- பாரதி இளங்கவி கீர்த்தனா பு
இலக்கியங்கள் மனிதனின் வாழ்விலிருந்து தோன்றுகின்றன. மனிதனின் வாழ்வியலைப் பேசுகின்றன. நவீன இலக்கியங்கள் கதை, கவிதை, புதினம் என்ற பல வகையான வடிவங்களில் நாள்தோறும் தோன்றி வளர்ந்த வண்ணம் உள்ளன. வாசகருக்கு இன்பத்தை வழங்குவது மட்டுமே ஒரு சிறந்த இலக்கியத்தின் நோக்கமாகாது. இலக்கியமானது இன்பத்துடன் சேர்த்து அறத்தையும் வழங்குவதாக அமைதல் வேண்டும். வண்ணதாசன் அவர்களின் ‘ஒரு சிறு இசை’ சிறுகதை தொகுப்பில் முதல் ஐந்து சிறுகதைகள் மதிப்பாய்வு செய்ய எடுத்துக் கொள்ளப்படுகின்றன. கதைகள் குறித்த சுருக்கமான மதிப்புரையைப் பின்வருமாறு காணலாம்.
1. ஒரு தாமரைப்பூ ஒரு குளம்
மனிதர்களின் மனம் என்பது சாதாரண புரிதல்களுக்கு அப்பாற்பட்டது. கண் இமைக்கும் பொழுதுக்குள் ஒன்றினை உருவாக்கிக் கொள்ளவும், இல்லாமல் போகச்செய்யவும், ஒன்றை மற்றொன்றாக உருமாற்றிப் பார்க்கவும், காணும் யாவையும் இரசிக்கவும், வெறுக்கவும், தன்னில் தொடர்புபடுத்திப் பார்க்கவும், விலக்கி வைக்கவும் மனதால் முடிகிறது.
ஒரு நிலையில் வெறுமையில் இருந்தும், மூச்சுமுட்டச் செய்யும் அழுத்தத்தில் இருந்தும் காப்பாற்றிக்கொள்ள ஒரு கருவியாக மனமும் எண்ணங்களும் செயல்படுகின்றன. அவ்வகையில் மனதுடன் தொடர்ந்து பேசிக் கொண்டும் நினைவுகளுக்குள் சிக்கி விடுபட்டு மீண்டும் சிக்குண்டு விடுபட்டு தன் வயோதிகத்தைப் பழகிக் கொள்வதுமான கதாபாத்திரமாக வருகிறார் இக்கதையின் நாயகன்.
ஒரு சாயங்கால நடைப்பயிற்சியும் அதற்கான தயாராதலும் இக்கதையாக உருப்பெறுகிறது. தான் காணக்கூடிய அனைத்தையும் தன் மனதுள் புதைந்துள்ள பிற நினைவுகளுக்குள் தொடர்பு படுத்திச் செல்கிறார். பொதுவாக வயதானவர்களுக்கு ஏற்படக்கூடிய முதுமையின் இயலாமை, தனிமையின் வெறுமையை மாலைநேர நடையின் போது யாரோ ஒருவர் நம்முடன் பகிர்ந்து கொள்வதைப் போன்று நகர்கிறது கதை ஓட்டம்.
மார்ட்டின் மல்லி, கதர் ஜிப்பா, பட்டாம்பூச்சி, மனைவி பார்வதி, தண்ணீர் அருந்த வரும் சிட்டுக்குருவி, சூரிய ஒளி படர்ந்த வீட்டுச் செடிகள், மஞ்சள் கலந்த மர மல்லிப்பூ, முருகானந்தத்தின் மிதிவண்டி சத்தம், சூரியனின் வட்டப்பாதை, இறுதியாக காலை ஒட்டி ஊர்ந்து வரும் வெள்ளை நாய்க்குட்டி இவற்றை பார்த்தும் கேட்டும் உணர்ந்தும் கொள்ளும்படி அமைகிறது ஆசிரியரின் எழுத்து.
‘போவதும் வருவதும் கூட எங்கோ எதற்காகவோவான பயணம் என்பதும்’, ‘என் அட்ரஸுக்கு காகிதம் வந்து எவ்வளவு நாளாச்சு’ என்பதும் மனதின் ஆழத்தில் தனக்கான நாட்களை எண்ணிக் கொண்டிருப்பதையும் பலரும் அருகில் இருந்தும் விசேஷமாக தம்மை கவனிப்பார் யாருமில்லை என அவர் சிந்திப்பதையும் இலைமறை காயாக நமக்கு காட்டுகிறது.

