சென்னை: பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள, மிகக் கொடூரமான திருப்புவனம் அஜீத் குமார் காவல் நிலைய மரண வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். யாரும் எதிர்பாராத வகையில் இந்த முடிவை முதல்வர் எடுத்துள்ளார். இத்தோடு நில்லாமல் மேலும் சில உறுதியான நடவடிக்கைகளை முதல்வர் எடுத்தால் மிகவும் சிறப்பாக இருக்கும்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலைய காவலர்களால், அஜீத் குமார் என்ற இளைஞர் கொடூரமாக தாக்கப்பட்டு மரணமுற்ற சம்பவம் அனைவரையும் அதிர வைத்துள்ளது. மனிதாபிமானமே இல்லாமல் நடந்துள்ள இந்த கொடும் செயலுக்கு அனைவரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
உச்சகட்டமாக நேற்று மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் மிகக் கடுமையான முறையில் தனது கோபத்தை வெளிப்படுத்தினார். காவல்துறை தரப்பில் செய்யப்பட்ட அநீதிகளை அவர் பட்டியலிட்டு கடுமையாக சாடியிருந்தார். நீதிபதியின் இந்தக் கோபம் மக்களின் தார்மீக எண்ணங்களைப் பிரதிபலிப்பதாக இருந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கை சிபிஐ வசம் முதல்வர் மு.க.ஸ்டாலின் மாற்றி உத்தரவிட்டுள்ளார். இது பலரின் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுதொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கை:
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில், கடந்த 28-6-2025 அன்று வழக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட திரு.அஜித்குமார் என்பவர், திருப்புவனம் காவல் நிலையத்தில் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். விசாரணையின் போது காவலர்கள் நடத்திய தாக்குதல்தான் அவரது மரணத்துக்குக் காரணம் என்பதை அறிந்ததும் நான் மிகவும் வேதனையடைந்தேன்.
இது யாராலும் நியாயப்படுத்தப்பட முடியாத, காரணம் சொல்லித் தப்பிக்க முடியாத செயல். இந்தச் சம்பவம் தொடர்பாகக் குற்றம்சாட்டப்பட்ட 6 காவலர்கள் உடனடியாகச் சம்பவம் நடந்த அன்றே பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இத்தகைய வழக்குகளில் பின்பற்றப்பட வேண்டிய சட்ட நடைமுறைகளின்படி, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது.
நேற்றைய தினம் , 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, வழக்கு விசாரணை சிபிசிஐடி பிரிவுக்கும் மாற்றப்பட்டது.
இன்று சம்பந்தப்பட்ட மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். துணைக் கண்காணிப்பளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இப்படி சட்டபூர்வமான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுத்துக்கப்பட்டு வருகிறது.
துயர மரணத்தை அடைந்துள்ள அஜித்குமார் அவர்களின் குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டு நான் பேசினேன். நடைபெற்ற துயரச் சம்பவத்திற்கு எனது வருத்தத்தை அவர்களிடம் தெரிவித்தேன்.
நியாயமான, ஒளிவுமறைவற்ற, எவ்வித பாரபட்சமுமற்ற விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும், இந்தச் சம்பவத்திற்குக் காரணமானவர்கள் மீது, கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, திரு.அஜித்குமாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு நியாயம் கிடைத்திட வழிவகை செய்யப்படும் என்றும் உறுதியளித்துள்ளேன்.
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, இவ்வழக்கில் சிபிசிஐடி தனது விசாரணையைத் தொடரலாம் எனவும் தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்தச் சம்பவத்தில் காவல் துறையைச் சேர்ந்த ஐவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கின் விசாரணை குறித்து, எந்தவிதமான ஐயப்பாடும் எழுப்பப்படக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு, இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றிடுமாறு நான் உத்தரவிட்டுள்ளேன். சி.பி.ஐ. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை தமிழ்நாடு அரசு வழங்கும்.
காவல்துறையினர் தங்களது விசாரணையின்போது மனித உரிமையைக் காக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்பதை நான் பலமுறை வலியுறுத்தி இருக்கிறேன். இதுபோன்ற மீறல் சம்பவங்களை நான் எப்போதும் ஏற்றுக்கொள்வது இல்லை.
திருப்புவனத்தில் சில காவலர்கள் செய்த செயல், மன்னிக்க முடியாதது. இனி இதுபோன்ற செயல் எக்காலத்திலும் எங்கும் யாராலும் நடந்துவிடக் கூடாது என்பதை எச்சரிக்கையாகவே சொல்ல விரும்புகிறேன். தங்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைத்திடும் என நம்பி காவல்துறையை நாடி வரும் பொதுமக்களின் நம்பிக்கையைக் காப்பாற்றிடும் வகையில் காவல்துறை எப்போதும் செயல்பட வேண்டும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.
இன்னும் கடுமையாக செயல்பட வேண்டும்
முதல்வர் மு.க.ஸ்டாலின் எப்போதுமே நிதானமாக, பொறுமையாக, பக்குவமாக, முதிர்ச்சியுடன் செயல்படவேண்டும் என்று நினைப்பவர். இதுவே பல தருணங்களில் அவருக்கு தர்மசங்கடத்தைக் கொண்டு வந்து விடுகிறது, சிக்கலில் போய் முடிந்து விடுகிறது. எனவே கடந்த காலங்களில் குறிப்பாக மறைந்த கலைஞர் கருணாநிதி காலத்தில் இருந்தது போல, ஜெயலலிதா செயல்பட்டது போல இரும்புக் கரம் கொண்டு செயல்பட முதல்வர் முன்வர வேண்டும். அது ஒன்றுதான் அவருக்கும், அவரது ஆட்சிக்கும் சேர்த்து வரும் களங்கங்களைப் போக்க உதவும். இல்லாவிட்டால் எல்லாமே கை மீறி போய் விடும்.
