சென்னை: திமுக, காங்கிரஸ் என்ற தேசிய கட்சியுடன் தான் டெல்லி கட்சியுடன் தான் கூட்டணி வைத்துள்ளது என்று கூறியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி. அதேபோல அதிமுகவும் கூட பாஜக என்ற தேசியக் கட்சியுடன்தான் கூட்டணி வைத்துள்ளது. இரு பெரும் திராவிடக் கட்சிகளும் தேர்தலுக்குத் தேர்தல் ஏதாவது ஒரு தேசியக் கட்சியுடன் கூட்டணி வைக்காமல் தேர்தலை சந்திப்பதே இல்லை என்பதே நிதர்சனம்.
தமிழ்நாட்டு அரசியலைப் பொறுத்தவரை கூட்டணி இல்லாமல் திமுகவோ, அதிமுகவோ தேர்தலை சந்திப்பது இல்லை. கூட்டணி வைக்காமல் யாராலும் இங்கு பெரிய வெற்றியை ஈட்ட முடியாது என்பதும் உண்மை. அப்படித்தான் இங்குள்ள கட்சிகளின் கட்டமைப்பு உள்ளது. தனித்துப் போட்டியிட திமுகவோ அல்லது அதிமுகவோ துணிவது இல்லை என்பதும் இன்னொரு எதார்த்தம்.
திராவிடக் கட்சிகளைப் பொறுத்தவரை திமுகவின் ஆரம்ப கால எதிரியாக இருந்த கட்சி காங்கிரஸ். காங்கிரஸை வீழ்த்தி விட்டுத்தான் தமிழ்நாட்டில் திராவிட ஆட்சியை முதல் முறையாக அமை்ததது திமுக. அன்று முதல் இன்று வரை திராவிடக் கட்சிகளின் ஆட்சிதான் தமிழ்நாட்டில் தொடர்கிறது. அதாவது தேசியத்தை முடித்து விட்டு ஆரம்பித்தது திராவிடத்தின் ஆட்சி. ஆனால், இன்று காங்கிரஸ் கட்சி, திமுகவின் உற்ற தோழமைக் கட்சியாக விளங்குவது காலத்தின் விந்தை என்றுதான் சொல்ல வேண்டும்.

திமுகவிலிருந்து பிறந்த அதிமுக ஆரம்பத்திலிருந்தே தேசியக் கட்சிகளுடன் கூட்டணி வைப்பதை வழக்கமாக வைத்துள்ளது. ஆரம்பத்தில் காங்கிரஸ், பின்னர் பாஜக என அது மாறி மாறி தேசியக் கட்சிகளுடன் கூட்டணி வைத்து வருகிறது. எனவே திமுகவும் சரி, அதிமுகவும் சரி தேசியத்திற்கு எதிரான கட்சிகளாக இங்கு சித்தரிக்கப்பட்டாலும் கூட தேசியக் கட்சிகள் இல்லாமல் அவை தேர்தல் களத்திற்கே வருவதில்லை என்பதே நிதர்சனமாகும்.
காங்கிரஸ் கட்சியால் கடந்த காலங்களில் பல்வேறு நெருக்கடிகளுக்கு ஆளான அதே திமுக தான் தற்பொழுதும் காங்கிரசுடன் கூட்டணி வைத்து உறவாடிக் கொண்டிருக்கிறது. மிசா சட்டத்தில் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறைக்குப் போனார் என அவர்கள் சொல்லிக் கொள்கிறார்கள். அதற்கு காரணம் காங்கிரஸ்தான். ஆனால் அவர்களுடன் தான் திமுக கைக்குலுக்கிக் கொண்டிருக்கிறது என்றும் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார். இதுவும் உண்மைதான்.
எடப்பாடி பழனிசாமியின் இந்த விமர்சனம் தமிழக அரசியலில் நீண்டகாலமாக விவாதிக்கப்படும் ஒரு முக்கிய புள்ளியைத் தொடுகிறது. திமுக மற்றும் காங்கிரஸ் இடையிலான இந்த முரண்பாடான வரலாற்றை பகுத்துப் பார்ப்போம்.
1975-ல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி நெருக்கடி நிலையை (Emergency) அறிவித்தபோது, தமிழகத்தில் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. மு.க. ஸ்டாலின் உட்பட பல திமுக முக்கிய நிர்வாகிகள் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
நெருக்கடி நிலைக்குப் பிறகு, அரசியல் சூழல் பலமுறை மாறியுள்ளது. 1980ம் ஆண்டு "நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக" என கலைஞர் கருணாநிதி அழைப்பு விடுத்து, காங்கிரஸுடன் மீண்டும் கைகோர்த்தார். அதன் பின்னர் இந்த உறவு இடை இடையே விடுபட்டாலும் கூட இயற்கையான கூட்டணியாக தொடர்கிறது.

