பல்கலைக்கழகங்களில் ஆசிரியர்கள் நியமனத்தில் சமூக அநீதியை அனுமதிக்க முடியாது: டாக்டர் அன்புமணி ராமதாஸ்

May 31, 2025,12:08 PM IST

சென்னை: பல்கலைக்கழகங்களில் ஓய்வு பெற்ற பேராசிரியர்கள், தொழில்துறையினர் உள்ளிட்டோரை தற்காலிக அடிப்படையில் நியமிக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும். பல்கலைக்கழங்களில் ஆசிரியர்கள் நியமனத்தில் சமூக அநீதியை தொடர அனுமதிக்க முடியாது என்று டாக்டர்  அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், தமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்களில் இட 

ஒதுக்கீட்டிற்கு முடிவு கட்டுவதா? சமூகநீதியை படுகொலை செய்யும் திராவிட மாடல் அரசு


தமிழ்நாட்டில் உள்ள 22 பல்கலைக்கழகங்களில் 50%க்கும் கூடுதலான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கும் நிலையில், அவற்றில் 30% பணியிடங்களை  இட ஒதுக்கீடு இல்லாமல் தற்காலிக அடிப்படையில் நிரப்ப தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் கடும் அதிர்ச்சி அளிக்கின்றன. திராவிட மாடல் அரசின் இந்த நடவடிக்கை தமிழ்நாட்டில் சமூகநீதியை சவக்குழியில் போட்டு புதைப்பதற்கு ஒப்பானதாகும். இந்த நடவடிக்கை கடுமையாக கண்டிக்கத்தக்கது.


சென்னையில் கடந்த சில நாள்களுக்கு முன் நடைபெற்ற  பல்கலைக்கழக பதிவாளர்கள் கூட்டத்தில் , பல்கலைக்கழகங்களின் மொத்தப் பணியிடங்களில் 10% பணியிடங்கள் ஓய்வுபெற்ற பேராசிரியர்களையும், 10% பணியிடங்கள் தொழில்துறையினரையும், 10% பணியிடங்கள்  வெளிநாட்டு ஆசிரியர்களைக் கொண்டும் நிரப்பப்பட வேண்டும் என்றும் உயர்கல்வித்துறை  செயலாளர் சமயமூர்த்தி அறிவுறுத்தியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.  இது மிகவும் தவறான, பிற்போக்கான முடிவு ஆகும்.




பல்கலைக்கழக பேராசிரியர்களை நிரந்தரமாக நியமிக்காமல் ஓய்வு பெற்றவர்களையும்,  தொழில்துறையினரையும் நியமிக்கும் போது முனைவர் பட்டம் வரை படித்து, தகுதித்  தேர்வுகள் எழுதி தேர்ச்சி  பெற்றுள்ளவர்களின் வாய்ப்புகள் பறிக்கப்படும். பேராசிரியர்களை தற்காலிகமாக நியமிக்கும் போது அதில் இட ஒதுக்கீட்டு முறை கடைபிடிக்கப்படாது. இந்த  இரண்டுமே சமூகநீதிக்கு எதிரான செயல்கள் ஆகும். ஒருபுறம் சமூகநீதி என்று பேசிக் கொண்டு இன்னொருபுறம் சமூகநீதிக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவதன் மூலம் திராவிட மாடல் அரசின் முகத்திரை கிழிந்து விட்டது.


மத்திய அரசின் இணைச் செயலாளர், இயக்குனர் உள்ளிட்ட பணிகளுக்கு இந்திய ஆட்சிப் பணி அல்லாத, ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கும் வல்லுனர்களை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்த போது அதற்கு பாட்டாளி மக்கள் கட்சி கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தது. அதைத்  தொடர்ந்து திமுகவும் மத்திய அரசின் முடிவை எதிர்த்தது. ஒரு கட்டத்தின் மத்திய அரசு அதன் முடிவைக் கைவிட்டது. அப்போது மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதற்கான காரணம் அந்த நடைமுறையில் இட ஒதுக்கீடு பின்பற்றப்படாது என்பது தான்.


சில ஆண்டுகளுக்கு முன் மத்திய அரசின் முடிவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் என்ன காரணத்திற்காக எதிர்ப்பு தெரிவித்தாரோ, அதே தவறை இப்போது அவரே செய்கிறார். மத்திய அரசே எதிர்ப்புக்கு அஞ்சி கைவிட்ட சமூகநீதிக்கு எதிரான முடிவை, இப்போது சமூகநீதி பேசும்  மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு  திணிக்கிறது என்றால் அதன் இரட்டை வேடத்தின்  தீவிரத்தை புரிந்து கொள்ள முடியும்.


தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தான் அனைத்துத் துறைகளிலும் ஒப்பந்தப் பணியாளர்களை நியமிக்கும்  வழக்கம் தீவிரமடைந்திருக்கிறது. இப்போது பல்கலைக்கழகங்களின் ஆசிரியர்கள் நியமனத்திலும் சமூக அநீதி தொடர அனுமதிக்க முடியாது. எனவே, பல்கலைக்கழகங்களில் ஓய்வு பெற்ற பேராசிரியர்கள், தொழில்துறையினர் உள்ளிட்டோரை தற்காலிக அடிப்படையில் நியமிக்கும்  முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும். மாறாக,  பல்கலைக்கழகங்களில் காலியாக இருக்கும் ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்துப் பணியிடங்களையும் இட ஒதுக்கீட்டைக் கடைபிடித்து நிரந்தரமாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு... அதிகாலையில் பனிமூட்டமும் இருக்குமாம் - IMD

news

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியுடன் நயினார் நாகேந்திரன் திடீர் சந்திப்பு.. எதுக்காக?

news

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக் கொள்பவர்களுடன் கூட்டணி: தவெக கூட்டத்தில் தீர்மானம்

news

சூடுபிடிக்கும் சட்டசபை தேர்தல் பணிகள்.. டிசம்பர் 15 முதல் அஇஅதிமுக விருப்பமனு!

news

சுப்ரியா சாகு அவர்களுக்கு ஐ.நா. விருது.. தமிழ்நாடு பெருமை கொள்கிறது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

பாரதி இன்று இருந்திருந்தால், பிரதமருக்கு வாழ்த்துப் பாடல் பாடியிருப்பார் - தமிழிசை சௌந்தரராஜன்

news

சாதிவாரி கணக்கெடுப்பு போராட்டத்துக்கு வாங்க... பாமக நிர்வாகிகள் நேரில் சென்று தவெகவிற்கு அழைப்பு

news

98 அடி உயரத்துக்கு சுனாமி அலைகள் எழும்.. ஜப்பான் அரசு வெளியிட்ட எச்சரிக்கை.. பின்னணி என்ன?

news

தொடர் உயர்வில் தங்கம் விலை... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்... இன்றைய விலை நிலவரம் இதோ

அதிகம் பார்க்கும் செய்திகள்