டெல்லியில் கரப்பான ஜனதா கட்சி போராட்டம்: மெட்ரோ மற்றும் ரயில் சேவைகள் முடக்கம்

Oct 09, 2026,03:28 PM IST

புதுடெல்லி : தலைநகர் டெல்லியில் நாளை நடைபெறவுள்ள பிரம்மாண்ட போராட்டத்தின் காரணமாக, மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ (CJP) அமைப்பினர் அறிவித்துள்ள இந்த போராட்டத்தினால், மெட்ரோ ரயில் சேவைகள் மற்றும் புறநகர்/தொலைதூர ரயில் சேவைகள் முடக்கப்பட்டுள்ளன.   


போராட்டத்திற்கான பின்னணி:

SIR திட்டத்திற்கு எதிராகவும், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும், கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (CJP) சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் நாளை மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.   


57 மெட்ரோ நிலையங்கள் மூடல்:




போராட்டக்காரர்கள் ஒன்று கூடுவதைத் தடுக்கும் பொருட்டும், அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையிலும் டெல்லியில் உள்ள 57 மெட்ரோ ரயில் நிலையங்கள் இன்று இரவு 9 மணி முதல் மூடப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் டெல்லியின் முக்கியப் பகுதிகளில் இரவு நேரத்தில் பயணிக்கும் பொதுமக்கள் மற்றும் ஐடி/இரவு நேர ஊழியர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாக நேரிடும்.   


ரயில்கள் ரத்து:

மெட்ரோ சேவை மட்டுமின்றி, டெல்லிக்கு செல்லக்கூடிய பல தொலைதூர மற்றும் விரைவு ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. நாளை நடைபெறவுள்ள போராட்டத்தை முன்னிட்டு, நாளை அதிகாலை 4 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை டெல்லி நோக்கிச் செல்லக்கூடிய அனைத்து ரயில் சேவைகளும் முற்றிலும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.   


பயணிகளுக்கு அறிவுறுத்தல்:

திடீரென அறிவிக்கப்பட்டுள்ள இந்த மெட்ரோ மூடல் மற்றும் ரயில் ரத்து நடவடிக்கைகளால், வெளியூர்களிலிருந்து டெல்லிக்கு வர திட்டமிட்டிருந்த பயணிகளும், உள்ளூர் மக்களும் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். எனவே, பொதுமக்கள் தங்களது பயணத் திட்டங்களை மாற்றியமைத்துக் கொள்ளுமாறும், தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஜந்தர் மந்தர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, தீவிர கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 


பொது மக்களுக்கு வேண்டுகோள்:

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நடத்தும் இந்த போராட்டத்தில் பொது மக்கள், மாணவர்கள், இளைஞர்கள் என யாரும் கலந்து கொள்ளக் கூடாது என போலீசார் சார்பில் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்