பாஜக என்ற பொதுவான அரசியல் எதிரியை எதிர்கொள்ள, சித்தாந்த ரீதியாக ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைவது அவசியம் என்பது திமுக-வின் நிலைப்பாடாக உள்ளது. இந்த ஒற்றை வாதத்தின் அடிப்படையில்தான் அதன் கூட்டணியும் அமைகிறது, அமைக்கப்படுகிறது.
திமுக, காங்கிரஸ் கூட்டணி தொடர்பாக எடப்பாடி பழனிசாமி அவர்களின் இந்த விமர்சனம் சில அரசியல் நோக்கங்களைக் கொண்டதாக கருதப்படுகிறது. குறிப்பாக, திமுக-வின் கொள்கை உறுதியை கேள்விக்குள்ளாக்குவது. திமுக-வின் பழைய போராட்டங்களை நினைவூட்டி, தற்போதைய கூட்டணியின் நம்பகத்தன்மையை குறைப்பது. மேலும், அதிமுக-வும் பல்வேறு காலங்களில் காங்கிரஸுடனும், பாஜகவுடனும் கூட்டணி வைத்துள்ளது என்ற விமர்சனங்களுக்குப் பதிலடியாக இதைப் பயன்படுத்துவது. இதுதான் எடப்பாடியாரின் உத்தியாக பார்க்கப்படுகிறது.
அரசியலில் "நேற்றைய எதிரி இன்றைய நண்பன்" என்பது ஒரு பொதுவான விதியாகிவிட்டது. எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டுவது வரலாற்று உண்மை என்றாலும், திமுக தரப்பில் இது "பாசிசத்திற்கு எதிரான ஜனநாயகப் போர்" மற்றும் "மாநில உரிமைகளுக்கான கூட்டணி" என்று நியாயப்படுத்தப்படுகிறது. மறுபக்கம், திமுகவை நோக்கி ஒரு விரலை நோக்கி அதிமுக குற்றம் சாட்டும்போது மற்ற நான்கு விரல்களும் அவர்களை நோக்கி இருப்பதையும் மறந்து விடக் கூடாது.
இன்னொரு பக்கம், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து வைக்கும் ஒரு கேள்வியைத்தான் நாமும் கேட்க வேண்டியுள்ளது. ஏன் அரசியல் கட்சிகள் குறிப்பாக பெரும் கட்சிகள் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க வேண்டும்.. ஒவ்வொரு கட்சியும் கூட்டணி இல்லாமல் தனித்து நின்று போட்டியிடலாமே.. அப்படி நிற்பதுதானே சரியான போட்டியாக இருக்க முடியும். குறிப்பாக தேசியக் கட்சிகள் இல்லாமல், திராவிடக் கட்சிகளால் தேர்தலைச் சந்திக்க முடியாதா.. முயற்சிக்கும் தைரியம் கூடவா அவர்களிடம் இல்லை.. எல்லாமே மில்லியன் டாலர் கேள்விகள்.. பதில்தான் கிடைக்காது.
பொங்கலுக்கு ஜனநாயகன் திரைப்படம் வராது... சென்சார் வழக்கு ஜனவரி 21க்கு ஒத்திவைப்பு
முதல்வர் ஸ்டாலினைப் பாராட்டிய டாக்டர் ராமதாஸ்... திமுக பக்கம் டேக் டைவர்ஷன் எடுக்கத் திட்டமா?
தவெக தேர்தல் அறிக்கை தயாரிக்க 12 பேர் கொண்ட குழு...பட்டியலை வெளியிட்ட விஜய்
தேசியக் கட்சிகள் இல்லாமல் திராவிடக் கட்சிகளால் ஜெயிக்க முடியாதா??
பிறப்பு முதல் இறப்பு வரையிலான 50 வகையான அரசு சேவைகள்... இனி வீட்டிலிருந்தே பெறலாம்
நெருக்கடியை சந்திக்கும் பெரிய ஹீரோக்களின் படங்கள்...கனத்த மெளனம் காக்கும் திரையுலகம்
நாம் சுவைக்க மறந்த வேர்க்கடலை சட்னி.. அதுக்குப் பின்னாடி இருந்த பாலிட்டிக்ஸ் தெரியுமா?
ஆஸ்கார் ரேசில் 'டூரிஸ்ட் ஃபேமிலி'...மேலும் 5 இந்திய படங்களும் இருக்கு
சின்னச் சின்னதா மாறுங்க.. ஹெல்த்தி ஆய்ருவீங்க.. Stay Healthy With Small Changes!
{{comments.comment}}