்டித்து திமுக மாணவர் அணியினர் மற்றும் திமுகவினர் தொடர்ந்து தமிழ் வாழ்க..தமிழ் வளர்க.. ஹிந்தி ஒழிக என போராட்டம் நடத்தி வருகின்றனர்.


அந்த வரிசையில் தற்போது இந்தி திணிப்புக்கு எதிர்ப்பை தெரிவித்துள்ளார்  பாஜக நிர்வாகியும், நடிகையுமான ரஞ்சனா நாச்சியார். இவர் பாஜகவின் கலை கலாச்சார துறை  மாநில செயலாளராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த ஆண்டு ஓடும் பேருந்தில் கீழே இறங்க மறுத்த மாணவர்களை வெளியே தள்ளி அவர்களது தலை மற்றும் முகத்தில்  தாக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து பாஜக நிர்வாகி ரஞ்சனாவுக்கு எதிராக பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் பிரபலமான ரஞ்சனா நாச்சியாரை போலீசார் கைது செய்தனர் என்பது நினைவிருக்கலாம்.




இந்த நிலையில், பாஜக கலைக் கலாச்சார பிரிவு மாநில செயலாளரும், நடிகையுமான ரஞ்சனா நாச்சியார் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 


கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலாக பாரதிய ஜனதா கட்சியில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிய உங்கள் ரஞ்சனா நாச்சியார் ஆகிய நான் பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விடைபெறுகிறேன். அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் என்னை நான் இன்றோடு விடுவித்துக் கொள்கிறேன். 


தேசப்பற்று மிகுந்த கட்சி தேசியத்தை காக்கின்ற கட்சி தெய்வ பக்தி கொண்ட கட்சி என்றெல்லாம் எண்ணித்தான் தேசியத்தையும் தெய்வீகத்தையும் கட்சிப்பணியாக செய்து கடமை ஆற்றி விடலாம் என கருதிதான் இந்த கட்சியில் இணைந்தேன். இயங்கினேன். தேசியம் என்பதும், தெய்வீகம் என்பதும், நாடு முழுவதும் விரிவடைந்து நாட்டு மக்களுக்கு நன்மை பயக்காமல் ஒரு குறுகிய வட்டத்துக்குள் சுருக்கி போவதில் எனக்கு உடன்பாடு இல்லை. தாயகத்துடன் இணைந்த தமிழகம் என்பதை எண்ணித்தான் தேசிய இயக்கத்தில் என்னை இணைத்துக் கொண்டேன். ஆனால் தாயகம் வேறு தமிழகம் வேறு என்கிற மாற்றான் தாய் மனப்போக்கு என்னை இன்னமும் இங்கு இருக்க வேண்டுமா என்ற கேள்வியை எழுப்பியது.


என்னை பொருத்தவரை தாயகம் காக்கப்பட தமிழகம் சிறக்க வேண்டும். மும்மொழிக் கொள்கை திணிப்பு, திராவிடத்தின் மீதுள்ள வெறுப்புகாரணமாக தொடர்ந்து புறக்கணிக்கப்படும் தமிழகம் என்பதெல்லாம் ஒரு தமிழச்சியாக என்னால் ஏற்றுக்கொண்டு உங்களுடன் இயங்க முடியவில்லை. 


இதுவரை பாரதிய ஜனதா கட்சியில் வழங்கப்பட்ட எந்த பொறுப்பாக இருந்தாலும் அந்த பொறுப்பில் சிறப்பாகத்தான் நான் செயல்பட்டு இருக்கிறேன். ஆனால் என்னை சிறப்பாக இயங்க, இந்த இயக்கம் தவறிவிட்டது. பெண்கள் அரசியல் ஆளுமைகளாக மாறுவது அரிதான காரியம். அதிலும் அரிதாக ஓரிருவர் முன்னேறினாலும் அந்த முன்னேற்றத்தை தடுத்து முட்டுக்கட்டை போடுவது என்பது பெண்களின் அரசியல் இருப்பை கேள்விக் குறியாக்குகிறது.


எனவே எனக்கென்று ஒரு இயக்கம் எனக்கென்று ஒரு கழகம் பெண்ணின் முன்னேற்றத்திற்கு முன்னுரிமை தரும் தலைமை இனி இதுவே என் கடமை என்கிற பயணத்தை நோக்கி பயணிக்க துவங்கி விட்டேன். எனக்கு இதுவரை வாய்ப்பளித்தவர்களுக்கும், பதவி வாரி தந்தவர்களுக்கும், என் வளர்ச்சிக்கும், என் முயற்சிக்கும், ஆக்கமும் ஊக்கமும் அளித்து அனுசரித்து சென்றவர்களுக்கும் நான் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறேன்.நன்றியை நவில்கிறேன்.


என்னுடன் பயணித்து என்னுடன் கடமையாற்றி என்னை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்ட அத்தனை சகோதர சகோதரிகளுக்கும் நன்றிகள் கோடி.. இனி மக்கள் சேவையில் என் புதிய பாதையில் புதிய பயணம் அது எழுச்சிப் பயணம் வருங்காலங்களில் இனி அது வெற்றி பயணம். அன்புடன் ரஞ்சனா நாச்சியார் என அறிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!

news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்

news

அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!

news

Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!

news

படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!

news

எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!

news

நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!

news

புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து

அதிகம் பார்க்கும் செய்திகள்