சென்னை: அனைத்து நிலை மருத்துவமனைகளிலும் மருத்துவர்களுக்கு ஏற்கனவே பற்றாக்குறை இருக்கும் நிலையில் முக்கிய துறைகளின் மருத்துவர்களை இடமாற்றம் செய்து நிலைமையை மேலும் மோசமாக்கும் திமுக அரசின் செயல் கண்டிக்கத்தக்கது என்று பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தள பதவில், தமிழ்நாட்டில் சில ஆண்டுகளுக்கு முன் புதிதாக தொடங்கப்பட்ட 11 மருத்துவக் கல்லூரிகள் உள்ளிட்ட மருத்துவக் கல்லூரிகளில் பணியாற்றும் 400 இளநிலை உறைவிட மருத்துவர்களை இடமாற்றம் செய்து பிற மருத்துவமனைகளில் பணி நிரவல் முறையில் நியமிக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்திருக்கிறது. அனைத்து நிலை மருத்துவமனைகளிலும் மருத்துவர்களுக்கு ஏற்கனவே பற்றாக்குறை இருக்கும் நிலையில் முக்கிய துறைகளின் மருத்துவர்களை இடமாற்றம் செய்து நிலைமையை மேலும் மோசமாக்கும் திமுக அரசின் செயல் கண்டிக்கத்தக்கது.
ஆட்சிக்கு வந்த நாளில் இருந்தே, ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை வாயிலாக கடன் வாங்கி மருத்துவமனைகளை கட்டியெழுப்பும் திமுக அரசு, அவற்றுக்குத் தேவையான மருத்துவர் பணியிடங்களை உருவாக்காதது தான் அனைத்து சிக்கல்களுக்கும் காரணம். புதிய மருத்துவமனைகளுக்கு மருத்துவர்களை நியமிக்காத திமுக அரசு, ஏற்கனவே உள்ள மருத்துவமனைகளில் இருந்து மருத்துவர்களை அயல் பணி முறையில் அனுப்பி நிலைமையை சமாளித்து வந்தது. ஆனால், பல மருத்துவமனைகளில் இன்னும் போதிய மருத்துவர்கள் இல்லாத நிலையில் தான் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இருந்து 400 இளநிலை உறைவிட மருத்துவர்களை பிற மருத்துவமனைகளில் மறு பணியமர்த்த திமுக அரசு திட்டம் வகுத்துள்ளது.

பணி நிரவல் முறையில் மறு நியமனம் செய்யப்படவுள்ள 400 இளநிலை உறைவிட மருத்துவர்களும் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை உள்ளிட்ட துறைகளில் பணியாற்றி வருபவர்கள். அவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டால் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கு பற்றாக்குறை ஏற்படும்; அதனால் ஏழை, நடுத்தர மக்களுக்கு மருத்துவமனைகளில் கிடைக்கும் மருத்துவ சேவை பாதிக்கப்படும்.
இளநிலை உறைவிட மருத்துவர்கள் பணியிட மாற்றம் செய்யப்படுவதற்கு தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகளை தமிழக அரசு காரணம் காட்டுகிறது. இது மிகவும் அபத்தமானது ஆகும். இது தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவர்களுக்கு எந்த வகையிலும் பொருந்தாது. தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகளின்படி வழங்கப்பட வேண்டிய உள் நோயாளிகள் சேவை, புறநோயாளிகள் சேவை, அறுவை சிகிச்சை, மகப்பேறுகள் போன்றவை தமிழக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பல மடங்கு அதிகமாக வழங்கப்படுகிறது. இத்தகைய சேவைகளை தொடர இருக்கும் மருத்துவர்களே போதாது எனும் நிலையில், ஏற்கனவே குறைவாக உள்ள மருத்துவர்களின் எண்ணிக்கையை மேலும் குறைப்பதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது
அதுமட்டுமின்றி, குடும்ப நல அறுவை சிகிச்சை முகாம்கள், மாற்றுத் திறனாளி முகாம்கள், முக்கியத் தலைவர்களின் பயணத்தில் மருத்துவப்பணி, மருத்துவ வாரியம், நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்கள், நீதிமன்றப் பணிகள் போன்றவை தேசிய மருத்துவ ஆணையத்தின் எந்த விதியின் கீழும் வராது. பணி வரம்பைத் தாண்டிய இந்தப் பணிகளை செய்ய முடியாது என்று அரசு மருத்துவர்கள் ஏற்கனவே போர்க்கொடி உயர்த்தியிருக்கும் நிலையில், தேசிய மருத்துவ ஆணைய விதிகளின்படி மருத்துவர்கள் மறுநியமனம் செய்யப்பட்டால், நாங்களும் விதிகளின்படி மட்டுமே பணி செய்வோம் என்ற நிலைப்பாட்டை மேற்கொள்ளக்கூடும். அத்தகைய நிலைப்பாட்டை அவர்கள் எடுத்தால் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் வழங்கப்படும் சேவைகளின் தரம் சீரழிந்து விடும்.
