பிளாக் டீ Vs க்ரீன் டீ... ஆரோக்கியத்திற்கு எது சிறந்தது தெரியுமா?

Jan 13, 2026,11:23 AM IST

ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டும் என நினைக்கும் பெரும்பாலானவர்களின் முதல் சாய்சாக இருப்பது பிளாக் டீ மற்றும் க்ரீன் டீ தான். இந்த இரண்டு வகை டீளும் 'கேமலியா சினென்சிஸ்' (Camellia sinensis) என்ற ஒரே செடியில் இருந்து தான் கிடைக்கின்றன. ஆனால், அவை பதப்படுத்தப்படும் முறையினால் அவற்றின் சுவை மற்றும் நன்மைகள் மாறுபடுகின்றன. இதனால் இரண்டில் எது பெஸ்ட்? எதை சாப்பிட்டால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது? என்ற கேள்விகளுக்கு பலருக்கு எழுவது உண்டு. இதற்கான சரியான விளக்கம் இதோ...


1. க்ரீன் டீ நன்மைகள்:




க்ரீன் டீ இலைகள் மிகக் குறைவாகவே பதப்படுத்தப்படுகின்றன (ஆக்சிஜனேற்றம் செய்யப்படுவதில்லை). இதனால் இதில் இயற்கையான ஊட்டச்சத்துக்கள் அப்படியே இருக்கும்.


உடல் எடை குறைய: இதில் உள்ள 'கேடச்சின்கள்' (Catechins) மற்றும் 'EGCG' ஆகிய ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் வளர்சிதை மாற்றத்தை (Metabolism) அதிகரித்து கொழுப்பை எரிக்க உதவுகின்றன.


மூளை ஆரோக்கியம்: இது மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தவும், ஞாபக மறதி நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது.


சர்க்கரை அளவு: ரத்தத்தில் சர்க்கரை அளவைச் சீராக வைக்க இது பயனுள்ளதாக இருக்கும்.


2. பிளாக் டீ நன்மைகள்:




பிளாக் டீ இலைகள் முழுமையாக ஆக்சிஜனேற்றம் செய்யப்படுவதால் இதற்கு அடர்த்தியான நிறமும் சுவையும் கிடைக்கிறது.


இதய ஆரோக்கியம்: இதில் உள்ள 'தபிளாவின்ஸ்' (Theaflavins) என்ற சத்துக்கள் ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், இதய நோய் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகின்றன.


குடல் ஆரோக்கியம்: இது வயிற்றில் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவித்து செரிமானத்தை மேம்படுத்துகிறது.


சுறுசுறுப்பு: க்ரீன் டீயை விட இதில் காஃபின் (Caffeine) அளவு சற்று அதிகம் என்பதால், இது உடனடி புத்துணர்ச்சியையும் கவனத்தையும் அளிக்கிறது.


முக்கிய வேறுபாடுகள்:


க்ரீன் டீயில் 'கேடச்சின்கள்' அதிகம், பிளாக் டீயில் 'தபிளாவின்ஸ்' அதிகம். உங்களுக்கு அதிக ஆற்றல் தேவைப்பட்டால் பிளாக் டீயையும், மிதமான புத்துணர்ச்சி தேவைப்பட்டால் க்ரீன் டீயையும் தேர்ந்தெடுக்கலாம்.


எது சிறந்தது?


இரண்டுமே ஆரோக்கியமானவைதான். உங்கள் நோக்கம் உடல் எடையைக் குறைப்பது என்றால் க்ரீன் டீ சிறந்தது. உங்கள் நோக்கம் இதய ஆரோக்கியம் மற்றும் புத்துணர்ச்சி என்றால் பிளாக் டீ சிறந்த தேர்வாகும். பால் மற்றும் சர்க்கரை சேர்க்காமல் குடிப்பது தான் இந்த இரண்டு தேநீர்களிலும் முழுமையான பலனைத் தரும். அதிகப்படியான காஃபின் தூக்கத்தைப் பாதிக்கலாம் என்பதால் மிதமான அளவில் பருகுவது நல்லது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்