மக்கள் நலனை முன்னிட்டு.. போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக் தற்காலிக வாபஸ்

Jan 10, 2024,06:43 PM IST

சென்னை: போக்குவரத்து தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக தமிழ்நாடு போக்குவரத்து ஊழியர் சங்கங்கள் அறிவித்துள்ளன. ஜனவரி 19ம் தேதி வரை போராட்டத்தை நிறுத்தி வைப்பதாகவும், நாளை முதல் பணிக்குத் திரும்புவதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.


தமிழகம் முழுவதும் நேற்று போக்குவரத்து ஊழியர் சங்கங்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை  துவங்கின. இருப்பினும் பெரும்பாலான பஸ்கள் இயக்கப்பட்டதால், பொதுமக்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. 


போக்குவரத்து துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். கருணை அடிப்படையில் விண்ணப்பித்து காத்திருக்கும் நபர்களுக்கு பணி வழங்க வேண்டும். ஓய்வு பெற்றவர்களுக்கு நிலுவையில் உள்ள அகவிலைப்படியை வழங்க வேண்டும் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் அறிவித்தன. 




இதையடுத்து போக்குவரத்து கழக தொழிற் சங்கங்கள், தொழிலாளர் நலத்துறை, போக்குவரத்து துறை அதிகாரிகள் இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில்  உடன்பாடு ஏற்படாததால் அண்ணா தொழிற்சங்கம், சிஐடியூ போன்ற போக்குவரத்து தொழிற் சங்க நிர்வாகிகள் போக்குவரத்து வேலை நிறுத்தத்தை தொடர போவதாக அறிவித்திருந்தனர்.  திமுகவின் தொமுச மற்றும் காங்கிரஸின் ஐஎன்டியூசி ஆகியவை இதில் பங்கேற்கப் போவதில்லை என்று அறிவித்தன.


இந்நிலையில் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல் பணிக்கு உடனடியாக வரவேண்டும் என்று போக்குவரத்து துறை உத்தரவு பிறப்பித்தது. பண்டிகை காலங்களில் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்வது பொதுமக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துவதாக அமையும் என்பதால், வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல் அனைத்து பணியாளர்களும் பணி விடுப்பு, மாற்று விடுப்பு, ஈட்டிய விடுப்பு மற்றும் எந்த வித விடுப்புகளையும் எடுக்காமல் பணிக்கு வரவேண்டும் என்று போக்குவரத்து துறை கேட்டுக் கொண்டது.


நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் ஸ்டிரைக் தொடங்கிய நிலையில்  பெரும்பாலான பணியாளர்கள் பணிக்கு வந்தனர். இதனால் பெரிய அளவில் போக்குவரத்து பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. இது குறித்து அமைச்சர் சிவசங்கர் கூறுகையில்,  போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் நடத்திய பேச்சு தோல்வி அல்ல. அது இருதரப்பு பேசி சுமூக முடிவிற்கு வர வேண்டும். 


தொழிற் சங்கங்கள் 6 கோரிக்கைகளை தெரிவித்து இருந்தனர். அதில் நான்கு கோரிக்கைகள்  நிறைவேற்றப்பட்டுள்ளது. பிற கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதற்கு அவகாசம் கொடுக்க வேண்டும்.  தற்போது அரசின் நிதி நிலையில், இதைச் செய்வது சிரமம் என்பதால், இப்போது செய்ய இயலாது என்பதை தெரிவித்தோம். அதை புரிந்து கொள்ளாமல் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். 


போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கைகளை ஏற்க முடியாது என்று கூறவில்லை. நிதி நிலைமை சீரான பிறகு நிறைவேற்றி தரப்படும் என்றுதான் கூறியிருக்கிறோம் என்று  கூறியிருந்தார்.


மறுபக்கம், பொங்கல் பண்டிகை வர உள்ளதால், சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு செய்த நிலையில், பொது மக்கள் சிரமமின்றி போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும் என்பதால்,தற்காலிக பணியாளர்களுக்கு அரசு அழைப்பு விடுத்தது. அசல் ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டையுடன் மாவட்ட போக்குவரத்து கழக அதிகாரிகளை அணுகலாம் என கூறி இருந்தது.


இதற்கிடையில் போக்குவரத்து ஊழியர் சங்கங்கள் அறிவித்துள்ள ஸ்டிரைக்கை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டிலும் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை இன்று விசாரித்த சென்னை ஐகோர்ட், பொங்கல் சமயத்தில் இந்த ஸ்டிரைக் தேவையா? மக்கள் சிரமப்பட மாட்டார்களா? என்பது உள்ளிட்ட பல கேள்விகளை எழுப்பி இருந்தது. 


இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தாங்கள் நடத்தி வந்த வேலைநிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. ஜனவரி 19ம் தேதி நடைபெறவுள்ள முத்தரப்பு பேச்சுவார்த்தை வரை போராட்டத்தை நிறுத்தி வைப்பதாகவும், நாளை முதல் தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்புவார்கள் என்றும் அண்ணா தொழிற்சங்கம், சிஐடியூ ஆகிய தொழிற்சங்கங்கள் சார்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

Sunday Special Veg dish.. மீன் குழம்புக்கு டஃப் தரும் கத்திரிக்காய் பலாக்கொட்டை புளிக்குழம்பு!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

தனுஷின் இட்லி கடை திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்