கூட்டணிக் கட்சியினருக்கு மனத்தாங்கல் ஏற்பட்டிருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன்.. மு.க.ஸ்டாலின்

May 14, 2026,12:37 PM IST

சென்னை: மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தலைவர் என்ற முறையில் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள், தொகுதி ஒதுக்கீடுகள், ஒப்பந்தங்கள், பரப்புரைப் பணிகள் அனைத்திற்கும் பொறுப்பினை ஏற்று, செயல்பட்டவன் என்ற முறையில், தேர்தல் அரசியல் களத்திற்கேயுரிய தன்மையினால் எந்தவொரு கட்சித் தலைவருக்கோ, அதன் நிர்வாகிகளுக்கோ சிறிதளவு மனத்தாங்கல் ஏற்பட்டிருந்தாலும் அதற்கும் பொறுப்பானவனாக என் வருத்தத்தையும் பதிவு செய்து, தங்கள் அனைவரின் உழைப்புக்கும் ஒத்துழைப்புக்கும் மீண்டும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை:


எந்த நிலையிலும் மக்கள் நலனுக்காகவும், மாநிலத்தின் உரிமைக்காகவும், தன் பயணத்தைத் தொய்வின்றித் தொடரும் அரசியல் இயக்கமான திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் அமைந்த மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் 2019-ஆம் ஆண்டிலிருந்து 2 நாடாளுமன்றத் தேர்தல்கள், 2 சட்டமன்றத் தேர்தல்கள், ஊரக உள்ளாட்சித் தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், இடைத்தேர்தல்கள் எனத்  தொடர்ந்து பங்கெடுத்து வரும் தோழமைக் கட்சியின் மதிப்புக்குரிய தலைவர்கள் – நிர்வாகிகள் - தொண்டர்கள் அனைவருக்கும் தி.மு.கவின் தலைவர் என்ற முறையில் என் நன்றியினை உரித்தாக்குகிறேன். 


2026 சட்டமன்றத் தேர்தல் களத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் மேலும் புதிய கட்சிகள் இணைந்து, மாநில நலனுக்கான குரலை ஓங்கி ஒலித்ததையும் நன்றியுடன் நினைவுகூர்கிறேன். தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பங்கெடுத்துத் தேர்தலில் போட்டியிட்ட கட்சிகள், போட்டியிட முடியாமல் போன - போட்டியிட விருப்பமில்லாத -தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்ட கட்சிகள் - இயக்கங்கள் ஆகியவற்றின் தலைவர்கள் அனைவரும் என் மீது வைத்துள்ள நம்பிக்கையையும், தேர்தல் களத்தில் வழங்கிய ஒத்துழைப்பையும் என்றும் மறக்க மாட்டேன். 




இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் திரு. கு. செல்வப்பெருந்தகை அவர்கள், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் அண்ணன் திரு. வைகோ அவர்கள், தே.மு.தி.க. பொதுச்செயலாளர் சகோதரி திருமதி. பிரேமலதா விஜயகாந்த் எம்.எல்.ஏ. அவர்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் சகோதரர் திரு. தொல். திருமாவளவன் எம்.பி. அவர்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் திரு. மு. வீரபாண்டியன் அவர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் திரு. பெ. சண்முகம் அவர்கள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் திரு. கே.எம். காதர் மொகிதீன் அவர்கள், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் திரு. எம்.எச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ அவர்கள், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சித் தலைவர் திரு. ஈ.ஆர். ஈஸ்வரன் அவர்கள், மனிதநேய ஜனநாயகக் கட்சித் தலைவர் திரு. தமீமுன் அன்சாரி எம்.எல்.ஏ அவர்கள்.


முக்குலத்தோர் புலிப்படை நிறுவனத் தலைவர் திரு. கருணாஸ் அவர்கள், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தலைவர் திரு. வி.எம்.எஸ். முகமது முபாரக் அவர்கள், தமிழ்த்தேசம் கட்சி நிறுவனத் தலைவர் திரு. கே.கே. செல்வகுமார் அவர்கள், கிறித்துவ நல்லெண்ண இயக்கத் தலைவர் திரு. இனிகோ இருதயராஜ் அவர்கள் ஆகிய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் தேர்தல் களத்தில் போட்டியிட்ட கட்சிகளின் தலைவர்களுக்கு எனது நன்றியை உரித்தாக்குவதுடன், தேர்தல் களம் காணாத நிலையிலும் முழுமையான அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிய தலைவர்களையும் நினைத்துப் பார்க்கிறேன். 


93 வயதிலும் தமிழ்நாடு முழுவதும் பயணித்துப் பரப்புரை மேற்கொண்ட, நம் தாய்க்கழகமாம் திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் அய்யா திரு. கி. வீரமணி அவர்கள், போட்டியிடத் தொகுதிகள் தேவையில்லை; தி.மு.க. தலைமையிலான கூட்டணியின் வெற்றியே குறிக்கோள் என நேரில் தெரிவித்துப் பணியாற்றிய மக்கள் நீதி மய்யம் தலைவர் நண்பர் திரு. கமல்ஹாசன் எம்.பி. அவர்கள், தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சித் தலைவர் திரு. பொன். குமார் அவர்கள், சமத்துவ மக்கள் கழகம் தலைவர் திரு. எர்ணாவூர் நாராயணன் அவர்கள், மக்கள் விடுதலைக் கட்சித் தலைவர் திரு. முருகவேல் ராஜன் அவர்கள், ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் திரு. அதியமான் அவர்கள்.