2. எண்கள் தேவையற்ற உரையாடல்கள்
பயணங்கள் அலாதியானது. பேருந்தின் சாளரங்களின் ஓரத்தில் பயணிக்கும் ஒவ்வொருவரும் பின்னோக்கி நகர்ந்து செல்லும் மரம், செடி கொடி, நடைப்பாதை கடைகள், அதிகம் அறிமுகமில்லா மனிதர்கள், அழகாய் கைகாட்டி சிரிக்கும் குழந்தைகள் என அனைத்தையும் ஒரு கணமேனும் இரசித்து மீண்டு இருப்போம். அப்படி முன்னொரு நாள் சந்தித்த கரும்பு கடைக்காரரை நினைவு நிறுத்தி துவங்குகின்றது கதை.
‘எல்லாவற்றையும் கேட்டு முடித்து விட வேண்டும் என்று அவசியமா என்ன?’ எனும் வரிகளில் இக்கதையின் கருவை ஓரளவு நம்மால் உணர முடியும். யார் மீதோ எப்போது தோன்றியதென சொல்ல முடியாத ஒரு நேசம் உரிமைகள் இல்லாத போதும் அது மாறுவதே இல்லை. அவ்வாறான நேசத்தின் சாயல் அதற்குரிய நபரை நினைவில் கொண்டு வந்து கொண்டே இருக்கும். ஆனால் அது போன்ற ஆழமான நேசத்தை முற்றிலுமாக வெளிப்படுத்தி விடமுடிவதும் இல்லை. அந்நேசத்திற்குரியவர் குறித்த சில முற்றுப்பெறாத கோடிட்ட இடங்கள் தவிர்க்க இயலாததாகி விடுகிறது. சோமு மீது ஜான்சியின் நேசம் கூட ஒரு கோட்டிற்கு வெளியே தான் நின்றதாக தெரிகிறது.
இருப்பினும் சோமுவின் வருகை ஜான்சியின் வாழ்வில் பல மாற்றங்களை நிகழ்த்துகிறது. ஆனாலும் சோமுவின் மீதான தனது தனித்த மதிப்பை அவள் நேரடியாக வெளிக்காட்டவில்லை. தனக்கு சொந்தமில்லை என்ற தெரிந்த பின்னரும் கூட சோமுவின் மீது ஜான்சியின் நேசம் மாறவே இல்லை. அதுவே உண்மையான அன்பு என்பதும் உறுதியாகிறது. அதனை ஆசிரியரின் வரிகளில் கூறுவதானால் ‘அப்படி சோமு என்ன செய்துவிட்டார் என தெரியவில்லை, எல்லாமே அவர் செய்ததுதான் இந்த கல்யாண பத்திரிக்கை வரை’.
அமைதியும் நிசப்தமும் கூட உணர்வுகளின் பரிணாமங்களை வேறுபடுத்திக் காட்டும். மகிழ்வையும் துக்கத்தையும் மிகைப் படுத்தியும் காட்டும். அப்படியான ஒரு மனநிலையில் தான் ஜான்சி சோமுவிடம் பத்திரிக்கையைக் கொடுத்த நாளின் அமைதியையும் இன்றைய நாளின் வெறுமையும் எண்ணிப் பார்க்கிறாள்.
இனிவரும் நாட்களில் சோமுவை அழைக்க முடியாது என்றாலும் அவரின் எண்ணைப் பதிவு செய்து வைக்க விரும்புகிறாள் உரையாடல்கள் என்பது வெறும் வார்த்தைகளைச் சார்ந்தது மட்டுமல்ல அது மனம் சார்ந்தது என்பதை இக்கதை உணர்த்துகிறது.
3. பொழுது போகாமல் ஒரு சதுரங்கம்
‘ஒன்றுக்கு மேல் ஒன்றாக ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் போல அவரவர்க்குள்ளே நிறைய முகங்கள் சட்டென்று அப்படி உரித்து கொண்டு வெளியே வர முடியாது தான்.’ முன்னமே சொன்னது போல நினைவுகளுக்கும் ஞாபகங்களுக்கும் ஓய்வே இருப்பதில்லை. ஒவ்வொருவர் மனதிலும் ஏதோ நினைவுகள் சிந்தனைகள் ஒன்றை தொட மற்றொன்று என விடாமல் நீள்கிறது. அதில் தான் கடந்த காலங்களும் காட்சியாய் விரிகின்றன. ‘யார் கையை நினைத்துக் கொண்டோ யாருடைய கையையாவது பிடித்துக் கொள்ள வேண்டியது இருக்கிறது’, ‘எப்படி போனாலும் வீடு வந்துரும்’. மேற்காணும் வரிகள் ஒவ்வொரு முறை படிக்கும் போதும் நமக்கு ஒவ்வொரு பொருளை செய்தியை அர்த்தத்தை தருகிறது. வாழ்வின் மிகப்பெரும் தத்துவத்தையும் கூறுகிறது.