உண்மையில், நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள் விகிதத்தின்படி தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் குறைந்தது 24 ஆயிரம் மருத்துவர்கள் பணியாற்ற வேண்டும். ஆனால், அரசு மருத்துவமனைகளில் ஒப்புதல் அளிக்கப்பட்ட பணியிடங்களின் எண்ணிக்கையே வெறும் 18 ஆயிரம் மட்டும் தான். அதிலும் கூட மூன்றில் ஒரு பங்கு மருத்துவர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அதனால், தமிழ்நாட்டின் தேவையில் பாதியளவு, அதாவது 12,000 மருத்துவர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த சூழலில் மருத்துவக் கல்லூரிகளில் இருக்கும் இளநிலை உறைவிட மருத்துவர்களை ஆள்குறைப்பு செய்வதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
தமிழக மக்களுக்கு தரமான மருத்துவம் வழங்க வேண்டும் என்ற எண்ணம் திமுக அரசுக்கு இருந்திருந்தால், ஏற்கனவே இருக்கும் மருத்துவமனைகளிலும், புதிதாக தொடங்கப்பட்ட மருத்துவமனைகளிலும் தேவையான மருத்துவர் பணியிடங்களை உருவாக்கியிருக்க வேண்டும். ஆனால், அதை திமுக அரசு செய்யவில்லை. திமுக ஆட்சிக்காலத்தில்
ஒரே ஒரு செவிலியர் கூட நிரந்தர அடிப்படையில் நியமிக்கப்படவில்லை. ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட பிறகும் ஒரே ஒரு அரசு மருத்துவக் கல்லூரி கூட புதிதாகத் தொடங்கப்படவில்லை. அவ்வளவு ஏன்?... ஏற்கனவே உள்ள கல்லூரிகளில் ஒரே ஒரு எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கை இடங்கள் கூட கூடுதலாக ஏற்படுத்தப்படவில்லை. மருத்துவத் துறையை மேம்படுத்த எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசு, அதன் மோசமான செயல்பாடுகளால் உயிர்காக்கும் மருத்துவத் துறையை கொஞ்சம் கொஞ்சமாக சாகடித்துக் கொண்டிருக்கிறது. இது தான் திமுக அரசின் சாதனையாகும்.
இளநிலை உறைவிட மருத்துவர்களை ஆள்குறைப்பு செய்யும் முடிவை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கட்டப்பட்ட புதிய மருத்துவமனைகளுக்குத் தேவையான மருத்துவர் பணியிடங்களை உடனடியாக உருவாக்கி அந்த பணியிடங்களில் தகுதியான மருத்துவர்களை நியமிக்க வேண்டும். மேலும் இதுவரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இல்லாத காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் தேசிய மருத்துவ ஆணையத்தின் சிறப்பு அனுமதி பெற்று புதிய மருத்துவக்கல்லூரிகளை உடனடியாக அமைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி கார் குண்டு வெடிப்பு... காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார் பிரதமர் மோடி!
தமிழக மீனவர்கள் கைது... மத்திய மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி
உயிர் காக்கும் மருத்துவதுறையை சாகடிப்பது தான் திமுகவின் சாதனை: டாக்டர் அன்புமணி ராமதாஸ்
தமிழகத்தில் நாளை 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
தேர்தல் குக்கரில் வெற்றி விசில் அடிக்குமா.. விஜய் ரசிகர்கள் + தொண்டர்கள் விரும்புவது இதைத்தானா?
அறிவுத் திருவிழா இல்லாமல்.. அவதூறுத் திருவிழா: தவெக தலைவர் விஜய் கடும் விமர்சனம்!
கால்பந்து விளையாட்டிலிருந்து ஓய்வு பெறப் போகிறேன்.. அறிவித்தார் கிறிஸ்டியானோ ரொனால்டோ
தங்கம் விலை உயர்வு: 2026ல் உலகப் பொருளாதாரம் சரியுமா.. பாபா வாங்காவின் கணிப்பு என்ன?
2026ம் ஆண்டில் மொத்தம் 24 நாட்கள் அரசு விடுமுறை.. பிளான் பண்ணி Fun பண்ணிக்கோங்க!
{{comments.comment}}