புதிய திராவிட கழகம் நிறுவனத் தலைவர் திரு. கே.எஸ். ராஜ்குமார் அவர்கள், திராவிடத் தமிழர் கட்சி தலைவர் திரு. வெண்மணி அவர்கள், ஆதித்தமிழர் கட்சி தலைவர் திரு. கு. ஜக்கையன் அவர்கள், தமிழ்ப்புலிகள் கட்சித் தலைவர் திரு. நாகை திருவள்ளுவன் அவர்கள். தமிழ் மாநில தேசிய லீக் பொதுச்செயலாளர் திரு. திருப்பூர் அல்தாப் அவர்கள், அகில இந்திய வல்லரசு பார்வர்டு ப்ளாக் நிறுவனத் தலைவர் திரு. பி.என். அம்மாசி அவர்கள், திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செலயாளர் திரு. சுப. வீரபாண்டியன் அவர்கள், கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் திரு. உ. தனியரசு அவர்கள் ஆகியோருக்கும் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டுள்ளேன். 


மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தலைவர் என்ற முறையில் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள், தொகுதி ஒதுக்கீடுகள், ஒப்பந்தங்கள், பரப்புரைப் பணிகள் அனைத்திற்கும் பொறுப்பினை ஏற்று, செயல்பட்டவன் என்ற முறையில், தேர்தல் அரசியல் களத்திற்கேயுரிய தன்மையினால் எந்தவொரு கட்சித் தலைவருக்கோ, அதன் நிர்வாகிகளுக்கோ சிறிதளவு மனத்தாங்கல் ஏற்பட்டிருந்தாலும் அதற்கும் பொறுப்பானவனாக என் வருத்தத்தையும் பதிவு செய்து, தங்கள் அனைவரின் உழைப்புக்கும் ஒத்துழைப்புக்கும் மீண்டும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 


தமிழ்நாட்டை முன்னேற்றப்பாதையில் தொடர்ந்து கொண்டு செல்லவும், மாநில உரிமைகள் பறிபோகாமல் தடுக்கவும் ஒருங்கிணைந்து செயல்பட்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி முழுமையான வெற்றியைப் பெற முடியாமல் போனாலும், வலிமை குன்றாத வகையில் 1 கோடியே 54 இலட்சத்து 82 ஆயிரத்து 782 வாக்குகளைப் பெற்று, 72 தொகுதிகளில் வெற்றி பெற்றிருப்பது, தமிழ்நாட்டு மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையையே வெளிப்படுத்துகிறது. 


தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, பெரும்பாலான தோழமைக் கட்சிகள் கொள்கைத் தோழமையுணர்வு மாறாமல், தி.மு.க.வுடன் தொடர்ந்து பயணிப்பதை வெளிப்படையாகத் தெரிவித்திருப்பது கழகத்தின் மீது தோழமைக் கட்சித் தலைவர்கள் வைத்துள்ள உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகிறது. அதற்கேற்ப, நாம் கொள்கை உறுதிமிக்க அரசியல் கட்சிகளாக ஒன்றுபட்டு நின்று, மக்கள் நலனுக்காகவும், மாநில உரிமைக்காகவும் நம் பயணத்தை எப்போதும் போல தொடர்ந்து மேற்கொள்வோம். தமிழ்நாட்டைக் காக்கும் வலிமையும் அதற்கான போர்க்குணமும் நமக்கே உரியதாகும் என்று அவர் கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கேரளத்தின் புதிய முதலமைச்சராகிறார் வி.டி. சதீசன்.. காங்கிரஸ் அறிவிப்பு

news

ரூ. 1000 மகளிர் உரிமைத் தொகை நாளை வருமா.. முதல்வர் விஜய் விளக்கம்

news

விஷ்ணுபதி புண்ணிய காலம்.. மகா விஷ்ணுவை எப்போது வழிபடலாம்?

news

கூட்டணிக் கட்சியினருக்கு மனத்தாங்கல் ஏற்பட்டிருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன்.. மு.க.ஸ்டாலின்

news

Tasmac: 21 வயதுக்கு உட்பட்டோருக்கு மது விற்பனை செய்யக் கூடாது.. ஸ்ட்ரிக்ட் உத்தரவு

news

3 திருமணங்கள்.. எல்லாமே தோல்வி.. வாழ்க்கை முடிந்துவிடவில்லை.. மீரா வாசுதேவனின் புதிய தொடக்கம்

news

மலரே !

news

எட்டி எட்டிப் பார்த்தான்.. எட்ட நின்று பார்த்தான்.. புடுச்சுப்போச்சு!

news

கொளத்தூரில் காட்டிய வீரியத்தப் பார்த்துமா இப்படிப் பேசுகிறீர்கள்.. திமுகவுக்கு முதல்வர் விஜய் பதிலடி

அதிகம் பார்க்கும் செய்திகள்