என் எல்லை எனக்குத் தெரியும்!

Nov 21, 2026,01:55 PM IST

- த. ரஜிதா


யாரோ வகுத்து கொடுத்த எல்லைகள். 

எனக்காய் நானே 

ஏற்று கொண்ட தொல்லைகள். 

அடிக்கடி கிடைக்கும் வலிகள்,

அவ்வப்போது கிடைக்கும் மலர்கள்,

எப்போதாவது கிடைக்கும் சிறகுகள். 

இத்தனையும் இருக்க, 

இறுக பற்றும் கவலைகள்.

இன்னும் கொஞ்சம்

இடம் இருந்தால் 

இமைகளின் முடி 

நடுவிலும் அடுக்கப்படும் 

வேலைகள்.


உள்ளே இருக்கும் ஒற்றை தீப்பொறி 

உதிரத்தை சுழற்றி 

ஊடுருவி கொண்டே 

செல்கிறது.

வெளியே அதை 

நீரூற்றி அணைக்க 

ஒரு சொல் போதுமானதாய் 

இருக்கிறது.




வெம்மையும், தண்மையும் 

அடிக்கடி சந்திப்பதால் 

வெடிப்புக்களும்  காயங்களும் மட்டுமே 

மிச்சம்.

சந்தேகங்களும், சமாதானங்களும் 

மூளைச் சலவை செய்ய சரிந்துவிடுவோமோ 

என பதறும் நெஞ்சம்.


மெல்ல மெல்ல உயரும் போது, 

தட்ட தட்ட பார்க்கும் 

உலகம்.

குட்ட குட்ட குனிய 

நானொன்றும் - மரச் 

சட்டத்தில் அடிக்கும் 

ஆணியில்லை.

வெட்ட வெட்ட வளரும் 

காட்டரசு மரம்.

வீழ்வதில்லை.


நான் கீழே விழுவேன் ,

என் கால்கள் 

சளைக்கும் , 

வலிகள் என்னை இழுத்துப் பிடிக்கும்.

பயங்கள் என்னை முதுகில் அடிக்கும் .

வெளியே துரத்தும்.

சற்று அமர்ந்து 

இளைப்பாறுவேன். 

சறுக்கமாட்டேன்,

மீண்டும் அழுவேன்....

மீண்டு எழுவேன்.


கல்லாய் நீ?

என்று கேட்டவர்களுக்கு 

உரக்கச் சொல்வேன்.

ஆம்.

என் இதயம் கல் தான்.

உங்களால் உடைக்க முடியா வைரக்கல்.


என் எல்லை எனக்குத் தெரியும்.

எதிர்த்து நிற்போருக்கு என்ன புரியும்?

தடைகளைத் தகர்க்கப் 

பழகவில்லை.

அதைத் தாண்டி பறக்க வளர்க்கப்பட்டிருக்கிறேன்.

 

என் பலவீனம் எனக்கு தெரியும்.

அதை அறிந்ததால் அதுவே என் பலமாய் அமையும்.

அண்ணாந்து பார்க்கும் 

நாள் ஒன்று வரும்.

அன்று தெரியும்,

இது ராஜாளி கழுகு 

என்று.


என் எல்லை 

எனக்குத் தெரியும்.


(த.ரஜிதா, பட்டதாரி ஆசிரியர், ஆங்கிலம், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, படப்பை)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மக்களே உஷார்...வெங்காயத்தை தொடர்ந்து தக்காளி விலையும் கிடுகிடுவென உயர்கிறது

news

என் எல்லை எனக்குத் தெரியும்!

news

எருக்கஞ்செடி.. ஆன்மீகம் மட்டுமல்ல.. பாரம்பரிய மருத்துவத்திலும் முக்கியமானது!

news

கயிலை அறக்கட்டளை - சைவ சமயச் சொற்பொழிவாளர் பயிற்சித் திட்ட பட்டமளிப்பு விழா

news

தங்கத்தில் கலப்படம் செய்தால் கடும் நடவடிக்கை: இந்திய தர நிர்ணய ஆணையம் (BIS) அதிரடி எச்சரிக்கை!

news

தங்கம் விலை வீழ்ச்சி... வாங்குவோருக்கு மகிழ்ச்சி; அடகு வைப்போருக்கு அதிர்ச்சி!

news

நீயும் நானும்!

news

சபரிமலை பக்தர்களுக்கு ரூ.2 லட்சம் ஆயுள் காப்பீடு: எல்.ஐ.சி உடன் தேவஸ்வம் போர்டு ஒப்பந்தம்!

news

ஸ்ரீராமரே வழிபட்ட நவக்கிரக கோவில்.. சென்னை to ராமேஸ்வரம் ஒரு ஆன்மீக பயணம் (பகுதி-6)

அதிகம் பார்க்கும் செய்திகள்