பொதுவாக பலரும் இரண்டு வகையான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றோம். ஒன்று நாம் வாழ நினைத்தது. மற்றொன்று நாம் வாழ்ந்து கொண்டிருப்பது. இதில் வரக்கூடிய சூரி மாமா மற்றும் தாயம்மா இதற்கு சரியான உதாரணம் ஆகிறார்கள்.
தனது மனைவி எந்த வகையிலும் பிறரை முக்கியமாக நினைத்து விடக்கூடாது என்ற அதீத அன்பு அன்பின் தவிப்பினை சூரி மாமா வெளிப்படுத்துகிறார். அத்தகைய அன்பை கூட எதிர்ப்பாக பதிவு செய்கிறார். தாயம்மாவும் தனக்கோடி வாத்தியாரின் மீது நட்பு உறவை தாண்டி அபிமானம் கொண்டிருந்தாலும் சமுதாயம் குடும்பச் சூழல் கருதி அதனை வெளிக்காட்ட இயலவில்லை.
கிடைக்காது என்று தெரிந்த ஒன்றின் மீதான நேசம் தான் ஆழமானது அடர்த்தியானது என்பதை வலியனுப்பும் காட்சி நமக்கு உணர்த்துகிறது. எப்படி போனாலும் வீடு வந்துரும் என்பதில் பெண்கள் என்ன ஆசை கொண்டாலும் அதனை தீர்மானிப்பது வீடு தான் என்பதையும் எதனைச் செய்தாலும் அது வீடு என்னும் குடும்பம் சார்ந்த நிறைவடையும் என்பதையும் அறிவிக்கிறது.
இறுதியாக தாயம்மாவும் சூரி மாமாவும் வாழவில்லை மாறாக வெறுமனே பொழுதை கழித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதனையும். அவர்களுக்கு இடையேயான புரிதல் மற்றும் அன்பின் குறைபாட்டினையும் கதையின் இறுதி வரி நமக்கு உணர்த்துகிறது.
4. பூரணம்
மனதில் தோன்றுவதை எல்லாம் எல்லோரிடமும் நாம் கூறி விட முடியாது. ஆனால் அவ்வாறு நம்மை பற்றிய ரகசியங்களை சுக துக்கங்களை ஒழிவு மறைவின்றி வெளிப்படுத்திக் கொள்ள ஓர் உறவு நம்முடன் இருத்தல் வரம். கேட்பவர் ஆறுதல் கூட கூற தேவையில்லை கேட்டில் மட்டுமே போதுமானதாக இருக்கிறது பல சமயங்களில்.
பூரணலிங்கம் மாமாவிற்கு அனைத்தையும் ஒப்புவிக்கும் ஒரு கண்ணாடி போல தான் அவரது மாப்பிள்ளை. ஒருவரிடம் நாம் மனம் விட்டு பேச விரும்புவது நம் மனதை நாமே தூசி தட்டுவது போல அசை போடுவது போன்றது. அது ஒருவேளை மனதை இலகுவாக்கலாம் அல்லது மேலும் காயப்படுத்தலாம். ஆனால் இங்கு பூரண லிங்கத்தின் மனதின் வடிகாலாக அமைகிறது அவர்களுக்கு இடையேயான உரையாடல்.
பூரணம் என்பது அனைத்தும் குறை இன்றி தவறு இன்றி இருப்பதில் இல்லை குறையுடன் இருந்தாலும் அதனை ஏற்றுக் கொள்ளும் மனதின் பக்குவமே பூரணம், நிறைவென்பது. சரஸ்வதி என்ற பாத்திரத்தை தனது வாழ்வின் பூரணமாகவே பூரண லிங்கம் கருதினார் என்பது இக்கதையின் வாயிலாக அறிய முடிகிறது.
இக்கதை நம் வாழ்விலும் பொருந்தக் கூடியது. கடந்த காலங்களில் நம் விருப்பம் போல் அல்லாமல் ஏதேனும் நிகழ்ந்திருக்கலாம் கவலைகளும் வருத்தங்களும் குறைகளும் வேதனைகளும் கூட சந்தித்து இருக்கலாம். ஆனால் அவற்றை எல்லாம் கடந்து இன்றைய நாளின் முழுமைத்துவத்தை ஏற்றுக்கொண்டு பயணிப்பதிலேயே வாழ்வின் பூரணம் அடங்கியுள்ளது என்பதை உணர வேண்டும்.
நாம் பார்க்கும் கண்ணோட்டமே ஒன்றை முழுமையானதாகவோ அல்லது குறையுடையதாகவோ மாற்றுகிறது எனும் உயர்ந்த வாழ்வியல் தத்துவத்தை வலியுறுத்துகிறது இக்கதை.
5. கனியான பின்பும் நுனியில் பூ
