டெல்லி: அகமபாதாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான சம்பவத்தில் பைலட் மீது சந்தேகம் எழுப்பியுள்ளார் முன்னணி பாதுகாப்பு நிபுணரான கேப்டன் மோகன் ரங்கநாதன்.
ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது தொடர்பான முதல் கட்ட அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் ஒரே நேரத்தில் இரண்டு என்ஜின்களுக்கும் எரிபொருள் போவது தடைபட்டதால் விமானம் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காக்பிட் அறையில் இரு பைலட்டுகளுக்கும் இடையே நடந்த உரையாடல் விவரமும் வெளியாகியுள்ளது.
அதில் ஒரு பைலட் இன்னொரு பைலட்டிடம், ஏன் எரிபொருளை கட் ஆப் செய்தீர்கள் என்று கேட்கிறார். அதற்கு இன்னொரு பைலட், இல்லை நான் செய்யவில்லை என்று பதிலளித்துள்ளார்.
இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து பாதுகாப்பு நிபுணர் கேப்டன் மோகன் ரங்கநாதன் ஒரு கருத்தைப் பகிர்ந்துள்ளார். அதில், சம்பந்தப்பட்ட விமானி வேண்டும் என்றே விமானத்தை விபத்துக்குள்ளாக்க முயன்றிருக்கலாம் என்று தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

என்டிடிவி சானலுக்கு அளித்துள்ள பேட்டியில், இதுதொடர்பாக மோகன் ரங்கநாதன் கூறியுள்ளதாவது: விமானிகளில் ஒருவர் வேண்டுமென்றே எரிபொருள் சப்ளையை கட் செய்தாரா அப்படிச் செய்தால் விபத்து ஏற்படும் என்று முழுமையாக அறிந்திருந்தும் இதைச் செய்தாரா என்று கேட்டால் கண்டிப்பாக என்பதே எனது பதிலாக இருக்கும்.
ட்ரீம்லைனர் விமானத்தின் இன்ஜின்களுக்கு எரிபொருளை தடுப்பது மேனுவலாகத்தான் செய்ய முடியும். தானாக அது நடக்காது. தானாகவோ அல்லது மின் தடையினாலோ இது நடக்க வாய்ப்பில்லை. கவனக்குறைவாக 'ஆஃப்' நிலைக்கு நகர்த்தும் சாத்தியம் இல்லை. 'ஆஃப்' நிலைக்கு நகர்த்துவது நிச்சயமாகத் திட்டமிட்ட செயலாகவே இருக்க முடியும் என்றார் அவர். இதன் மூலம் சம்பந்தப்பட்ட பைலட்டுகளில் ஒருவர் வேண்டும் என்றே இதைச் செய்திருக்க வேண்டும் என்பது மோகன் ரங்கநாத்தின் சந்தேகமாகும்.
ஏர் இந்தியா விமானம் 171, ஒரு போயிங் 787-8 ட்ரீம்லைனர், லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு அகமதாபாத்தின் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சரியாக இந்திய நேரப்படி பிற்பகல் 1:39 மணிக்கு புறப்பட்டது. விமானத்தில் 228 பயணிகளும் 14 பணியாளர்களும் இருந்தனர். முப்பத்தி இரண்டு வினாடிகளுக்குப் பிறகு, விமானம் இரண்டு இன்ஜின்களிலும் உந்து சக்தியை இழந்தது, வேகமாக உயரத்தை இழந்தது, மேலும் ஓடுபாதையின் முடிவிலிருந்து 1.2 கடல் மைல் தொலைவில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரி விடுதியில் மோதியது.
விமானத்தில் இருந்தவர்களில், 11A இருக்கையில் அமர்ந்திருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் குடிமகன் ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்தார். மற்ற அனைவருமே உயிரிழந்தார்கள். இதில் முன்னாள் குஜராத் முதல்வர் விஜய் ருபானியும் ஒருவர் ஆவார்.
இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதில் முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, இன்ஜின் 1 மற்றும் 2 ஐக் கட்டுப்படுத்தும் இரண்டு எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகளும் ஒரு வினாடிக்குள் "ரன்" என்பதிலிருந்து "கட்ஆஃப்" என்பதற்கு மாற்றப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக மோகன் ரங்கநாதன் மேலும் கூறுகையில், டேக்-ஆஃப் மற்றும் தரையிறங்கும் போது அனைத்து விமானிகளும் ஹெட்ஃபோன்களைப் பயன்படுத்துவது கட்டாயமாகும். காக்பிட் பகுதி மைக்ரோஃபோனின் அடிப்படையில் ஆடியோ CAM 1 (கேப்டன்) அல்லது CAM 2 (இணை விமானி) இலிருந்து வருகிறதா என்பதை காக்பிட் குரல் பதிவி தெளிவாகக் குறிக்கும். எனவே, 'ஒரு விமானி இதைச் சொன்னார், ஒரு விமானி அதைச் சொன்னார்' போன்ற தெளிவற்ற சொற்களைப் பயன்படுத்துவது மிகவும் மோசமான அறிக்கையாகும்" என்றும் அவர் மேலும் கூறினார்.
விமானியே விமானத்தை விபத்துக்குள்ளாவது என்பது மிகவும் அரிதான செயலாகவே இதற்கு முன்பு இருந்துள்ளது. 2015ம் ஆண்டு ஒரு விமானம் இப்படித்தான் விபத்துக்குள்ளானது. அந்த ஆண்டு, ஜெர்மன்விங்ஸ் விமானம் 9525ஐ செலுத்திய கோ பைலட், வேண்டுமென்றே விமானத்தை பிரெஞ்சு ஆல்ப்ஸ் மலையில் மோதினார். இதில் விமானத்தில் இருந்த 150 பேரும் பலியானார்கள். இதேபோல மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் MH370 விஷயத்தில், விமானி வேண்டுமென்றே விமானத்தைத் திசைதிருப்பிவிட்டு காணாமல் போயிருக்கலாம் என்று பல நிபுணர்கள் நம்புகின்றனர்.
                                                                            உலகக் கோப்பை கிரிக்கெட்... தொடர் நாயகி விருது வென்ற தீப்தி சர்மாவுக்கு DSP பதவி!
                                                                            10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு... அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!
                                                                            தங்கம் விலை நேற்று ஏறிய நிலையில் இன்று குறைந்தது... அதுவும் சவரனுக்கு ரூ.800 குறைவு!
                                                                            கோவை துயரம் மனிதத்தன்மையற்றது.. கண்டிக்க கடுஞ்சொல் எதுவும் போதாது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
                                                                            பேங்க் போக வேண்டிய வேலை இருக்கா.. தயவு செய்து 5ம் தேதி போகாதீங்க... இந்த மாநிலங்களில் லீவு!
                                                                            கோவையில் மாணவியிடம் அத்துமீறி அட்டூழியம் செய்த 3 குற்றவாளிகள்.. சுட்டுப் பிடித்த போலீஸ்
                                                                            12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் நவம்பர் 04, 2025... இன்று அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும் ராசிகள்
                                                                            மீனவர்களை விடுவிக்கக்கோரி மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
                                                                            SIR வேண்டாம் என்று திமுக உச்ச நீதிமன்றம் சென்றால், அதிமுக SIR வேண்டும் என செல்வோம்: ஜெயக்குமார்
{{comments.comment}}