எப்போதுமே தவறு நடந்து விடாமல் பார்ப்பதுதான் சிறந்த நிர்வாகமாக இருக்க முடியும். நடந்த பின்னர் சரி செய்வது, பரிகாரம் பண்ணுவது என்பதெல்லாம் சிறந்த நிர்வாகமாக இருக்க முடியாது. சாத்தான்குளம் சம்பவத்தையே மிஞ்சி விட்டது இந்த திருப்புவனம் விவகாரம். அந்த அளவுக்கு கொடூரமான தாக்குதலுக்குள்ளாகியுள்ளார் அஜீத் குமார். சாத்தான்குளம் சம்பவத்தை திமுக எந்த அளவுக்கு வேகமாக கையாண்டது என்பது யாரும் மறந்து விடவில்லை. அப்படி இருக்கும்போது அதை விட மோசமான சம்பவம் திமுக ஆட்சியில் நடந்துள்ளது என்பது பெரும் ஏமாற்றத்தையே தருகிறது.
திருப்புவனம் சம்பவத்தை பாடமாக எடுத்துக் கொண்டு தமிழ்நாடு முழுவதும் இனி இதுபோல ஒரு அத்துமீறல் நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும், எப்படிப்பட்ட கடுமையான நடவடிக்கைகள் தேவைப்படுமோ அதை முதல்வர் சற்றும் தயங்காமல் எடுக்க வேண்டும். மேலும் தயவு தாட்சன்யம் பார்க்காமல் தவறு செய்வோர் யாராக இருந்தாலும் இரும்புக் கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்தவிதமான அழுத்தத்திற்கும் பணியாமல், யாருடைய முகத்தையும் பார்க்காமல் தவறு செய்தால் இதுதான் கதி என்ற அச்சத்தை அனைவரின் இதயத்திலும் அழுத்தமாக பதிய வைக்க வேண்டும்.
நேர்மையான அதிகாரிகளை முக்கியப் பதவிகளில் அமர்த்த வேண்டும். அவர்களுக்கு முழு சுதந்திரம் கொடுக்க வேண்டும். அவர்களுக்கு எந்தவிதமான இடையூறும் எந்த ரூபத்திலும் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தவறு செய்யும் அதிகாரிகளை தூக்கி அடிக்க வேண்டும். ஒட்டுமொத்தமாக நிர்வாக ரீதியில் பல சீர்திருத்த நடவடிக்கைளை முதல்வர் எடுத்தாக வேண்டும். அப்போதுதான் அவருக்கு ஏற்பட்டு வரும் கெட்ட பெயர்களை சரி செய்ய முடியும். இல்லாவிட்டால் அவப் பெயர்கள்தான் மிஞ்சும்.
கட்சியினராக இருந்தாலும் கூட, அதிகாரிகளாக இருந்தாலும் சரி, மக்களுக்கு சேவை செய்யும் பணியில் எந்தவிதமான சமரசத்தையும் ஏற்படுத்தக் கூடாது என்பதில் முதல்வர் கவனமாக இருந்தால்தான் அவரது ஆட்சி மீது அடுக்கடுக்காக படிந்து வரும் குற்றச்சாட்டுகளுக்கு நிவாரணம் காண முடியும். இதை முதல்வர் உடனடியாக செய்ய வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதை செய்யாமல் போனால் இந்த ஆட்சி செய்து வரும் பல நல்ல விஷயங்களை அது மூடி மறைத்து விட்டு, கெட்ட விஷயங்கள் மட்டுமே அதன் அடையாளமாக மாறிப் போகும் துரதிர்ஷ்டத்தை சந்திக்க வேண்டி வரும்.
சிபிஐ வசம் திருப்புவனம் அஜீத்குமார் வழக்கு.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கையோடு இதையும் செய்ய வேண்டும்!
இளைஞர் அஜித்குமார் மீது புகார் அளித்த டாக்டர் மீது 2011ம் ஆண்டு மேசாடி புகார் பதிவு!
திமுக அரசின் மீது படிந்துள்ள இரத்தக் கறை ஒருபோதும் விலகாது: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
கல்யாணத்திற்குப் பின்பு எல்லாவற்றையும் விட்டு விட சொன்னார் ஷமி.. மனைவி ஹசின் ஜஹான்
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
நடுத்தர மற்றும் குறைந்த வருவாய் பிரிவினருக்கு ஜி.எஸ்.டி சலுகை.. மத்திய அரசு பரிசீலனை
டேஸ்ட்டியான உணவுகள்.. உலக அளவில் இந்தியாவுக்கு என்ன ரேங்க் தெரியுமா.. அடடே சூப்பரப்பு!
120 கிலோ எடையிலிருந்து ஸ்லிம் பாடிக்கு மாறிய விஜய் சேதுபதி மகன்.. காரணம் இதுதானாம்!
அகமதாபாத் விமான விபத்து.. 2 என்ஜின்களும் ஒரே நேரத்தில்.. இதுதான் விமானம் விபத்துக்குள்ளாக காரணமா?
{{comments.comment}}