நாள்தோறும் புதிதாக நாம் யாரையாவது ஒருவரை சந்திக்கின்றோம். அவர்கள் நமக்கு முன் பின் அறிமுகம் இல்லாதவராக கூட இருக்கலாம். ஆனால் அவர்களை முதன்முறை பார்க்கும் பொழுதில் நம் மனதில் அவர்கள் மீதான ஓர் அபிப்பிராயம் தோன்றிவிடும். அது சில சமயம் நேர்மறையானதாகவோ அல்லது எதிர்மறையானதாகவோ இருக்கலாம். இவர்கள் இப்படித்தான் என்ற எண்ணம் வேரூன்றி விட்டால் அதனை அவ்வளவு எளிதாக நம்மால் மாற்றிக் கொள்ள முடிவதில்லை. அப்படியாக பழக்கடையில் சந்திக்கும் மூவருக்கு இடையேயான நிகழ்வாக தொடர்கிறது இக்கதை. தினகரி சங்கிலியை அறுத்த திருடனாகப் பார்த்த நபரை இன்று அப்பழக்கடையில் ஒரு குழந்தையுடன் பாசமிகு தந்தையாக பிறருக்கு உதவும் குணம் கொண்ட ஒரு பண்பாளராக பார்ப்பதாக அமைகிறது கதை ஓட்டம்.
இங்கு பலருக்கும் பல முகங்கள் உண்டு ஏன் முகமூடிகள் என்று கூட கூறலாம். அவையெல்லாம் காலம் சூழல் மாட்டி விடக்கூடிய முகமூடிகள் என்பதை நம்மால் மறுக்க முடியாது. எல்லா நேரங்களிலும் ஒருவரைப் பற்றியதான நம் கணிப்பு சரியானதாக இருக்கவேண்டிய அவசியமில்லை. அவை மறுப்பருசீலனைக்கு உட்படுத்தப்படலாம் என்பதை மென்மையாக கூறிச் செல்கிறது கனியான பின்பும் நுனியில் பூ எனும் இச்சிறுகதை.
தொகுப்புரை:
1. உரையாடல் உத்தியானது கதை சொல்வதற்கான சிறந்த உத்தியாகக் கையாளப்பட்டுள்ளது.
2. ஒரு நிகழ்ச்சி, ஒரு நபர், ஒரு இடம் என ஏதேனும் ஒன்றினை மையமாகக் கொண்டு கதையானது அமைகிறது.
3. ஆசிரியர், தானே வாசகரிடையே பேசுவதைப் போன்ற முறையில் பெரும்பாலான கதைப்போக்கு அமைகிறது.
4. கதையின் எடுப்பும் தொடுப்பும் முடிப்பும் ஒன்றுக்கொன்றுத் தொடர்புடையதாக உள்ளது.
5. கதைக்களம் சுற்றியுள்ள சிறு சிறு பொருள்கள், பறவைகள், விலங்குகள், மரம், செடிகொடிகள், மனிதர்கள் முதலியவற்றுடன் இணைந்து மிகவும் கவனமாகவும் இலக்கிய நயத்துடனும் வாசகரின் மனக்கண்ணில் திரையிட்டுக் காட்டுவது போன்ற காட்சி அமைப்பு கொண்ட நேர்த்தியுடனும் கதையின் ஓட்டத்துடனும் ஒன்றிணைந்து சிறப்பாக எடுத்தாளப்பட்டுள்ளது.
6. கதைகள் பக்க அளவுகளால் நீண்டிருப்பினும் தொடக்கம் முதல் இறுதி வரை ஆர்வமுடன் படிக்கத்தூண்டும் வகையில் நடப்பியல் பற்றி பேசுகின்றன.
7. ஒவ்வொரு கதாபாத்திரமும் நமது அண்டை வீட்டினராகவோ, அலுவலகத் தோழமைகளாகவோ, பேருந்தின் சக பயனியராகவோ, வழியோர சிற்றுண்டி கடைகளில் எதிர்ப்படும் முகங்களாகவோ மனதிற்கு நெருங்கி வருகின்றனர்
8. கதையின் தலைப்புகள் கவித்துவத்துடன் தனித்த கவனம் பெறுமாறு அமைகின்றன.
9. எழுத்து நடை தெளிந்த நீரோடை போலவும் இடையிடையே வட்டார வழக்குச் சொற்கள் இடம்பெற்றும் இயற்கையின் வர்ணனைகள் மிகுந்தும் அனைவருக்கும் புரியும் வண்ணம் அமைகிறது.
10. ‘ஒரு சிறு இசை’- சிறுகதை தொகுப்பானது வாசகரின் வாழ்வியலுடன் மிக நெருங்கிய தொடர்பு கொண்டதாக எதார்த்தவியலைப் பேசுகிறது. மனிதர்களின் உணர்வுகளுடனும் உறவுகளுடனும் நெருங்கிய தொடர்பினை கொண்டதாக கதைகள் அமைகின்றன.
(பாரதி இளங்கவி கீர்த்தனா பு, எம்.ஏ.,நெட் படித்தவர். தூய தமிழ்ப் பற்றாளர். திருப்பூர் மாவட்டத்துக்காரர். திருவண்ணாமலை இரத்தினா செல்வக்குமார் தலைமையிலான தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு தமிழ் சார்ந்த நிகழ்வுகளில் பங்கேற்றவர்)
 
