சென்னை : அதிமுக.,வில் முன்னாள் முதல்வர், 2001ம் ஆண்டு முதல் போடிநாயக்கனூர் தொகுதியை எம்எல்ஏ.,வாக தனது வசம் வைத்திருப்பவர் என்ற பெருமைகளை பெற்ற ஓ.பன்னீர்செல்வம் இன்று திமுக.,வில் சென்று இணைந்துள்ளார். அவருடன் அவரது ஆதரவாளரான உசிலம்பட்டி எம்எல்ஏ., ஐயப்பனும் சென்று திமுக.,வில் இணைந்துள்ளனர். திமுக.,வில் இணைந்த கையோடு தங்களின் அதிமுக எம்எல்ஏ., பதவிகளையும் ராஜினாமா செய்துள்ளனர். இதனால் சட்டசபையில் அதிமுக எம்எல்ஏ.,க்களின் எண்ணிக்கை தற்போது 60 ஆக குறைந்துள்ளது.
அதிமுக உட்கட்சி பிரச்சனைகளுக்கு தீர்வு :
தற்போது ஓபிஎஸ் திமுக.,வில் இணைந்துள்ள அதிமுக.,வில் என்னென்ன பாதிப்புக்களை அல்லது தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தான் பலரும் கேள்வியாக உள்ளது. அதிமுக கட்சி அளவில் பார்த்தால், ஓபிஎஸ் திமுக பக்கம் சென்றது பலமான விஷயம் தான். காரணம், இதுவரை அதிமுக.,வில் இருந்த இரட்டை தலைமை பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது. கட்சி உடையுமோ என்ற நிலைக்கும் முடிவு ஏற்பட்டுள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை எதிர்த்து குரல் கொடுத்தவர்கள் சசிகலா, டிடிவி.தினகரன், ஓபிஎஸ் ஆகிய மூவரும் தான். இப்போது சசிகலா தனிக்கட்சி துவங்க போகிறேன் என சென்று விட்டார். டிடிவி.தினகரன் ஏற்கனவே அமமுக என்ற தனிக்கட்சியை வைத்துள்ளதால் அதை வைத்து என்டிஏ கூட்டணியில் இணைந்து விட்டார். ஓபிஎஸ், எதிரி கட்சியாக அதிமுக நினைக்கும் திமுக.,வில் சென்று சேர்ந்து விட்டார்.
ஓபிஎஸ் வழக்குகள் என்னவாகும்?
அதிமுக.,வின் இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும், எடப்பாடி பழனிச்சாமி அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்பது போன்று அதிமுக.,விற்கு எதிராக, அதிமுக.,வில் குழப்பம், பதற்றம் ஏற்படும் வகையில் பல்வேறு கோர்ட்டுகளில் ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் இனி தானாக தள்ளுபடியாகி விடும். காரணம், வேறு ஒரு கட்சியில் போய் சேர்ந்து விட்டதால், தனக்கு சம்பந்தமே இல்லாத ஒரு கட்சியின் விவகாரங்கள் தொடர்பாக வழக்கு நடத்த முடியாது. ஏற்கனவே அதிமுக அடிப்படை உறுப்பினர் பதவியில் கூட இல்லாதவர் என்ற அடிப்படையில் தான் ஓபிஎஸ் தொடர்ந்த அதிமுக.,விற்கு எதிரான பல வழக்குகள் ரத்து செய்யப்பட்டன.
அதிமுக சந்திக்க போகும் பாதிப்புகள் :
ஓபிஎஸ் திமுக.,வில் இணைந்ததால் அதிமுக.,வில் ஏற்பட போகும் பாதிப்பு என்று பார்த்தால், தென் மாவட்ட ஓட்டுக்கள் தான். தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம், போடிநாயக்கனூர், ஆன்டிப்பட்டி, பெரியகுளம்(தனி) ஆகிய 4 சட்டசபை தொகுதிகளில் 3 தொகுதிகள் ஏற்கனவே திமுக வசம் தான் உள்ளது. கடந்த தேர்தலில் அதிமுக சார்பில் ஓபிஎஸ் மட்டுமே போடிநாயக்கனூர் தொகுதியில் வெற்றி பெற்றார். தேனி மாவட்டத்தை பொருத்த வரை அங்கு பிரபலமான அரசியல் முகங்களாக பார்க்கப்படுபவர்கள் தங்க தமிழ்செல்வனும், ஓபிஎஸ்.,ம் தான். தற்போது இவர்கள் இருவருமே திமுக பக்கம் சென்று விட்டார்கள். இதனால் வரும் சட்டசபை தேர்தலில் தேனி மாவட்டத்திற்கு உட்பட்ட 4 சட்டசபை தொகுதிகளும் திமுக வசம் வருவதற்கான வாய்ப்பு உருவாகி உள்ளது. இப்போது இந்த 4 தொகுதிகளில் பிரபலமான அதிமுக முகங்கள் இல்லாததால் யாரை வேட்பாளராக நிறுத்தி, அதிமுக தனது கோட்டையாக பல காலமாக இருந்த தேனி மாவட்டத்தை தக்க வைக்க போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
கோட்டையை கைப்பற்றுமா அதிமுக?
தேனி, மதுரை, ராமநாதபுரம், நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள முக்குலத்தோர் சமூக மக்களின் அடையாளமாக அதிமுக.,வில் இதுவரை இருந்த ஓபிஎஸ், சசிகலா இருவருமே இன்று எடப்பாடி பழனிச்சாமியை சர்வாதிகாரி என விமர்சித்துள்ளார்கள். இப்போது முக்குலத்தோர் சமூக பிரதிநிதியாக அதிமுக பக்கம் இருப்பவர் டிடிவி.தினகரன் மட்டும் தான். முக்குலத்தோர் சமுதாய ஓட்டுக்கள் காரணமாக அதிமுக.,வின் கோட்டையாக கருதப்பட்ட தென் மாவட்டங்களில் இப்போது அதிமுக.,வில் முக்குலத்தோர் சமூகத்திற்கான முக்கியத்துவம் குறைந்து வருவதாக கடந்த சில நாட்களாகவே ஒரு குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இப்போது ஓபிஎஸ் திமுக பக்கம் சென்றதால், தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் ஓட்டுக்களையும், செல்வாக்கையும் இழக்கும் நிலை அதிமுக.,விற்கு ஏற்பட்டுள்ளது.
இபிஎஸ் இமேஜிற்கு சவால் :
ஓபிஎஸ் திமுக பக்கம் சென்றது
அதிமுக.,வில் எடப்பாடி பழனிச்சாமியின் தலைமைக்கு இருந்த சிக்கல்களை தீர்த்து, ரூட்டை கிளியர் செய்துள்ளது. இருந்தாலும் அதிமுக.,வில் முன்னாள் முதல்வராக இருந்த ஒருவரே திமுக பக்கம் செல்வதற்கு எடப்பாடி பழனிச்சாமி காரணமாகி விட்டாரே என்ற எண்ணம் சாமானிய மக்கள் மனதில் ஏற்பட்டுள்ளதால் எடப்பாடி பழனிச்சாமியின் தலைவர் என்ற இமேஜ் கேள்விக்குறியாகி உள்ளது. இப்போது தென் மாவட்டங்களில் பெரும்பான்மையாக இருக்கும் முக்குலத்தோர் சமூக ஓட்டுக்களை அதிமுக மீண்டும் எப்படி தன்வசப்படுத்தி, தென் மாவட்டங்களில் கைப்பற்ற போகிறது என்பது மிகப் பெரிய சவாலாக உள்ளது.
{{comments.comment}}