                                                                            கே.ஏ. செங்கோட்டையன் நீக்கம்.. எம்ஜிஆரின் ஆரம்ப கால தொண்டர்.. 50 ஆண்டு கால அதிமுக அடையாளம்!
 
                                                                            ஒரே நேரத்தில் உருவான இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் – சென்னை வானிலை தகவல்!
 
                                                                            தனது கண்ணியத்தை இழக்கும் வகையில் பேசுகிறார் பிரதமர் மோடி.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
 
                                                                            பிரதமர் குற்றம் சாட்டியது திமுகவை தான்... தமிழர்களை அல்ல: தமிழிசை சவுந்தர் ராஜன் பேட்டி!
 
                                                                            தமிழர்களை எதிரியாகச் சித்தரித்து வெறுப்புவாத அரசியல் செய்வது பாஜகவின் வாடிக்கை: கனிமொழி
 
                                                                            SIR திட்டத்தை எதிர்த்து.. திமுக கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டம்.. விஜய் செல்வாரா?
 
                                                                            குப்பைமேடாக மாறும் சின்னக்காளி பாளையம்.. திமுக அரசு திட்டத்தை கைவிட வேண்டும்: அண்ணாமலை
 
                                                                            ரூ.3,250 கோடி ஒப்பந்தம்... தமிழ்நாட்டில் மீண்டும் உற்பத்தியை தொடங்குகிறது ஃபோர்டு!
 
                                                                            இரும்புப் பெண் இந்திரா காந்தி.. இன்னும் சில பத்தாண்டுகள் இருந்திருந்தால்.. இந்தியா எப்போதோ வல்லரசு!
{{comments.comment}}